Friday, July 16, 2010













அன்புடன் குழும நண்பர்களுக்கு!

ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று பதிவுகளாகவாவது எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் போன வருடத்தின் நண்பர்கள் தினத்தில் இந்த தொடரின் முதல் பதிவை தமிழ் பிரவாகம் உட்பட இரண்டொரு குழுமங்களில் வெளியிட்டேன். ஆனால் என்னால் தொடரை தொடர முடியவில்லை..!

பல நிகழ்வுகள்; சூழ்நிலைகள் என்று தடை கற்களாக வந்து இடை நிறுத்தப்பட்டாலும் உண்மையான காரணம் இந்த பதிவில் நான் எழுதவிருக்கும் எந்த ஒவ்வொரு மடலும் புனைவு அல்ல... இது நானும் எனது பள்ளிக் கால தோழியும் சம்மந்தப்பட்ட நட்பின் நினைவுகளை மீட்டெடுத்து பதிவுகளாக - கடிதங்களாக சேமிக்கப்பட்ட உண்மையான அஞ்சல் பெட்டகம் என்பதால் இது எந்தளவுக்கு இதை வாசிக்கப் போகும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்குமென்ற தயக்கமும், சந்தேகமும் தான் முதன்மையான காரணமாக இருந்தது தொடராமல் விட்டதற்கு.

அத்தோடு கடந்த 2005ம் ஆண்டிலிருந்து நான் எனது தோழிக்கு எழுதிக் கொண்டிருக்கும் அவள் இன்னமும் வாசிக்க வாய்ப்புக் கிடைக்காத கடிதங்கள் இவை. மூன்று பதிவேடுகளில் (Journal) எழுதி முடித்தவற்றை திரும்பவும் ஒவ்வொன்றாக தட்டச்சுவது போன்ற கடினம் ,நேரவிரயம் எப்படியிருக்குமென்று நான் சொல்லி விளக்க வேண்டியதில்லை, அத்துடன் ஏற்கனவே எழுதியதை அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி திரும்பவும் என்னால் தட்டச்ச முடியுமா என்பது அடுத்த சந்தேகம். ஏற்கனவே எழுதிய கடிதத்தை தட்டச்சும் போது இடையில் கட்டாயம் ஏதாவது திருத்தம் செய்ய மனமேவும். இன்னொரு உத்தியோ அல்லது அழகான உவமையோ சம்பவமோ நினைவுக்கு வந்தால் இடையில் புகுத்த துருத்தும் எண்ணத்தை என்னால் அவ்வளவு இலேசில் அலட்சியம் செய்ய முடியாது. அப்படி நான் அலட்சியம் செய்த வரலாறே இல்லை. அப்படி திருத்தம் செய்ய முற்படும் போது அந்த கணத்தில் என்ன மனநிலையில் எழுதினேனோ அதன் தாக்கம் இங்கு அழிபட்டுப் போய்விடுமோ என்ற குழப்பம் இன்னொரு காரணம் !

எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் என் தோழிக்கு நான் எழுதும் மடல்களை அந்தரங்கமாக வைத்திருக்க வேண்டுமா? அல்லது அம்பலத்தில் பிரசுரிக்கலாமா என்ற குழப்பம். முகவரி தெரிந்த நட்பின் இருப்பிடமாயிருந்தால் நான் நிச்சயம் இங்கே பதிவு செய்திருக்க மாட்டேன். ஆனால் இது கூட ஒரு வகையில் அவளை, அவளுடைய தற்காலிக முகவரியை தேடுவதற்கான பாதையாக இருக்கட்டுமேன் என்ற நப்பாசையில் தான் இணையத்தில் வலைப் பூவில் பிரசுரிக்கும் முடிவுக்கு வந்தேன். என்னுடைய வலைப் பூவில் பதிக்கும் போது என் குழுமங்களை விட்டுவிட முடியுமா?? (இப்படியாவது உங்களை எல்லாம் கஷ்டப்படுத்த வாய்ப்பு கிடைக்கட்டுமேன் எனக்கும்..) :))

எப்படியோ எல்லாவித குழப்பங்களையும், தயக்கங்களையும், சோம்பேறித்தனத்தையும் ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு. எனது தோழமைக்கு எழுதும் மடல்களை இங்கே பிரசுரிக்கப் போகிறேன்.. இந்தத் தடவையாவது தடங்கல் ஏதுமின்றி இந்த மடலெழுதும் தொடர் செயல் பட வேண்டுமென்ற உறுதியுடன்...தொடங்குகிறேன்.

நன்றி! வணக்கம்!!
அன்புடன்
சுவாதி