Thursday, January 31, 2013

இது.........என்னையும் கருத்து எழுத வைத்த விதியின் விஸ்வரூபம்!!




என் அன்புக்குரிய இணைய உறவுகளான பலருக்கு தெரியும் கமல் ரஜனி என்று இரண்டு நடிகர்களிடமும் , கடவுள் பெயரில் வியாபாரம், அரசியல், வன்முறை செய்பவர்களிடமும்  எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது என்பது.

  நான் என் கடவுளை விட இந்து மதம் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து தான் கடவுள் நம்பிக்கையையே விட்டேன்... இஸ்லாமிய அன்பர்கள் என்னை நம்ப வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை...ஈழத்தில் இருக்கும் போது வெறும் 6 வயதில் என்னை பார்த்தவர்கள் ஆண்டாள் மாதிரியும் மீரா மாதிரியும் தான் இந்த பிள்ளை வரப் போகுது என்று சொல்லுமளவுக்கு சைவப்பழமாக இருந்தவள்...என் பெரியம்மாவோடு சேர்ந்து விரதமிருப்பதும், கோவிலில் அடியழிப்பதுமாய் வளர்ந்தவள்....என்றைக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ, என்றைக்கு பம்பாயில் நெருல் என்ற இடத்தில் எங்கள் கண் முன்னால் இஸ்லாமிய இளைஞனை சிவசேனாவினர் தீயிட்டு உயிரோடு எரித்தனரோ அன்றைக்கு என் மதத்தைச் சார்ந்தவர்களை நான் வெறுத்தவள்...இந்து என்ற அடையாளத்தை நான் துறக்கக் காரணமே இந்தியா தான். குழுமங்களிலேயே சங்கர் அண்ணா உட்பட பலரோடு  எத்தனையோ தடவை கடவுளை மறுத்து வாதாடியிருக்கிறேன்  


அதனால் தமிழக, ஹாலிவூட் அல்லது வேறு எந்த தேசத்தினதும் எந்தவொரு சினிமாநடிகர்களின் ரசிகை அல்லாத, ஒரு குறிப்பிட்ட மதம் சார்பானவளாக இருக்க விரும்பாத ஒருத்தியாக தான் இதை எழுதத் தொடங்குகிறேன்.  . 

கமல் என்ன தான் கறுப்புச் சட்டை கருத்துகளை அள்ளிவிட்டாலும் அதை நான் எப்போதும் நம்பியதில்லை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் அப்பட்டமாக அவர் தனது காழ்ப்புணர்ச்சியை தன் முகபாவங்களாலும் , நறுக்கென்ற ஓரிரு வசனங்களாலும், எள்ளல் சிரிப்பாலும் காட்டியதையும் கவனிக்கவும் தவறவில்லை...

அதனாலேயே விஸ்வரூபம் படத்திலும் தனது காழ்ப்புணர்ச்சியை காட்டியிருக்கிறார் போலிருக்கிறது என்றே நான் தீவிரமாக நம்பினேன். அதனாலேயே இந்தப் படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று ஆக்கினைப் படுத்தி என் பிராணநாதரை இழுத்துக் கொண்டு தியேட்டருக்கு போய் நேற்று இரவுக் காட்சி யாக நியுயேர்ஸியில் ஒரு தியேட்டரில் விஸ்வரூபம் படத்தை பார்த்தேன்.  $14.00டாலர் .  படி $28.00டாலரும், நாச்சோ சிப்ஸுக்கு $8.00 டாலருமாக $32.00 டாலர் . போச்சு..!! 

32.00 டாலர்???  ம்ஹும்... ரெண்டு சட்டை வாங்கியிருக்கலாம் அல்லது பசங்களுக்கு வீடியோ கேம் வாங்கியிருக்கலாம் அல்லது ஒரு வாரத்துக்கு  மளிகைச் சாமானாவது வாங்கியிருக்கலாம் என்று மனது கணக்குப் பார்த்தாலும் "எப்ப பார் எனகு முன்பாகவே படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் இலங்கை இந்திய இணைய உறவுகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்...அதுவும் தம்பி மருதமூரானை (  

(புருஜோத்தமன் தங்கமயில்) நினைத்துப் பார்த்தேன்...ஆஹா..தம்பிக்கு நான் விமர்சனம் எழுதி படிக்கும் விதியை விஸ்வரூபம் மூலம் எழுதி வைத்த கமலுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இந்த விசயத்துக்காக நன்றி சொல்ல தோன்றியது...  :) 

என்னைப் பொறுத்தவரை எந்த சிங்களவரும் ஈழத்தமிழன் எவரைப் பார்த்தாலும் கொட்டியா என்று சொல்லும் உணர்வு தான் இந்த விசயத்தில் விஸ்வரூபத்தைப் பற்றிய எதிர்ப்பின் உணர்விலும் பார்த்தேன். அந்த உணர்வோடு தான் நேற்றிரவு இந்தப் படத்தை பார்க்க என்னவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் பார்த்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள்ளேயே  சில சந்தேகங்கள்...................சில கேள்விகள்.....!
.
கமலின் முந்தையை படங்களில் பல இடங்களில் அவர் நாசூக்காக காட்டும் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சியையும் அவதானித்திருக்கிறேன். தென்னாலியில், மன்பதன் அம்பில்  ஈழத்தமிழரை அவர் கையாண்ட விதத்தில் எனக்கு மிகப் பெரியளவில் மாற்றுக்கருத்திருக்கிறது இன்று வரை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்திலும் அவருடைய அந்த நாசுக்கான இகழ்சி சுருக்கென்று நெஞ்சைக் குத்தியிருக்கிறது எனக்கு...தசாவததாரம் ஒரு படி அதிகம் ...ஆனால் என்ன ஆச்சரியமோ எனக்கு இந்தப் படத்தில் அவர் இஸ்லாமிய சகோதரர்களையும், அமெரிக்காவையும் ஒரே நேரத்தில் ஆரத் தழுவ முனைந்திருப்பதாகவே தோன்றியது. அது அவரின் பொய்யான வெளிப்பாடாகவே இருந்தாலும் கூட  ….!  

நான் கமலையோ அல்லது ஜெயலலிதாவின் அரசியல் சூழ்சியையோ , இஸ்லாமிய மதப் பிரதிநிதிகளையோ கருத்தில் கொள்ளாமல் வெறுமனே விஸ்வரூபம் என்ற படத்தின் கதைய மட்டும் என்னுடய சிற்றிவுக்கு எட்டிய அளவில் கிரகித்துக் கொண்டதில் சில கேள்விகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டன......................

அவையாவன...:

இந்தியாவில் இருக்கும் இஸ்லாம் மத சகோதர சகோதரிகளிடம் தேசபக்தி இருக்குமா இல்லையா?? அவர்கள் இந்தியாவை தங்கள்  தாய்நாடாக போற்றுகிறார்களா இல்லையா?? இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்பது பெரும்பாலானோரின் பதிலாக இருக்குமானால் அவர்களிடம் எனக்கு இன்னொரு கேள்வி இருக்கிறது. தேசபக்தி உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் காவல்துறையிலோ, இராணுவத்திலோ அல்லது உளவு நிறுவனத்திலோ கடமையாற்ற முற்படுவார்களா மாட்டார்களா?? இந்தக் கேள்விக்கும் ஆம் என்று பதில் சொல்பவர்களிடம் நான் இன்னும்  சில கேள்விகள் கேட்க நினைக்கிறேன்...  அப்படிப்பட்ட,  நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட களத்தில் கடமையாற்றும் அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவார்களா இல்லையா?? உளவுத் துறையில் கடமையாற்றுபவர்கள் பயங்கரவாதிகளிடம் ஊடறுத்துச் சென்று வேவு பார்ப்பார்களா இல்லையா???  

இவை எல்லாவற்றுக்கும் அன்பான இஸ்லாமிய சகோதரர்களின் பதில் ஆம் என்றால் விஸ்வரூபம் படத்தின் கதை தளமும் அந்த ஆம் என்ற பதிலைப் பின்னிச் சுற்றி அமைக்கப்பட்டதே...என்ன அப்படி ஒரு கதையை எழுதி, இயக்கி, நடித்தவரை நீங்கள் கலைஞராக பார்க்காமல் உங்களை சிறுமைப்படுத்த நினைக்கும் ஒரு பிரிவினரின் பிரதிந்தியாகவோ அடையாளமாகவோ பார்த்துவிட்டீர்கள்...அல்லது அப்படி பார்க்கும் வண்ணம் உங்களை வேறு ஏதோ ஒரு சக்தி உருவாக்கிவிட்டது !

படத்தை இன்று நியுயெர்ஸியின் ஒரு திரையரங்கில் இரவு 8 மணிக் காட்சியில் பார்த்தேன்.

ஏதோ ஒருவகையில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியரான உளவுத்துறை அதிகாரி ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான்.அல்கொய்தா தீவிரவாதிகளுக்குள்  புனித போராளி (ஜீஹாத் ந்னு தான் எனக்கு அந்த வார்த்தை கேட்டது. சரியான உச்சரிப்பா என்று தெரியவில்லை) யாக புகுந்து அல்கொய்தா போராளிகளுடன் பயிற்சி பெற்று உமர் என்ற ஒரு தலைமைப் போராளியின் நம்பிக்கைக்குரியவனாகிறார். அங்கிருந்தவாறு அமெரிக்க இராணுவத்தினருக்கு துப்பு கொடுத்து போராளிகள் பதுங்கியிருக்கும் கிராமங்களை முற்றுக்கையிட்டு அல்கொய்தா போராளிகளை அழிக்க துணை போகிறார். அந்த போராளிகளுக்கும் அமெரிக்க இராணுவத்தினருக்குமிடையிலான சண்டையில் இவருடைய உயிருக்கு கூட எந்தப் பாதுகாப்புமில்லை. இந்த சண்டையில் போராட்டத் தலைவனின் குடும்பம் முழுவதும் அழிக்கப்படுகிறது. தலைவனுக்கும் உளவாளியாக கதாநாயகன் இயங்குவது தெரிய வர அமெரிக்கர்களை அழிக்கும் திட்டத்துடன் தலைவனும், அவனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்ற உளவாளியும் நியுயோர்க்கில் குடியேறுகிறார்கள். பாதிக்கதை ஆப்கானிஸ்தானிலும் பாதிக் கதை அமெரிக்காவிலுமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பற்றிய கதை  இது.

என்னுடைய கேள்வியும் சந்தேகமும் என்னவென்றால்...........................

இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென்பதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவை. இவை...................

  1. தாக்குதல்களுக்கு செல்லும் முன் தீவிரவாதிகள் தொழுதுவிட்டு போகிறார்கள்..
  2. பயங்கரவாதி உமர் மதுரையிலும் கோவையிலும் மறைந்திருந்ததாக சொல்வது.
  3. குர்ரானை பயங்கரவாதிகள் வைத்திருப்பதோ தாக்குதல்களின் பின்னணியில் குர்ரானை காண்பித்ததோ...(மன்னிக்கவும் இந்தக் காரணம் எனக்கு சரியாகப்புரியவில்லை)

இப்போது இந்தக் காரணங்களையிட்டு என்னுடைய கேள்விகள்....

  1. தீவிரவாதியோ பயங்கரவாதியோ நல்லவனோ கொடையாளியோ போராளியோ எவனாயினும் அவனவன் தத்தமது கடவுளை வணங்கும் உரிமை உள்ளவர்கள் தானே?? அதுவும் தலிபான், அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள் தம்மை புனித போராளிகள் என்று தானே நம்புகிறார்கள்?? தாங்கள் செய்யவிருக்கும் தாக்குதல்கள் எதுவும் தங்கள் மதத்துக்காகவும் ,தம் மதத்தைச் சார்ந்த மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராகத் தானே அவர்கள் கருதுகிறார்கள்?? அப்படி நம்பும் அவர்கள் தங்கள் போர் வெற்றி பெற வேண்டுமென்று இறைவனை தொழுவது தவறா?? எந்தவொரு மனிதனும் தன்னுடைய மரணத்தின் நொடி தெரியப்படுமிடத்தில் தன் குல தெய்வத்தை பிராத்திக்காமல் இருப்பானா என்பது கேள்விக்குறியே..! அப்படிப் பார்க்கையில் மதத்துக்காகப் போராடும் இவர்கள் போருக்கு போகும் முன் தொழுகை நடத்துவதாக காண்பிப்பது தவறா??
  2. தமிழ் படம் எடுப்பதால் தமிழில் வசனங்கள் இருக்கவும் வேண்டும் அவை நம்பத் தகுந்தவையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் நாட்டில் தீவிரவாதிகளின் தலைவன் மறைந்திருந்ததாக சொல்லலாம் . இல்லை அந்த நோக்கில் இந்தக் காட்சி அமைக்கப்படவில்லையென்றே வைத்தாலும் கூட இந்தியாவில் எங்குமே பயங்கரவாதிகள் மறைந்திருக்கமாட்டார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?? யாரோ ஒரு பயங்கரவாதி (முல்லா உமர்) இங்கே மறைந்திருந்தார் என்பதற்கான ஆதாரங்களை வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில் எவருமே மறைந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் கடமையும் இருக்கிறதல்லவா??
  3. குர்ரானை அத்தனை பெரிய பிரமாண்டமான படத்தில் எந்த இடத்தில் காண்பித்தார்கள் என்பதை தான் கவனிக்கத் தவறிவிட்டேன். :( ஆனால் ஒரு இந்து வெறியனிடம் பகவத் கீதையும், கிறிஸ்தவ கலகக்காரனிடம் பைபிளும் , இஸ்லாமிய ஜிகாத் போராளியிடம் குர்ரானும் இருப்பது தவறென்றோ அவர்களை வைத்திருக்கக் கூடாது என்றோ உங்களால் சொல்ல முடி்யுமா?? ?

எல்லாவற்றையும் விட என் மனதைக் குடைவது ..................... இந்தப் படத்தில் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சார்ந்த இஸ்லாமியச் சகோதரனையும் இழிவாகவோ, பயங்கரவாதியாகவோ காட்டவில்லை. இந்திய இஸ்லாமிய உளவாளியே அல்கொய்தாவின் பயங்கரவாதத்தை முறியடிப்பதாகத் தான் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?? இந்த எதிர்ப்பு அல்கொய்தாவையோ அல்லது தலிபானையோ ஆதரிப்பது போலாகாதா??? என்பது தான்...

மற்றபடி என்னால் கமலின் முந்தைய படங்களில் அவதானித்த நாசூக்கான இகழ்வைக் கூட இந்தப் படத்தில் காணமுடியவில்லை. பின்லாடனின் மறைவை அமெரிக்கர்கள் தீபாவளி போல் கொண்டாடியதாக சொல்வது கொஞ்சம் அதிகப்படியான சினிமாத் தனம்.....! சந்தோசப்பட்டவர்கள் உண்டு தான் எனினும் அந்தளவுக்கு கொண்டாடியதை நான் இங்கு அவதானிக்கவில்லை.   படத்தில் அரக்கனைக் கொன்றால் கொண்டாடமாட்டார்களா என்று ஒரு கேள்வியும் அங்கு வைக்கப்படுகிறது. பயங்கரவாதத்தையும் , பின்லாடனையும் வெறுக்கும் இஸ்லாமிய மக்கள் இந்த வசனத்தை ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா??

இந்தப் படம் எந்தவகையில் ஹாலிவூட் தரம் என்று  என்னால் சீர்தூக்கிச் சொல்ல முடியவில்லை... ஆனால் மிகப்பிரமாண்டமான அளவில் அதிக செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். என்பதில் ஐயமில்லை.

ஒருவகையில் கணவன் மீது ஆர்வமிழந்து போகும் மனைவி, இன்னொரு ஆணிடம் ஈர்க்கப்படுவதும், கணவனை விட்டு விலக நினைப்பதும், அதற்கு முன் கணவனை வேவு பார்த்து அவனிடம் ஏதாவது தவற்ருந்தால் தன்னுடைய குற்றவுணர்வில்ருந்து மீளலாம் என்று நினைப்பதும், ஒரு கட்டத்தில் கணவனின் சுயரூபம் தெரிய வர பிரமிப்பதும் எனக்கு என்னவோ ஆர்னோல்ட் நடித்த True Lies படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் கூட இப்படி தான் இஸ்லாமிய தீவிரவாதக் கூட்டத்திடம் கணவரும் மனைவியும் அகப்படுவார்கள். ஆங்கிலப்படத்தில் கணவன் தான் மனைவியை வேவு பார்ப்பார். எனக்கென்னவோ அந்தப் படத்தின் கதையை வைத்து திரித்து கமல் கதை பண்ணியிருப்பது போல ஒரு தோற்றம். அந்த படம் காமெடியும் ஆக்‌ஷனும்..அதையே  கமல் உயிர்ப்புடன் யதார்த்தமும் ஆக்‌ஷனும் கலந்து தந்திருப்பதாக நினைக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் எதிர்ப்பும், தடையும் முதலில் ஆர்னோல்டுக்கு போட்டிருக்க வேண்டும்.

குறை சொல்ல முடியாத முதல் பிரமிப்பு காமிரா தான்...
ஆப்கானின் அடர்ந்த நெடிய மலைத்தொடர்களும்...பாலை மணல்வெளியும் அப்பப்பா..............ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் தோன்றி மறையும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது. அதே போல் அமெரிக்க இராணுவத்திற்கும் அல்கொய்தாவினருக்குமிடையிலான போர் காட்சிகளும், வெடித்துச் சிதறும் கிராமம், மனிதர்கள், NYPD யின் கார் சேஸிங்குக்கும் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை..அத்தனை  சிறப்பு.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் .

அதுவும்  24 மணி நேரமும் எந்த நிமிடம் எங்கு குண்டு வெடிக்கும் எங்கு ஆயுதங்கள் வெடிக்கும் என்று சொல்ல முடியாத பயங்கரவாதமும், ஆயுதப் போராட்டமும் நடக்கும் ஒரு மண்ணில் அந்த மண்ணில் நடக்கும் காட்சிகளையே படம் எடுப்பது என்பது எத்தனை ரிஸ்கான விசயம் ???  உண்மையிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இவை படமாக்கப்பட்டனவா???? அல்லது ஏதும் கம்பியூட்டர் கிராபிக்கா அல்லது இந்தியாவின் ஏதேனும் பகுதிகளா...?? என்று எனக்கு தெரியாது.

இரண்டாவது கமலின் அந்த  கதக் நடன பாட்டு. அந்தப் பாட்டு எடுக்கப்பட்ட விதம் இணையத்தளத்தில் பார்த்த போது உண்மையிலேயே கமல் மீது பரிதாபம் வந்தது..ஒரு பாட்டுக் காட்சியை நிறைவாக எடுக்க இந்த மனுஷன் எத்தனை விதமான முயற்சிகள், ஈடுபாடு, களைப்பு என்று எத்தனையை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அத்தனையும் ஒரு 4 நிமிஷம் வருமா அந்தப் பாடல்...?? அத்தனை எத்தனிப்பும் உழைப்பும் அந்த 4 நிமிஷத்தை மனதில் அழுத்தமாக பதித்துவிட்டு தான் போகும் எதிரிகளுக்கு கூட...முகத்தில் ததும்பும் சிங்காரரசம் உண்மையான பெண்ணுக்கே வருமா என்று சந்தேகம் வர வைக்கிறது..அப்பப்பா...


வழமையான கமலின் முத்தக் காட்சியோ டூயட் பாடலோ கதாநாயகனின் அல்லது கதாநாயகியின் அல்லது வில்லனின் கனவில் கூட  வரவில்லை...என்பது கமலின் மசாலா இரசிகர்களுக்கு  ஏமாற்றம் தான். கதக் நடனப் பாட்டைத் தவிர மற்ற எந்தப் பாடலும் கதாநாயக நாயகியின் வாயசைப்பில் வரவில்லை...எல்லாமே பின்னணியில் தான். நிறைய அரபிக் வசனங்களும் குர்ரான் ஓதலும் படத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேறு என்ன ...வேறு என்ன???
கமல் ஏதாவது படத்தில் எந்த மதத்தையாவது கிண்டல் செய்தே தீருவேன் என்று இருக்கிறாரோ என்னமோ ....இந்தப் படத்தில் பிராமணப் பெண்ணான தன் மனைவிக்கு கோழி ரோஸ்ட் மிகவும் பிடிக்கும் என்று சமைப்பதும் அதை ருசி பார்க்கச் சொல்லி தன் கதக் நடன மாணவி ஒருவரைப் பார்த்து “பாப்பாத்தியம்மா முதல்ல நீயே டேஸ்ட் பண்ணிப் பார்த்து உப்பு காரம் போதுமான்னு சொல்லு” என்று சொல்வதையும் வைத்து இந்துமதத்தையும் பிராமணர்களையும் கிண்டல் பண்ணியதற்காக அடுத்ததாக RSS இயக்கத்தினரோ அல்லது பாஜக வோ கோர்ட் வாசல் படி ஏறினால் கமல் என்ன செய்வாரோ தெரியவில்லை...!

அடுத்து இன்னொரு விசயமும் நான் கிரகித்துக் கொண்டது .... முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம்....ஆனாலும் அதையும் இங்கே தரவே விரும்புகிறேன்...தேவர்மகன் படத்திலிருந்து (ஒருவேளை அதற்கு முன்னதாகக் கூட இருக்கலாம் ஆனால் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது தேவர்மகன் காலத்திலிருந்து தான் )கமலின் ஆஸ்கார் கனவை அவருடைய சீரியஸான படங்களில் அவர் எடுக்கும் முயற்சிகள் வெளிக்காட்டி வருகின்றன என்று சொன்னால் அது பிழையாகாது அல்லவா??  அந்தக் கனவை நனவாக்க இந்த படம் மூலமும் முயற்சி செய்திருக்கிறாரோ என்றும் யோசிக்க வைத்ததற்கு காரணம் அமெரிக்காவுக்கு நிறைய கூழ் அடித்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது போல்......பல காட்சிகள்...கூடவே...அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று செண்டிமெண்ட் வசனம் வேறு...

எல்லாவற்றையும் விட காமெடி இந்திய பிரதமர் போனில் பேசுவது , அமெரிக்காவையே இந்திய உளவாளி காப்பாற்றுவது போன்ற லாஜிக்....  :)  

எல்லையில் இருக்கும் காவலர்கள் தலையையே பக்கத்து வீட்டுக்காரன் கொய்து கொண்டு போவது தெரியாமல் இருப்பதை  இப்படி ஒரு காட்சியை பார்த்ததும் நினைத்தன் விளைவு .............தியேட்டரில் சத்தமாக சிரித்தவள் நானாகத் தான் இருக்கும்...!  பின்லாடனை, The beheading of journalist of Daniel Pearl க்கு ஒப்பான காட்சி, அல்கொய்தாவின் மரணதண்டணை முறை போன்ற நிஜங்களை , புனித போருக்காக தன் பிள்ளைகளை தாரை வார்க்க தயாரான திவிரவாத தலைவன், ஒரு குழந்தையாவது படித்து இந்த சூழலை விட்டு விலக வேண்டுமென்ற தவிப்புடன் ,கணவனுக்கு பயந்த தன் ஆசைகளையும் ,கனவையும் தன் முகத்தை மூடும் துப்பட்டாவின் பின்னால் மூடிவைக்கும் தீவிரவாதத் தலைவனின் மனைவியும், அமெரிக்க இராணுவத்தின்  தாக்குதலில் குடும்பமே அழிந்து போன பின் மகனை அவன் விருப்பப்படி படிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்று  தீவிரவாதத் தலைவன் அரற்றுவதும்...இயல்பாக இருந்ததை மறுக்க முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தலைக்கு மேலே பறக்கும் விமானங்களையும், இராணுவ உடைகளையும், குண்டு வீச்சுகளையும், குண்டுவீச்சில் அழிந்து கிடந்த கிராமத்தையும் , அங்கு எரிந்து கருகிக் கிடந்த மக்களையும் படத்தில் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னாலும் ஈழத்தின் நினைவுகளோடு போராட வைத்து தூங்கவிடாமல் கரைச்சல்படுத்திக் கொண்டிருந்தன என்று சொன்னால் யாரும் நம்புவீர்களோ என்னமோ ஆனால் ஈழத்தமிழர்கள் யாராவது இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் நான் சொல்வதை நம்புவார்கள்...!


படம் பார்க்கும் முன்பு அமெரிக்காவில் படம் பார்த்துவிட்டு எழுதப்பட்ட மற்றவர்களின் விமர்சனங்களை படித்தேன் தம்பி கானா பிரபா அவர்களின் விமர்சனம் உட்பட....

படம் பார்த்த பின்பு மற்றவர்களின் விமர்சன வசனக்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை...கானா பிரபாவின் கடைசி வரிகளைத் தவிர...  
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.

தம்பி கானா பிரபா சொல்வது போன்ற மனநிலையில் இருப்பதால் தான் இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்றால் மூன்றாம் மனிதர்களாக தள்ளிநின்று அவர்களுக்காக பரிதாபப்படவும் அவர்கள் பக்கம் நின்று அவர்களை அரவணைக்கவும் மட்டும் போதாது. அவர்களுடைய அந்த மனநிலையை களைய வைக்க வேண்டிய கடமையும் ஒரே நாட்டுக்குள் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற இலக்கு இருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இருக்க வேண்டும்...அந்த கடமையை உணராமல் ஆதீக்க வெறியுடன் நடக்க முற்பட்டால் என்ன நடக்கும் என்று அனுபவித்த சிறுபான்மையினராக இருந்து என்னால் உணரமுடிகிறது..அதனால் தான் என்னால் கமலின் கருத்துரிமை என்ற ஒன்றைப் பார்க்கிலும் ஒரு சமூகத்தின் உணர்வுகளில் விழுந்துவிட்ட இரணம் சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமாக இருக்கிறது.  அந்த இரணத்தை ஆற்ற வேண்டுமென்ற  கடமையை மறந்துவிட்டு அந்த இரணத்தின் சீழை தமக்கு சாதகமாக்க முனையும் அரசியல்வாதிகள் விரட்டப்பட வேண்டியவர்கள்..எந்த வகையில் விரட்ட வேண்டுமென்ற தீர்வையும் இன்னொரு சினிமா மூலம்  தேடாமல் சுயசிந்தனையுடன் தேட வேண்டியது குடிமக்களின் கடமை.

மேலோட்டமாக இத்தனையும் விபரித்திருப்பது என் பார்வைக் கோணத்தில் கிடைத்த விஸ்வரூபம் மட்டுமே! உண்மையில் என்னுடைய அறிவுக்கு இதற்கு மேல் ஆராயமுடியவில்லை. ஒருவேளை இதை விட நுணுக்கமாக  காழ்ப்புணர்ச்சியோ அல்லது வெறுப்போ இருக்கிறதா என்று என்னால் கண்டுபிடிக்க இயலாதது எனது அறிவின்மையாக இருக்கலாம். ஆனாலும் நானும் என் கருத்தை பகிர்வதால் எந்த கேடும் வராது என்றே நம்புகிறேன்.

தவிர தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான்  இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.

ஹாலிவூட்டிலும் இதை விட மோசமாக இஸ்லாமிய இனத்தவரை சித்தரிக்கும் படங்களை எடுக்கிறார்கள். இந்தியர்களை கிண்டல் செய்து முழு நீளப்படமே எடுத்திருக்கிறார்கள்.. விடுதலைப் புலிகளை  பல படங்களில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களாக வசனங்களில் புகுத்தியிருக்கிறார்கள்...இந்துக்களை கேலி செய்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு உரிய இயேசு கிறிஸ்துவைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.. எல்சபெத் மஹாராணியை லெஸ்லி நெல்ஸன் என்ற நடிகர் தனக்குக் கீழே அகப்பட்டுக் கிடப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார் ஒரு படத்தில்.அப்படி மிகச் சுதந்திரமாக தமக்குத் தோன்றியதை  படமாக்கும் ஹோலிவூட் படங்களை... ஏன்  நம்மால் எதிர்க்க முடியவில்லை...?? அது இயலாத காரியம்

.கனக்க ஏன் சமீபத்தில் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ இனத்தவர் எடுத்த படத்துக்கு எத்தனையோ போராட்டம் நடந்ததே...ஒபாமா வரை அந்த படத்தையிட்டு எச்சரிக்கை விடப்பட்டதே....என்ன பலன்?? ஒபாமாவும் சரி ஹாலிவூட்டும் சரி அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா??? இல்லை!

ஆனால்  யூ-டியூப் முதல் அகில உலகம் முழுக்க இன்று துள்ளாட்டம் ஆடும் gangnam style பாடல் அமெரிக்கர்களை கிண்டல் செய்யும் பாடலாம்.  ஒவ்வொரு நாளும்  அந்தப் பாடலை அமெரிக்காவின் அத்தனை வானொலியும், அத்தனை தொலைக்காட்சியும்  ஒலிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறன.. ஆனால் அந்தப் பாடலைப் பாடிய  பாடகர் ஒரு நாள் அமெரிக்கர்களிடம்  அந்தப் பாடலில் அவர் அவர்களை கிண்டல் செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். என்ன நடந்தது ஏது நடந்தது என்று விபரம் எனக்கு தெரியாது.

ஆக................Hollywood தரத்துக்கு படம் வேண்டும் என்று திரையுலகை எதிர்பார்க்கும் மக்கள் முதலில் தங்கள் இரசனையையும், அலட்சிய மனோபாவத்தையும்  அமெரிக்க மக்கள் மாதிரி் தமக்குள் வளர்த்திருக்க வேண்டும். திரைப்படத்துறையை அங்கே வெறும் எண்டர்டெய்ன்மெண்ட் மீடியாவாக மட்டுமே பார்கிறார்கள். ஆனால் எங்களவர்கள் தான் சமூகப் போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சினிமாவை பார்த்து மறுமலர்ச்சி அடைகிறார்கள். சினிமா நடிகர்களை தேவ தூதர்களாகவும், மீட்பராகவும் வணங்குகிறார்கள்.  இத்தனை காலத்தில் பெரியார் வழியில் போனவர்களைப் பார்க்கிலும் ரஜனிக்கு பின்னால் போனவர்கள் தானே அதிகம்??? -கனக்க ஏன் பெரியாரின் கருத்துகள் கூட சினிமா மூலம் தானே பரப்பப்பட வேண்டியதாயிருந்தது...??

என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை... நான் சினிமாவை வெறும் கூத்தாகவும் நடிகர் நடிகைகளை கூத்துக் கட்டுபவர்களாகவும் மட்டுமே பார்க்கிறேன். அதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதை கேலிக்குரியதாகவும், அவர்களையும் அவர்கள் மேடைகளில் பேசுவதை யும் ஒரு பொருட்டாக எடுக்கவும் விரும்புவதில்லை.. என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசும் குழும சகோதரர்களுக்கு கூட தெரியும் சமீபத்தில் ஈழ விவகாரத்தில் வீர வசனம் பேசும் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் நான் எந்தளவுக்கு வெறுக்கிறேன் என்று.....

என்னை கமலோ ரஜனியோ அல்லது மற்ற நடிகர் நடிகைகளோ தங்கள் படத்தில் சொல்லும் கருத்துகளால் மாற்றிவிட முடியாது. ஈர்க்கவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் எதையும், நான் விரும்பும் எவரையும் இவர்களால் என்னிடமிருந்து பிரிக்க முடியாது. இவர்களை நான் என்றைக்கும் கொண்டாடப் போவதில்லை. இவர்கள் எனக்கு யாரோ ஒரு மூன்றாவது நபர்களே...வெறும் அரிதாரம் பூசும் கூத்துக் கட்டும் கலைஞர்கள்...எனக்கு போரடிக்கும் போது இவர்களுடைய கூத்துகளை  போட்டுப் பார்க்கிறேன். அவ்வளவே....!

அதனால் இவர்கள் என்னையோ என் உணர்வுகளையோ காயப்படுத்த முடியாது.  அந்த விசயத்தில் சினிமாவை நான் வென்றவள்..!

இந்தப் படத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களும் ,தடைகளும், கோர்ட் வழக்குகளும் இல்லாமல் இருந்திருந்தால் 10 நாட்கள் கூட திரையரங்குகளில் தங்கியிருந்திருக்குமா என்பது சந்தேகமே.... ஏன் எனில் இந்த படத்தின் தொழில்நுட்பம் முதல் தயாரிப்பு வையிலான உயரக தராதரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் தமிழக சினிமாரசிகர்களின் பெரும்பான்மையிடம் இருக்குமா என்பது  கேள்விக்குறி. வழமையான தென்னிந்திய திரைப்படங்களின்  பெண்களை  கவர்வதற்கான  சென்டிமென்ட் காட்சிகளோ , கண்ணீர் மல்கும் இடங்களோ அல்லது  காலரி டிக்கட் வரிசைகளை நிரப்பிக் கொன்டு தமது அபிமான நடிகர்களுக்கு ஆரத்தி காட்டும் அப்பாவி ரசிகர்களுக்கான வழமையான தமிழ் படத்தின் எந்தவொரு  சாயலும்  இல்லாத ஒரு ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங் என்று சொல்லுமளவுக்கு படம் இருக்கிறது. இந்தியாவின் எந்தப் பாகமும் ஊரும் மக்களும் இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள் இல்லை . முழுக்க முழுக்க  தலிபான், அல்கொய்தா , ஆப்கானிஸ்தான் என்று அத்தனையும் இந்தியாவுக்கு வெளியால் இருக்கும் ஆனால் உலகை அச்சுறுத்தும்  பயங்கரவாதத்தை பற்றிய கதைக் களமும்,  படமும் தான் இது!!  இன்னும் சொல்லப் போனால் பிளாஸ்மா டிவி , 3டி டிவி என்று அகன்ற டிவிகளுடன் வீட்டிலேயே  போஸ் போல் நல்ல சவுன்ட் ஸிஸ்டங்களுடன் இருக்கும் மேல்தட்டு வர்க்க மக்கள் கூட டிவிடி வரட்டு வீட்டிலேயே அகன்ற திரையில் பார்த்துவிடலாம் என்று தட்டிக் கழித்துவிட்டுப் போகக் கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் தவிர்த்து இன்று இந்தப் படத்தை ஊர் விட்டு ஊர் போயாவது போய் பார்க்க வேண்டுமென்ற அளவுக்கு மக்களை வெறி கொள்ள வைத்தவை படத்தின் கதையோ கமலோ அல்ல. தமிழ அரசின் தடை மட்டுமே!!  கமலுக்கு  கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது. அதை மறைமுகமாக எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டங்களும் தடையும்  வழங்கியிருக்கிறது. :) 

பிற்குறிப்பு: என்னவரிடம் படம் முடிந்ததும் அபிப்பிராயம் கேட்டேன் “படம் எப்படி..?” என்று..மிகவும் அசதியுடன் கேட்டார் ”நீங்கள் என்ர நித்திரையைக் கெடுத்து என்ன  அல்கொய்தா ட்ரெயினிங் காட்டவா கூட்டி வந்தனியள்?”  என்றார். அப்போது தான் புரிந்தது எந்தவித சார்பும் இல்லாத, சினிமா அதிகம் பார்க்காத, சினிமாவினதும் அரசியல் கட்சிகளினதும் சூழ்ச்சி அரசியல் புரியாத அப்பாவியான என்னவரை பலவந்தப்படுத்தி இந்தப் படத்தை பார்க்க வைத்த பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் என்னை சும்மா விடாது...என்று,,!  :) இப்போது அதற்காக மட்டுமே கவலைப்படுகிறேன். :)




Latest News: விஸ்வரூபத்தை வெளியிட முஸ்லீம் பேரவை வேண்டுகோள்!