Thursday, January 31, 2013

இது.........என்னையும் கருத்து எழுத வைத்த விதியின் விஸ்வரூபம்!!




என் அன்புக்குரிய இணைய உறவுகளான பலருக்கு தெரியும் கமல் ரஜனி என்று இரண்டு நடிகர்களிடமும் , கடவுள் பெயரில் வியாபாரம், அரசியல், வன்முறை செய்பவர்களிடமும்  எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது என்பது.

  நான் என் கடவுளை விட இந்து மதம் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து தான் கடவுள் நம்பிக்கையையே விட்டேன்... இஸ்லாமிய அன்பர்கள் என்னை நம்ப வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை...ஈழத்தில் இருக்கும் போது வெறும் 6 வயதில் என்னை பார்த்தவர்கள் ஆண்டாள் மாதிரியும் மீரா மாதிரியும் தான் இந்த பிள்ளை வரப் போகுது என்று சொல்லுமளவுக்கு சைவப்பழமாக இருந்தவள்...என் பெரியம்மாவோடு சேர்ந்து விரதமிருப்பதும், கோவிலில் அடியழிப்பதுமாய் வளர்ந்தவள்....என்றைக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ, என்றைக்கு பம்பாயில் நெருல் என்ற இடத்தில் எங்கள் கண் முன்னால் இஸ்லாமிய இளைஞனை சிவசேனாவினர் தீயிட்டு உயிரோடு எரித்தனரோ அன்றைக்கு என் மதத்தைச் சார்ந்தவர்களை நான் வெறுத்தவள்...இந்து என்ற அடையாளத்தை நான் துறக்கக் காரணமே இந்தியா தான். குழுமங்களிலேயே சங்கர் அண்ணா உட்பட பலரோடு  எத்தனையோ தடவை கடவுளை மறுத்து வாதாடியிருக்கிறேன்  


அதனால் தமிழக, ஹாலிவூட் அல்லது வேறு எந்த தேசத்தினதும் எந்தவொரு சினிமாநடிகர்களின் ரசிகை அல்லாத, ஒரு குறிப்பிட்ட மதம் சார்பானவளாக இருக்க விரும்பாத ஒருத்தியாக தான் இதை எழுதத் தொடங்குகிறேன்.  . 

கமல் என்ன தான் கறுப்புச் சட்டை கருத்துகளை அள்ளிவிட்டாலும் அதை நான் எப்போதும் நம்பியதில்லை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் அப்பட்டமாக அவர் தனது காழ்ப்புணர்ச்சியை தன் முகபாவங்களாலும் , நறுக்கென்ற ஓரிரு வசனங்களாலும், எள்ளல் சிரிப்பாலும் காட்டியதையும் கவனிக்கவும் தவறவில்லை...

அதனாலேயே விஸ்வரூபம் படத்திலும் தனது காழ்ப்புணர்ச்சியை காட்டியிருக்கிறார் போலிருக்கிறது என்றே நான் தீவிரமாக நம்பினேன். அதனாலேயே இந்தப் படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று ஆக்கினைப் படுத்தி என் பிராணநாதரை இழுத்துக் கொண்டு தியேட்டருக்கு போய் நேற்று இரவுக் காட்சி யாக நியுயேர்ஸியில் ஒரு தியேட்டரில் விஸ்வரூபம் படத்தை பார்த்தேன்.  $14.00டாலர் .  படி $28.00டாலரும், நாச்சோ சிப்ஸுக்கு $8.00 டாலருமாக $32.00 டாலர் . போச்சு..!! 

32.00 டாலர்???  ம்ஹும்... ரெண்டு சட்டை வாங்கியிருக்கலாம் அல்லது பசங்களுக்கு வீடியோ கேம் வாங்கியிருக்கலாம் அல்லது ஒரு வாரத்துக்கு  மளிகைச் சாமானாவது வாங்கியிருக்கலாம் என்று மனது கணக்குப் பார்த்தாலும் "எப்ப பார் எனகு முன்பாகவே படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் இலங்கை இந்திய இணைய உறவுகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்...அதுவும் தம்பி மருதமூரானை (  

(புருஜோத்தமன் தங்கமயில்) நினைத்துப் பார்த்தேன்...ஆஹா..தம்பிக்கு நான் விமர்சனம் எழுதி படிக்கும் விதியை விஸ்வரூபம் மூலம் எழுதி வைத்த கமலுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இந்த விசயத்துக்காக நன்றி சொல்ல தோன்றியது...  :) 

என்னைப் பொறுத்தவரை எந்த சிங்களவரும் ஈழத்தமிழன் எவரைப் பார்த்தாலும் கொட்டியா என்று சொல்லும் உணர்வு தான் இந்த விசயத்தில் விஸ்வரூபத்தைப் பற்றிய எதிர்ப்பின் உணர்விலும் பார்த்தேன். அந்த உணர்வோடு தான் நேற்றிரவு இந்தப் படத்தை பார்க்க என்னவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் பார்த்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள்ளேயே  சில சந்தேகங்கள்...................சில கேள்விகள்.....!
.
கமலின் முந்தையை படங்களில் பல இடங்களில் அவர் நாசூக்காக காட்டும் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சியையும் அவதானித்திருக்கிறேன். தென்னாலியில், மன்பதன் அம்பில்  ஈழத்தமிழரை அவர் கையாண்ட விதத்தில் எனக்கு மிகப் பெரியளவில் மாற்றுக்கருத்திருக்கிறது இன்று வரை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்திலும் அவருடைய அந்த நாசுக்கான இகழ்சி சுருக்கென்று நெஞ்சைக் குத்தியிருக்கிறது எனக்கு...தசாவததாரம் ஒரு படி அதிகம் ...ஆனால் என்ன ஆச்சரியமோ எனக்கு இந்தப் படத்தில் அவர் இஸ்லாமிய சகோதரர்களையும், அமெரிக்காவையும் ஒரே நேரத்தில் ஆரத் தழுவ முனைந்திருப்பதாகவே தோன்றியது. அது அவரின் பொய்யான வெளிப்பாடாகவே இருந்தாலும் கூட  ….!  

நான் கமலையோ அல்லது ஜெயலலிதாவின் அரசியல் சூழ்சியையோ , இஸ்லாமிய மதப் பிரதிநிதிகளையோ கருத்தில் கொள்ளாமல் வெறுமனே விஸ்வரூபம் என்ற படத்தின் கதைய மட்டும் என்னுடய சிற்றிவுக்கு எட்டிய அளவில் கிரகித்துக் கொண்டதில் சில கேள்விகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டன......................

அவையாவன...:

இந்தியாவில் இருக்கும் இஸ்லாம் மத சகோதர சகோதரிகளிடம் தேசபக்தி இருக்குமா இல்லையா?? அவர்கள் இந்தியாவை தங்கள்  தாய்நாடாக போற்றுகிறார்களா இல்லையா?? இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்பது பெரும்பாலானோரின் பதிலாக இருக்குமானால் அவர்களிடம் எனக்கு இன்னொரு கேள்வி இருக்கிறது. தேசபக்தி உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் காவல்துறையிலோ, இராணுவத்திலோ அல்லது உளவு நிறுவனத்திலோ கடமையாற்ற முற்படுவார்களா மாட்டார்களா?? இந்தக் கேள்விக்கும் ஆம் என்று பதில் சொல்பவர்களிடம் நான் இன்னும்  சில கேள்விகள் கேட்க நினைக்கிறேன்...  அப்படிப்பட்ட,  நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட களத்தில் கடமையாற்றும் அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவார்களா இல்லையா?? உளவுத் துறையில் கடமையாற்றுபவர்கள் பயங்கரவாதிகளிடம் ஊடறுத்துச் சென்று வேவு பார்ப்பார்களா இல்லையா???  

இவை எல்லாவற்றுக்கும் அன்பான இஸ்லாமிய சகோதரர்களின் பதில் ஆம் என்றால் விஸ்வரூபம் படத்தின் கதை தளமும் அந்த ஆம் என்ற பதிலைப் பின்னிச் சுற்றி அமைக்கப்பட்டதே...என்ன அப்படி ஒரு கதையை எழுதி, இயக்கி, நடித்தவரை நீங்கள் கலைஞராக பார்க்காமல் உங்களை சிறுமைப்படுத்த நினைக்கும் ஒரு பிரிவினரின் பிரதிந்தியாகவோ அடையாளமாகவோ பார்த்துவிட்டீர்கள்...அல்லது அப்படி பார்க்கும் வண்ணம் உங்களை வேறு ஏதோ ஒரு சக்தி உருவாக்கிவிட்டது !

படத்தை இன்று நியுயெர்ஸியின் ஒரு திரையரங்கில் இரவு 8 மணிக் காட்சியில் பார்த்தேன்.

ஏதோ ஒருவகையில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியரான உளவுத்துறை அதிகாரி ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான்.அல்கொய்தா தீவிரவாதிகளுக்குள்  புனித போராளி (ஜீஹாத் ந்னு தான் எனக்கு அந்த வார்த்தை கேட்டது. சரியான உச்சரிப்பா என்று தெரியவில்லை) யாக புகுந்து அல்கொய்தா போராளிகளுடன் பயிற்சி பெற்று உமர் என்ற ஒரு தலைமைப் போராளியின் நம்பிக்கைக்குரியவனாகிறார். அங்கிருந்தவாறு அமெரிக்க இராணுவத்தினருக்கு துப்பு கொடுத்து போராளிகள் பதுங்கியிருக்கும் கிராமங்களை முற்றுக்கையிட்டு அல்கொய்தா போராளிகளை அழிக்க துணை போகிறார். அந்த போராளிகளுக்கும் அமெரிக்க இராணுவத்தினருக்குமிடையிலான சண்டையில் இவருடைய உயிருக்கு கூட எந்தப் பாதுகாப்புமில்லை. இந்த சண்டையில் போராட்டத் தலைவனின் குடும்பம் முழுவதும் அழிக்கப்படுகிறது. தலைவனுக்கும் உளவாளியாக கதாநாயகன் இயங்குவது தெரிய வர அமெரிக்கர்களை அழிக்கும் திட்டத்துடன் தலைவனும், அவனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்ற உளவாளியும் நியுயோர்க்கில் குடியேறுகிறார்கள். பாதிக்கதை ஆப்கானிஸ்தானிலும் பாதிக் கதை அமெரிக்காவிலுமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பற்றிய கதை  இது.

என்னுடைய கேள்வியும் சந்தேகமும் என்னவென்றால்...........................

இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென்பதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவை. இவை...................

  1. தாக்குதல்களுக்கு செல்லும் முன் தீவிரவாதிகள் தொழுதுவிட்டு போகிறார்கள்..
  2. பயங்கரவாதி உமர் மதுரையிலும் கோவையிலும் மறைந்திருந்ததாக சொல்வது.
  3. குர்ரானை பயங்கரவாதிகள் வைத்திருப்பதோ தாக்குதல்களின் பின்னணியில் குர்ரானை காண்பித்ததோ...(மன்னிக்கவும் இந்தக் காரணம் எனக்கு சரியாகப்புரியவில்லை)

இப்போது இந்தக் காரணங்களையிட்டு என்னுடைய கேள்விகள்....

  1. தீவிரவாதியோ பயங்கரவாதியோ நல்லவனோ கொடையாளியோ போராளியோ எவனாயினும் அவனவன் தத்தமது கடவுளை வணங்கும் உரிமை உள்ளவர்கள் தானே?? அதுவும் தலிபான், அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள் தம்மை புனித போராளிகள் என்று தானே நம்புகிறார்கள்?? தாங்கள் செய்யவிருக்கும் தாக்குதல்கள் எதுவும் தங்கள் மதத்துக்காகவும் ,தம் மதத்தைச் சார்ந்த மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராகத் தானே அவர்கள் கருதுகிறார்கள்?? அப்படி நம்பும் அவர்கள் தங்கள் போர் வெற்றி பெற வேண்டுமென்று இறைவனை தொழுவது தவறா?? எந்தவொரு மனிதனும் தன்னுடைய மரணத்தின் நொடி தெரியப்படுமிடத்தில் தன் குல தெய்வத்தை பிராத்திக்காமல் இருப்பானா என்பது கேள்விக்குறியே..! அப்படிப் பார்க்கையில் மதத்துக்காகப் போராடும் இவர்கள் போருக்கு போகும் முன் தொழுகை நடத்துவதாக காண்பிப்பது தவறா??
  2. தமிழ் படம் எடுப்பதால் தமிழில் வசனங்கள் இருக்கவும் வேண்டும் அவை நம்பத் தகுந்தவையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் நாட்டில் தீவிரவாதிகளின் தலைவன் மறைந்திருந்ததாக சொல்லலாம் . இல்லை அந்த நோக்கில் இந்தக் காட்சி அமைக்கப்படவில்லையென்றே வைத்தாலும் கூட இந்தியாவில் எங்குமே பயங்கரவாதிகள் மறைந்திருக்கமாட்டார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?? யாரோ ஒரு பயங்கரவாதி (முல்லா உமர்) இங்கே மறைந்திருந்தார் என்பதற்கான ஆதாரங்களை வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில் எவருமே மறைந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் கடமையும் இருக்கிறதல்லவா??
  3. குர்ரானை அத்தனை பெரிய பிரமாண்டமான படத்தில் எந்த இடத்தில் காண்பித்தார்கள் என்பதை தான் கவனிக்கத் தவறிவிட்டேன். :( ஆனால் ஒரு இந்து வெறியனிடம் பகவத் கீதையும், கிறிஸ்தவ கலகக்காரனிடம் பைபிளும் , இஸ்லாமிய ஜிகாத் போராளியிடம் குர்ரானும் இருப்பது தவறென்றோ அவர்களை வைத்திருக்கக் கூடாது என்றோ உங்களால் சொல்ல முடி்யுமா?? ?

எல்லாவற்றையும் விட என் மனதைக் குடைவது ..................... இந்தப் படத்தில் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சார்ந்த இஸ்லாமியச் சகோதரனையும் இழிவாகவோ, பயங்கரவாதியாகவோ காட்டவில்லை. இந்திய இஸ்லாமிய உளவாளியே அல்கொய்தாவின் பயங்கரவாதத்தை முறியடிப்பதாகத் தான் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?? இந்த எதிர்ப்பு அல்கொய்தாவையோ அல்லது தலிபானையோ ஆதரிப்பது போலாகாதா??? என்பது தான்...

மற்றபடி என்னால் கமலின் முந்தைய படங்களில் அவதானித்த நாசூக்கான இகழ்வைக் கூட இந்தப் படத்தில் காணமுடியவில்லை. பின்லாடனின் மறைவை அமெரிக்கர்கள் தீபாவளி போல் கொண்டாடியதாக சொல்வது கொஞ்சம் அதிகப்படியான சினிமாத் தனம்.....! சந்தோசப்பட்டவர்கள் உண்டு தான் எனினும் அந்தளவுக்கு கொண்டாடியதை நான் இங்கு அவதானிக்கவில்லை.   படத்தில் அரக்கனைக் கொன்றால் கொண்டாடமாட்டார்களா என்று ஒரு கேள்வியும் அங்கு வைக்கப்படுகிறது. பயங்கரவாதத்தையும் , பின்லாடனையும் வெறுக்கும் இஸ்லாமிய மக்கள் இந்த வசனத்தை ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா??

இந்தப் படம் எந்தவகையில் ஹாலிவூட் தரம் என்று  என்னால் சீர்தூக்கிச் சொல்ல முடியவில்லை... ஆனால் மிகப்பிரமாண்டமான அளவில் அதிக செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். என்பதில் ஐயமில்லை.

ஒருவகையில் கணவன் மீது ஆர்வமிழந்து போகும் மனைவி, இன்னொரு ஆணிடம் ஈர்க்கப்படுவதும், கணவனை விட்டு விலக நினைப்பதும், அதற்கு முன் கணவனை வேவு பார்த்து அவனிடம் ஏதாவது தவற்ருந்தால் தன்னுடைய குற்றவுணர்வில்ருந்து மீளலாம் என்று நினைப்பதும், ஒரு கட்டத்தில் கணவனின் சுயரூபம் தெரிய வர பிரமிப்பதும் எனக்கு என்னவோ ஆர்னோல்ட் நடித்த True Lies படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் கூட இப்படி தான் இஸ்லாமிய தீவிரவாதக் கூட்டத்திடம் கணவரும் மனைவியும் அகப்படுவார்கள். ஆங்கிலப்படத்தில் கணவன் தான் மனைவியை வேவு பார்ப்பார். எனக்கென்னவோ அந்தப் படத்தின் கதையை வைத்து திரித்து கமல் கதை பண்ணியிருப்பது போல ஒரு தோற்றம். அந்த படம் காமெடியும் ஆக்‌ஷனும்..அதையே  கமல் உயிர்ப்புடன் யதார்த்தமும் ஆக்‌ஷனும் கலந்து தந்திருப்பதாக நினைக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் எதிர்ப்பும், தடையும் முதலில் ஆர்னோல்டுக்கு போட்டிருக்க வேண்டும்.

குறை சொல்ல முடியாத முதல் பிரமிப்பு காமிரா தான்...
ஆப்கானின் அடர்ந்த நெடிய மலைத்தொடர்களும்...பாலை மணல்வெளியும் அப்பப்பா..............ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் தோன்றி மறையும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது. அதே போல் அமெரிக்க இராணுவத்திற்கும் அல்கொய்தாவினருக்குமிடையிலான போர் காட்சிகளும், வெடித்துச் சிதறும் கிராமம், மனிதர்கள், NYPD யின் கார் சேஸிங்குக்கும் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை..அத்தனை  சிறப்பு.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் .

அதுவும்  24 மணி நேரமும் எந்த நிமிடம் எங்கு குண்டு வெடிக்கும் எங்கு ஆயுதங்கள் வெடிக்கும் என்று சொல்ல முடியாத பயங்கரவாதமும், ஆயுதப் போராட்டமும் நடக்கும் ஒரு மண்ணில் அந்த மண்ணில் நடக்கும் காட்சிகளையே படம் எடுப்பது என்பது எத்தனை ரிஸ்கான விசயம் ???  உண்மையிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இவை படமாக்கப்பட்டனவா???? அல்லது ஏதும் கம்பியூட்டர் கிராபிக்கா அல்லது இந்தியாவின் ஏதேனும் பகுதிகளா...?? என்று எனக்கு தெரியாது.

இரண்டாவது கமலின் அந்த  கதக் நடன பாட்டு. அந்தப் பாட்டு எடுக்கப்பட்ட விதம் இணையத்தளத்தில் பார்த்த போது உண்மையிலேயே கமல் மீது பரிதாபம் வந்தது..ஒரு பாட்டுக் காட்சியை நிறைவாக எடுக்க இந்த மனுஷன் எத்தனை விதமான முயற்சிகள், ஈடுபாடு, களைப்பு என்று எத்தனையை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அத்தனையும் ஒரு 4 நிமிஷம் வருமா அந்தப் பாடல்...?? அத்தனை எத்தனிப்பும் உழைப்பும் அந்த 4 நிமிஷத்தை மனதில் அழுத்தமாக பதித்துவிட்டு தான் போகும் எதிரிகளுக்கு கூட...முகத்தில் ததும்பும் சிங்காரரசம் உண்மையான பெண்ணுக்கே வருமா என்று சந்தேகம் வர வைக்கிறது..அப்பப்பா...


வழமையான கமலின் முத்தக் காட்சியோ டூயட் பாடலோ கதாநாயகனின் அல்லது கதாநாயகியின் அல்லது வில்லனின் கனவில் கூட  வரவில்லை...என்பது கமலின் மசாலா இரசிகர்களுக்கு  ஏமாற்றம் தான். கதக் நடனப் பாட்டைத் தவிர மற்ற எந்தப் பாடலும் கதாநாயக நாயகியின் வாயசைப்பில் வரவில்லை...எல்லாமே பின்னணியில் தான். நிறைய அரபிக் வசனங்களும் குர்ரான் ஓதலும் படத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேறு என்ன ...வேறு என்ன???
கமல் ஏதாவது படத்தில் எந்த மதத்தையாவது கிண்டல் செய்தே தீருவேன் என்று இருக்கிறாரோ என்னமோ ....இந்தப் படத்தில் பிராமணப் பெண்ணான தன் மனைவிக்கு கோழி ரோஸ்ட் மிகவும் பிடிக்கும் என்று சமைப்பதும் அதை ருசி பார்க்கச் சொல்லி தன் கதக் நடன மாணவி ஒருவரைப் பார்த்து “பாப்பாத்தியம்மா முதல்ல நீயே டேஸ்ட் பண்ணிப் பார்த்து உப்பு காரம் போதுமான்னு சொல்லு” என்று சொல்வதையும் வைத்து இந்துமதத்தையும் பிராமணர்களையும் கிண்டல் பண்ணியதற்காக அடுத்ததாக RSS இயக்கத்தினரோ அல்லது பாஜக வோ கோர்ட் வாசல் படி ஏறினால் கமல் என்ன செய்வாரோ தெரியவில்லை...!

அடுத்து இன்னொரு விசயமும் நான் கிரகித்துக் கொண்டது .... முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம்....ஆனாலும் அதையும் இங்கே தரவே விரும்புகிறேன்...தேவர்மகன் படத்திலிருந்து (ஒருவேளை அதற்கு முன்னதாகக் கூட இருக்கலாம் ஆனால் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது தேவர்மகன் காலத்திலிருந்து தான் )கமலின் ஆஸ்கார் கனவை அவருடைய சீரியஸான படங்களில் அவர் எடுக்கும் முயற்சிகள் வெளிக்காட்டி வருகின்றன என்று சொன்னால் அது பிழையாகாது அல்லவா??  அந்தக் கனவை நனவாக்க இந்த படம் மூலமும் முயற்சி செய்திருக்கிறாரோ என்றும் யோசிக்க வைத்ததற்கு காரணம் அமெரிக்காவுக்கு நிறைய கூழ் அடித்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது போல்......பல காட்சிகள்...கூடவே...அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று செண்டிமெண்ட் வசனம் வேறு...

எல்லாவற்றையும் விட காமெடி இந்திய பிரதமர் போனில் பேசுவது , அமெரிக்காவையே இந்திய உளவாளி காப்பாற்றுவது போன்ற லாஜிக்....  :)  

எல்லையில் இருக்கும் காவலர்கள் தலையையே பக்கத்து வீட்டுக்காரன் கொய்து கொண்டு போவது தெரியாமல் இருப்பதை  இப்படி ஒரு காட்சியை பார்த்ததும் நினைத்தன் விளைவு .............தியேட்டரில் சத்தமாக சிரித்தவள் நானாகத் தான் இருக்கும்...!  பின்லாடனை, The beheading of journalist of Daniel Pearl க்கு ஒப்பான காட்சி, அல்கொய்தாவின் மரணதண்டணை முறை போன்ற நிஜங்களை , புனித போருக்காக தன் பிள்ளைகளை தாரை வார்க்க தயாரான திவிரவாத தலைவன், ஒரு குழந்தையாவது படித்து இந்த சூழலை விட்டு விலக வேண்டுமென்ற தவிப்புடன் ,கணவனுக்கு பயந்த தன் ஆசைகளையும் ,கனவையும் தன் முகத்தை மூடும் துப்பட்டாவின் பின்னால் மூடிவைக்கும் தீவிரவாதத் தலைவனின் மனைவியும், அமெரிக்க இராணுவத்தின்  தாக்குதலில் குடும்பமே அழிந்து போன பின் மகனை அவன் விருப்பப்படி படிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்று  தீவிரவாதத் தலைவன் அரற்றுவதும்...இயல்பாக இருந்ததை மறுக்க முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தலைக்கு மேலே பறக்கும் விமானங்களையும், இராணுவ உடைகளையும், குண்டு வீச்சுகளையும், குண்டுவீச்சில் அழிந்து கிடந்த கிராமத்தையும் , அங்கு எரிந்து கருகிக் கிடந்த மக்களையும் படத்தில் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னாலும் ஈழத்தின் நினைவுகளோடு போராட வைத்து தூங்கவிடாமல் கரைச்சல்படுத்திக் கொண்டிருந்தன என்று சொன்னால் யாரும் நம்புவீர்களோ என்னமோ ஆனால் ஈழத்தமிழர்கள் யாராவது இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் நான் சொல்வதை நம்புவார்கள்...!


படம் பார்க்கும் முன்பு அமெரிக்காவில் படம் பார்த்துவிட்டு எழுதப்பட்ட மற்றவர்களின் விமர்சனங்களை படித்தேன் தம்பி கானா பிரபா அவர்களின் விமர்சனம் உட்பட....

படம் பார்த்த பின்பு மற்றவர்களின் விமர்சன வசனக்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை...கானா பிரபாவின் கடைசி வரிகளைத் தவிர...  
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.

தம்பி கானா பிரபா சொல்வது போன்ற மனநிலையில் இருப்பதால் தான் இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்றால் மூன்றாம் மனிதர்களாக தள்ளிநின்று அவர்களுக்காக பரிதாபப்படவும் அவர்கள் பக்கம் நின்று அவர்களை அரவணைக்கவும் மட்டும் போதாது. அவர்களுடைய அந்த மனநிலையை களைய வைக்க வேண்டிய கடமையும் ஒரே நாட்டுக்குள் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற இலக்கு இருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இருக்க வேண்டும்...அந்த கடமையை உணராமல் ஆதீக்க வெறியுடன் நடக்க முற்பட்டால் என்ன நடக்கும் என்று அனுபவித்த சிறுபான்மையினராக இருந்து என்னால் உணரமுடிகிறது..அதனால் தான் என்னால் கமலின் கருத்துரிமை என்ற ஒன்றைப் பார்க்கிலும் ஒரு சமூகத்தின் உணர்வுகளில் விழுந்துவிட்ட இரணம் சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமாக இருக்கிறது.  அந்த இரணத்தை ஆற்ற வேண்டுமென்ற  கடமையை மறந்துவிட்டு அந்த இரணத்தின் சீழை தமக்கு சாதகமாக்க முனையும் அரசியல்வாதிகள் விரட்டப்பட வேண்டியவர்கள்..எந்த வகையில் விரட்ட வேண்டுமென்ற தீர்வையும் இன்னொரு சினிமா மூலம்  தேடாமல் சுயசிந்தனையுடன் தேட வேண்டியது குடிமக்களின் கடமை.

மேலோட்டமாக இத்தனையும் விபரித்திருப்பது என் பார்வைக் கோணத்தில் கிடைத்த விஸ்வரூபம் மட்டுமே! உண்மையில் என்னுடைய அறிவுக்கு இதற்கு மேல் ஆராயமுடியவில்லை. ஒருவேளை இதை விட நுணுக்கமாக  காழ்ப்புணர்ச்சியோ அல்லது வெறுப்போ இருக்கிறதா என்று என்னால் கண்டுபிடிக்க இயலாதது எனது அறிவின்மையாக இருக்கலாம். ஆனாலும் நானும் என் கருத்தை பகிர்வதால் எந்த கேடும் வராது என்றே நம்புகிறேன்.

தவிர தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான்  இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.

ஹாலிவூட்டிலும் இதை விட மோசமாக இஸ்லாமிய இனத்தவரை சித்தரிக்கும் படங்களை எடுக்கிறார்கள். இந்தியர்களை கிண்டல் செய்து முழு நீளப்படமே எடுத்திருக்கிறார்கள்.. விடுதலைப் புலிகளை  பல படங்களில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களாக வசனங்களில் புகுத்தியிருக்கிறார்கள்...இந்துக்களை கேலி செய்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு உரிய இயேசு கிறிஸ்துவைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.. எல்சபெத் மஹாராணியை லெஸ்லி நெல்ஸன் என்ற நடிகர் தனக்குக் கீழே அகப்பட்டுக் கிடப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார் ஒரு படத்தில்.அப்படி மிகச் சுதந்திரமாக தமக்குத் தோன்றியதை  படமாக்கும் ஹோலிவூட் படங்களை... ஏன்  நம்மால் எதிர்க்க முடியவில்லை...?? அது இயலாத காரியம்

.கனக்க ஏன் சமீபத்தில் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ இனத்தவர் எடுத்த படத்துக்கு எத்தனையோ போராட்டம் நடந்ததே...ஒபாமா வரை அந்த படத்தையிட்டு எச்சரிக்கை விடப்பட்டதே....என்ன பலன்?? ஒபாமாவும் சரி ஹாலிவூட்டும் சரி அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா??? இல்லை!

ஆனால்  யூ-டியூப் முதல் அகில உலகம் முழுக்க இன்று துள்ளாட்டம் ஆடும் gangnam style பாடல் அமெரிக்கர்களை கிண்டல் செய்யும் பாடலாம்.  ஒவ்வொரு நாளும்  அந்தப் பாடலை அமெரிக்காவின் அத்தனை வானொலியும், அத்தனை தொலைக்காட்சியும்  ஒலிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறன.. ஆனால் அந்தப் பாடலைப் பாடிய  பாடகர் ஒரு நாள் அமெரிக்கர்களிடம்  அந்தப் பாடலில் அவர் அவர்களை கிண்டல் செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். என்ன நடந்தது ஏது நடந்தது என்று விபரம் எனக்கு தெரியாது.

ஆக................Hollywood தரத்துக்கு படம் வேண்டும் என்று திரையுலகை எதிர்பார்க்கும் மக்கள் முதலில் தங்கள் இரசனையையும், அலட்சிய மனோபாவத்தையும்  அமெரிக்க மக்கள் மாதிரி் தமக்குள் வளர்த்திருக்க வேண்டும். திரைப்படத்துறையை அங்கே வெறும் எண்டர்டெய்ன்மெண்ட் மீடியாவாக மட்டுமே பார்கிறார்கள். ஆனால் எங்களவர்கள் தான் சமூகப் போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சினிமாவை பார்த்து மறுமலர்ச்சி அடைகிறார்கள். சினிமா நடிகர்களை தேவ தூதர்களாகவும், மீட்பராகவும் வணங்குகிறார்கள்.  இத்தனை காலத்தில் பெரியார் வழியில் போனவர்களைப் பார்க்கிலும் ரஜனிக்கு பின்னால் போனவர்கள் தானே அதிகம்??? -கனக்க ஏன் பெரியாரின் கருத்துகள் கூட சினிமா மூலம் தானே பரப்பப்பட வேண்டியதாயிருந்தது...??

என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை... நான் சினிமாவை வெறும் கூத்தாகவும் நடிகர் நடிகைகளை கூத்துக் கட்டுபவர்களாகவும் மட்டுமே பார்க்கிறேன். அதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதை கேலிக்குரியதாகவும், அவர்களையும் அவர்கள் மேடைகளில் பேசுவதை யும் ஒரு பொருட்டாக எடுக்கவும் விரும்புவதில்லை.. என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசும் குழும சகோதரர்களுக்கு கூட தெரியும் சமீபத்தில் ஈழ விவகாரத்தில் வீர வசனம் பேசும் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் நான் எந்தளவுக்கு வெறுக்கிறேன் என்று.....

என்னை கமலோ ரஜனியோ அல்லது மற்ற நடிகர் நடிகைகளோ தங்கள் படத்தில் சொல்லும் கருத்துகளால் மாற்றிவிட முடியாது. ஈர்க்கவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் எதையும், நான் விரும்பும் எவரையும் இவர்களால் என்னிடமிருந்து பிரிக்க முடியாது. இவர்களை நான் என்றைக்கும் கொண்டாடப் போவதில்லை. இவர்கள் எனக்கு யாரோ ஒரு மூன்றாவது நபர்களே...வெறும் அரிதாரம் பூசும் கூத்துக் கட்டும் கலைஞர்கள்...எனக்கு போரடிக்கும் போது இவர்களுடைய கூத்துகளை  போட்டுப் பார்க்கிறேன். அவ்வளவே....!

அதனால் இவர்கள் என்னையோ என் உணர்வுகளையோ காயப்படுத்த முடியாது.  அந்த விசயத்தில் சினிமாவை நான் வென்றவள்..!

இந்தப் படத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களும் ,தடைகளும், கோர்ட் வழக்குகளும் இல்லாமல் இருந்திருந்தால் 10 நாட்கள் கூட திரையரங்குகளில் தங்கியிருந்திருக்குமா என்பது சந்தேகமே.... ஏன் எனில் இந்த படத்தின் தொழில்நுட்பம் முதல் தயாரிப்பு வையிலான உயரக தராதரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் தமிழக சினிமாரசிகர்களின் பெரும்பான்மையிடம் இருக்குமா என்பது  கேள்விக்குறி. வழமையான தென்னிந்திய திரைப்படங்களின்  பெண்களை  கவர்வதற்கான  சென்டிமென்ட் காட்சிகளோ , கண்ணீர் மல்கும் இடங்களோ அல்லது  காலரி டிக்கட் வரிசைகளை நிரப்பிக் கொன்டு தமது அபிமான நடிகர்களுக்கு ஆரத்தி காட்டும் அப்பாவி ரசிகர்களுக்கான வழமையான தமிழ் படத்தின் எந்தவொரு  சாயலும்  இல்லாத ஒரு ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங் என்று சொல்லுமளவுக்கு படம் இருக்கிறது. இந்தியாவின் எந்தப் பாகமும் ஊரும் மக்களும் இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள் இல்லை . முழுக்க முழுக்க  தலிபான், அல்கொய்தா , ஆப்கானிஸ்தான் என்று அத்தனையும் இந்தியாவுக்கு வெளியால் இருக்கும் ஆனால் உலகை அச்சுறுத்தும்  பயங்கரவாதத்தை பற்றிய கதைக் களமும்,  படமும் தான் இது!!  இன்னும் சொல்லப் போனால் பிளாஸ்மா டிவி , 3டி டிவி என்று அகன்ற டிவிகளுடன் வீட்டிலேயே  போஸ் போல் நல்ல சவுன்ட் ஸிஸ்டங்களுடன் இருக்கும் மேல்தட்டு வர்க்க மக்கள் கூட டிவிடி வரட்டு வீட்டிலேயே அகன்ற திரையில் பார்த்துவிடலாம் என்று தட்டிக் கழித்துவிட்டுப் போகக் கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் தவிர்த்து இன்று இந்தப் படத்தை ஊர் விட்டு ஊர் போயாவது போய் பார்க்க வேண்டுமென்ற அளவுக்கு மக்களை வெறி கொள்ள வைத்தவை படத்தின் கதையோ கமலோ அல்ல. தமிழ அரசின் தடை மட்டுமே!!  கமலுக்கு  கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது. அதை மறைமுகமாக எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டங்களும் தடையும்  வழங்கியிருக்கிறது. :) 

பிற்குறிப்பு: என்னவரிடம் படம் முடிந்ததும் அபிப்பிராயம் கேட்டேன் “படம் எப்படி..?” என்று..மிகவும் அசதியுடன் கேட்டார் ”நீங்கள் என்ர நித்திரையைக் கெடுத்து என்ன  அல்கொய்தா ட்ரெயினிங் காட்டவா கூட்டி வந்தனியள்?”  என்றார். அப்போது தான் புரிந்தது எந்தவித சார்பும் இல்லாத, சினிமா அதிகம் பார்க்காத, சினிமாவினதும் அரசியல் கட்சிகளினதும் சூழ்ச்சி அரசியல் புரியாத அப்பாவியான என்னவரை பலவந்தப்படுத்தி இந்தப் படத்தை பார்க்க வைத்த பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் என்னை சும்மா விடாது...என்று,,!  :) இப்போது அதற்காக மட்டுமே கவலைப்படுகிறேன். :)




Latest News: விஸ்வரூபத்தை வெளியிட முஸ்லீம் பேரவை வேண்டுகோள்!

Friday, July 16, 2010













அன்புடன் குழும நண்பர்களுக்கு!

ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று பதிவுகளாகவாவது எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் போன வருடத்தின் நண்பர்கள் தினத்தில் இந்த தொடரின் முதல் பதிவை தமிழ் பிரவாகம் உட்பட இரண்டொரு குழுமங்களில் வெளியிட்டேன். ஆனால் என்னால் தொடரை தொடர முடியவில்லை..!

பல நிகழ்வுகள்; சூழ்நிலைகள் என்று தடை கற்களாக வந்து இடை நிறுத்தப்பட்டாலும் உண்மையான காரணம் இந்த பதிவில் நான் எழுதவிருக்கும் எந்த ஒவ்வொரு மடலும் புனைவு அல்ல... இது நானும் எனது பள்ளிக் கால தோழியும் சம்மந்தப்பட்ட நட்பின் நினைவுகளை மீட்டெடுத்து பதிவுகளாக - கடிதங்களாக சேமிக்கப்பட்ட உண்மையான அஞ்சல் பெட்டகம் என்பதால் இது எந்தளவுக்கு இதை வாசிக்கப் போகும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்குமென்ற தயக்கமும், சந்தேகமும் தான் முதன்மையான காரணமாக இருந்தது தொடராமல் விட்டதற்கு.

அத்தோடு கடந்த 2005ம் ஆண்டிலிருந்து நான் எனது தோழிக்கு எழுதிக் கொண்டிருக்கும் அவள் இன்னமும் வாசிக்க வாய்ப்புக் கிடைக்காத கடிதங்கள் இவை. மூன்று பதிவேடுகளில் (Journal) எழுதி முடித்தவற்றை திரும்பவும் ஒவ்வொன்றாக தட்டச்சுவது போன்ற கடினம் ,நேரவிரயம் எப்படியிருக்குமென்று நான் சொல்லி விளக்க வேண்டியதில்லை, அத்துடன் ஏற்கனவே எழுதியதை அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி திரும்பவும் என்னால் தட்டச்ச முடியுமா என்பது அடுத்த சந்தேகம். ஏற்கனவே எழுதிய கடிதத்தை தட்டச்சும் போது இடையில் கட்டாயம் ஏதாவது திருத்தம் செய்ய மனமேவும். இன்னொரு உத்தியோ அல்லது அழகான உவமையோ சம்பவமோ நினைவுக்கு வந்தால் இடையில் புகுத்த துருத்தும் எண்ணத்தை என்னால் அவ்வளவு இலேசில் அலட்சியம் செய்ய முடியாது. அப்படி நான் அலட்சியம் செய்த வரலாறே இல்லை. அப்படி திருத்தம் செய்ய முற்படும் போது அந்த கணத்தில் என்ன மனநிலையில் எழுதினேனோ அதன் தாக்கம் இங்கு அழிபட்டுப் போய்விடுமோ என்ற குழப்பம் இன்னொரு காரணம் !

எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் என் தோழிக்கு நான் எழுதும் மடல்களை அந்தரங்கமாக வைத்திருக்க வேண்டுமா? அல்லது அம்பலத்தில் பிரசுரிக்கலாமா என்ற குழப்பம். முகவரி தெரிந்த நட்பின் இருப்பிடமாயிருந்தால் நான் நிச்சயம் இங்கே பதிவு செய்திருக்க மாட்டேன். ஆனால் இது கூட ஒரு வகையில் அவளை, அவளுடைய தற்காலிக முகவரியை தேடுவதற்கான பாதையாக இருக்கட்டுமேன் என்ற நப்பாசையில் தான் இணையத்தில் வலைப் பூவில் பிரசுரிக்கும் முடிவுக்கு வந்தேன். என்னுடைய வலைப் பூவில் பதிக்கும் போது என் குழுமங்களை விட்டுவிட முடியுமா?? (இப்படியாவது உங்களை எல்லாம் கஷ்டப்படுத்த வாய்ப்பு கிடைக்கட்டுமேன் எனக்கும்..) :))

எப்படியோ எல்லாவித குழப்பங்களையும், தயக்கங்களையும், சோம்பேறித்தனத்தையும் ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு. எனது தோழமைக்கு எழுதும் மடல்களை இங்கே பிரசுரிக்கப் போகிறேன்.. இந்தத் தடவையாவது தடங்கல் ஏதுமின்றி இந்த மடலெழுதும் தொடர் செயல் பட வேண்டுமென்ற உறுதியுடன்...தொடங்குகிறேன்.

நன்றி! வணக்கம்!!
அன்புடன்
சுவாதி

Friday, July 18, 2008

தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் - 2008ன் முடிவுகள்.

  1. மரபுக் கவிதைப் பிரிவு.
  2. புதுக்கவிதைப் பிரிவு.
  3. கட்டுரைப் பிரிவு.
  4. சிறுகதைப் பிரிவு.
  5. நகைச் சுவைத் துணுக்கு

ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது.முதற்கண் போட்டியில் பங்கு பற்றிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. எமது அன்பான வேண்டுகோளுக்கிணங்க சிரமம் பாராமல் நடுவர்களாகப் பணியாற்றிய மத்தியஸ்தர பெருமக்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் பல பல............!!!!!!!

மரபுக்கவிதை பிரிவில் முதலாம் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்போட்டிப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெருமதிப்புக்குரிய திருவாளர். வி.சுப்ரமணியம் அவர்கள்.
  • முதலாம் பரிசுக்கு யாரையும் தகுதியூடையவராக நடுவர் தேர்வு செய்யாததால் இரண்டாம் பரிசு "தசாவதாரம் " என்ற மரபுக் கவிதையை எழுதிய திரு.எஸ்.ராஜரிஷி அவர்களுக்கு 1000.00 ரூபா பணமும், 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

புதுக்கவிதைப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெரு மதிப்புக்குரிய திரு ஆஸிப் மீரான் அவர்கள். அவருடைய தேர்வின் படி

  • முதலாம் பரிசு - "ஒரு பனைமரத்தின் கீழே " என்ற கவிதையை அனுப்பிய திரு.ஆர்.நாகப்பன் அவர்களுக்கு.1500.00 ரூபா பணமும், 1500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
  • இரண்டாம் பரிசு - "காத்திருப்பின் வலிகள்" - என்ற கவிதையை அனுப்பிய திரு கோகுலன். (நமது தமிழ் பிரவாகம் குழுமத்தைச் சேர்ந்தவர்.) அவர்களுக்கு 1000.00 பணமும் 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அத்துடன் புதுக் கவிதைப் பிரிவில் நடுவரான திரு.ஆஸிப் மீரான் அவர்கள் இரு சிறப்புப் பரிசுகளை தனது சார்பில் அறிவித்திருக்கிறார். திரு ஆஸிப் மீரான் அவர்கள் வழங்கும் இரு சிறப்புப் பரிசுகளுக்கு உரியவர்கள் :

  • "இங்கு வாழ்கை வாங்க (விற்க)ப்படும்" என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு.சீனிவாசன் ஆளவந்தார் அவர்களுக்கு 500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • "உன் கடந்த காலத்தை உயிர் பெறச் செய்"என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு. ரஞ்சித்ப்ரீத்தன் அவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கட்டுரைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அன்புக்குரிய திருமதி கீதா சாம்பசிவம் அம்மையாரும், மரியாதைக்குரிய பண்டிதர். திரு.வை.சண்முகராஜா அவர்களுமாவர். இப்பிரிவில் நடுவர்களின் மதிப்பீடுகளின் படி

  • சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்கள் எழுதிய "ஈழத் தமிழரும் இந்திய அரசியலும்" என்ற கட்டுரை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்களுக்கு 2500.00 பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
  • திரு .கோகுலன் அவர்கள் எழுதிய "பெண்ணியம்" கட்டுரையும், திருமதி விசாலம் ராமன் எழுதிய "இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?" என்ற இரு கட்டுரைகளும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) இவர்கள் இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

சிறுகதைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் பிரபல எழுத்தாளாரான மதிப்புகுரிய திருவாளார். சுப்பிர பாரதி மணியன் . சிநேகத்துக்குரிய படைப்பாளி திருவாளர் ரசிகவ் ஞானியார், அன்புக்குரிய ஈழத்துப் படைப்பாளி செல்வி மாதுமை சிவசுப்ரமணியம் அவர்களுமாவார்கள். நடுவர்கள் மூவரின் மதிப்பீடுகளின்படி

  • திரு ஆதவா சூர்யா அவர்கள் எழுதிய "ஏனெனத் தெரியாத கணங்கள்"என்ற சிறுகதை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஆதவா சூர்யா அவர்களுக்கு 2500.00 ரூபா பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
  • திரு .சுப்பு ராஜ் அவர்கள் எழுதிய "அங்கு மட்டுமா அந்த சுவர்? " என்ற சிறுகதையும், திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் எழுதிய "பூத்த கொடி பூக்களின்றி" என்ற சிறுகதையும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) ஆகவே இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

நகைச்சுவைத் துணுக்குப் போட்டியில் போதிய அளவில் போட்டியாளர்கள் பங்களிப்பு தராததால் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.

நன்றி! வணக்கம்!

Sunday, March 16, 2008

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008

அன்புடன் நண்பர்கட்கு!
வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம். தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம். வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:
  • சிறுகதை
  • கவிதை
  • கட்டுரை
  • நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.

  • ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் சொந்தக் கற்பனையில் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
  • ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.
  • போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:

  • 1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
  • 2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
  • பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.

சிறுகதை:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
  • ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • நடுவர்களின் முடிவே இறுதியானது.


கட்டுரை:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.
  • ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.

கட்டுரைகளுக்கான தலைப்புகள் :

  • பெண்ணியம்.
  • உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
  • தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
  • உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
  • ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
  • அரசியலில் பொது மக்களின் பங்கு.
  • இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
  • இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
  • மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
  • கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது?
  • தியானம் என்பது....!


நகைச்சுவைத் துணுக்கு:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
  • ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.

கவிதை:

கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.

  1. மரபுக் கவிதை.
  2. புதுக்கவிதை

ஒவ்வொரு பிரிவிலும் :

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • 1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
  • 2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நன்றி !

வணக்கம்!!

இங்ஙனம்

தமிழ் பிரவாகக் குழும நிர்வாகம்.

Saturday, July 28, 2007

நிலாரசிகன் பக்கம்.....

தோழியே உன்னைத் தேடுகின்றேன்...
கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில் விழுகிறதே........
என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...
உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.
என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.
சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர்
இந்த நட்பு.
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய இதயம்
உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.
-நிலாரசிகன்.

திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)

திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)

இறைமை.:

உலகில் அறநூல்கள் என்பன எல்லா மொழிகளிலும் எண்ணிலடங்காத வகையில் நிறைய இயற்றப் பட்டுள்ளன. பொதுவாக எந்தவொரு அற நூலும் அதை இயற்றிய படைப்பாளி சார்ந்திருக்கும் சமயத்தையும் அந்த சமயம் வழிபடும் முழுமுதல் கடவுளையும் அவர்களது சமயக் கோட்பாடுகளை எங்ஙனம் ஒழுக வேண்டும் என்பதுவும் தான் போதிக்கப்படுபவையாக இருக்கும். எந்தவொரு குறிப்ப்பிட்ட சமயச் சர்ர்புமற்ற பொதுமறையாக இயற்றப்பட்ட அறநூல்கள் என்பவை மிக மிக மிக அரிது என்றே கூறலாம். அத்தகைய அரிய நூல்களில் மேன்மையானதும் , முதன்மையானதும் தான் எம்பிரான் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள் ஆகும்.
எந்தச் சமயத்தைச் சார்ந்தவராகா இருப்பினும் அவருக்கு ஏற்ற மாதிரியான பொதுமைக் கருத்துக்களையும் ஒழுகு முறைகளையும் கூறுவது தான் குறளின் சிறப்பு மகிமை என்றால் அது மிகையாகாது.
கடவுள் பற்றிய நம்பிக்கைகள் , கொள்கைகள் , கோட்பாடுகள் மதத்துக்கு மதம் முரண்படவும் , காலத்துக்கேற்றவாறு மாறுபடவும் கூடும். சில தருணங்களில் புது புது சமயங்களும் , விதம் விதமான புது அர்த்தங்களும் கூட உருவாகும்.
ஆனால் திருக்குறளில் திருவள்ளுவர் அருளிய இறைமை அல்லது இறைக் கோட்பாடு, கொள்கை , வழுதல் என்பன எந்தவொரு கால வரையறைகளாலும் , தேசப்பரப்புகளின் எல்லைகளாலும், சூழல் , மொழி, மத முரண்பாடுகளினாலும் , எந் நிலையிலும் பாதிப்படையாத உயரிய கோட்பாடுகளை உரைப்பதாயுள்ளது.
அதாவது.....
இறை என்றால் எங்கும் பரந்த என்ற பொருள் கொள்ளலாம். அல்லது தங்குதல் , எங்கும் நிறைதல் (Immanence) என்னும் பொருள் பட நோக்கின் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஒரு பரம்பொருளின் செறிவையே கடவுள் அல்லது இறைமை என்ற பொருள்படும். மற்றும் இறைமைக்கு தலைமை அல்லது மேலிடம் அல்லது மேன்மையான என்றும் தெய்வாம்சம் , அரசாட்சி, கடவுள், பரப்பு என்றும் சொல்லலாம். ஆனால் சமயங்களையும் சமயவாதிகளையும் பொறுத்தவரை இறைமை என்பது அந்தந்த சமயங்களுக்குரிய முழுமுதற் கடவுளையே குறிக்கின்றன.
காலத்துக்குக் காலம் சமயவாதிகளும் , வேறு பலரும் இறைமை பற்றிய கருத்துக்களையும் , வரைவிலக்கணங்களையும் மாற்றியும் , திரித்தும், முரண்பட்டும் கூறி வந்துள்ளனர். ஆனால் வள்ளுவனாரின் திருக்குறள் ஒன்று தான் இறைமையின் பண்பை உலகமுழுவதுக்கும் உரித்தான எல்லா மதக் கொள்கைக்கும் ஏற்ற வாறாய் பொருந்தத் தகுந்த முறையில் சித்தரிக்கின்றது என்றால் மிகையாகாது.
இறைவன் என்று உருவமில்லாத ஒரு அருவமான பரமாத்மாவையே உலகிலிருக்கும் அத்தனை மதங்களும் சுட்டுகின்றன. "கடவுள்" என்ற பதத்தில் குறிப்பிடப்படும் பரமாத்மா காணுதற்கரியவன், கை தொடாத தூரத்தவன், புலனறியா புதிரானவன்; அவன் மெய்யறிய வேண்டும் எனில் நீ வையகப் பற்றறுத்தாக வேண்டுமென்ற நிபந்தனை கொண்டவன்... இப்படிப் பட்ட கோட்பாடுகளைக் கொண்ட சமயவாதிகளின் அற நெறி நூல்களைப் புறம் தள்ளும் வண்ணம் வள்ளுவர் தன் குறளில் இறைமையின் பண்புகளை இல்லற மாண்பில் கணவன் மனைவிக்குமிடையிலும், காதலில் காதலனுக்கும் காதலிக்கும் இடையிலும் அரசாட்சியில் அரசனுக்கும் மக்களுக்குமிடையிலும், மனிதனின் சிந்தனைத் திறனிலும் , செயல் நேர்மையிலும், வினைத் திட்பத்திலும், பெண்ணின் கற்பு நெறியிலும், தோழனின் நட்பிலும் காட்டுகின்றார்.
இது அவரது முற்போக்கு சிந்தனையின் பரந்த அறிவு ஞானத்தைக் காட்டுகின்றது என்றே சொல்ல வேண்டும்.
இங்ஙனம் பல மேன்மைகளையுடைய திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்து (10) குறள் வீதம் நூற்றி முப்பத்தி மூன்று (133) அதிகாரங்களில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது (1330) குறள்களை கொண்டுள்ளது என்று முன்பு பார்த்தோம்.
இந்த நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களும் அறத்துப் பால், பொருட்பால் , இன்பத்துப்பால் என்று மூன்று முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த முக்கிய பிரிவுகள் தமக்குள் சில உட்பிரிவுகளால் வகுக்கப்பட்டுள்ளன.
அவையாவன அறத்துப் பால் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழியல் என நானகு உட்பிரிவுகளையும் பொருட்பால் அரசியல் , அங்கவியல், ஒழிபியல் என மூன்று உட்பிரிவுகளையும் இன்பத்துப்பால் கற்பியல் , களவியல் என்ற இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டன.
அடுத்து நாம் திருக்குறளின் அறத்துப் பாலின் பாயிரவியல் என்னும் உட்பிரிவின் நான்கு அதிகாரங்களின் சிறப்பினை பற்றி பார்க்கலாம்..

திருக்குறள் ஒரு கண்ணோட்டம்

தமிழ் இலக்கியங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
சங்க இலக்கியம் அற இலக்கியம் சமய இலக்கியம் சிற்றிலக்கியம் தற்கால இலக்கியம்.
இவற்றுள் சங்க இலக்கியமும் அற இலக்கியமும் தலை சிறந்தவையாகவும் மேன்மையானவையாகவும் கருதப்படுகின்றன. இவற்றில் அற இலக்கியங்களில் மேன்மையானதும் முதன்மையானதுமாகக் கருதப்படுவது திருவள்ளுவப் பெருமானால் இயற்றப்பட்ட திருக்குறள் அன்றி வேறில்லையெனலாம்.
மனிதனுக்கு "ஒழுக்கம்" என்பதே முதன்மையான , தேவையான சிறப்பியல்பு அல்லது பண்பு எனக் கொள்ளலாம். ஒழுகு என்ற மூலச் சொல் அல்லது வேர்ச் சொல்லிலிருந்து தோன்றிய பதம் தான் "ஒழுக்கம்" என்பது. ஒழுகு என்பது நட என்னும் பொருள் சுமந்தது. எனவே ஒழுக்கம் என்பதுவும் நடத்தையையே - நல் நடத்தையையே குறிப்பதாகக் கொள்க. ஆகவே நன் நடத்தையாகிய ஒழுக்கம் என்பதை உணர்த்துவதே 'அறம்' என்னும் நெறி எனக் கொள்ளலாம்.
சங்க காலத்தில் இலக்கியங்கள் மக்களுடைய வாழ்கையின் அடிப்படையை வைத்து அக இலக்கியம் , புற இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இயற்றப்பட்டன. புறப் பொருளில் ஒன்றான அறத்தின் சிறப்பைக் கூறும் அற நூல்களை அடுத்த நிலையில் படைத்தனர். இவை அமைப்பு முறையாலும், சொல்லப்படும் கருத்துகளாலும் தனி இலக்கிய வகையாக உருவாகியது. இவற்றை "அற நூல்கள்" என்றழைத்தனர்.
வாழ்கை நெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் படைக்கப் படும் முன்னதாகவே வழக்காற்று ஒழுக்க நெறிகளை (Customary Morality ) கூறும் - மக்களின் அன்றாட வாழ்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் இலக்கியங்கள் தோன்றியிருந்தன. இவற்றை மூதுரை என்றோ முது மொழி என்றோ அல்லது பழமொழி என்றோ அழைக்கப்பட்டன. காலப் போக்கில் அறிவின் பரிணாம வளர்ச்சியின் பயனாக அவற்றில் இருந்து வேறுபட்ட கருத்துச் செறிவும் , வாழ்கைத் த்த்துவங்களும் கொண்ட அற நூல்கள் உருவாகின. இவை மூதுரைகளிலிருந்து வேறுபட்டு சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் தத்துவங்களுக்கும் முக்கியத்துவமளிப்பவையாயிருந்தன எனக் கொள்ளலாம்.
காலத்தால் முந்திய மூதுரையோ , முது மொழியோ அல்லது பழ மொழியோ வழி வையாக வரும் மனித வாழ்வின் பழக்க வழக்கங்களை சுருந்கிய வடிவத்தில் அதாவது ஒரிரு வரிகளில் நயமுறச் சொல்லபவை. இவற்றை விரிவாக்கி ஒரு வரையறை எல்லகளுக்குட்படுத்திக் கூறுபவை தான் அற நூல்களாகும்.
அற நூல்களில் ஒழுக்கம் என்பதையே பிரதானமான கருத்தாகக் கொண்டு எவையெவற்றை செய்யலாம் , எதெதெதை செய்யக்க் கூடாது என்ற வாழ்வியல் நிபந்தனைகளாக பரிணமித்திருக்கும். அற நூல்களை நோக்கும் போது அவற்றின் படைப்பாளிகள் தாம் போதிக்க விரும்பிய கருத்தை வலியுறுத்த மட்டுமே முயன்றிருப்பது தெரியும். கவிதை இலக்கியங்களின் இலக்கணங்களான கற்பனையிலோ அழகியலிலோ (Aesthetics) அவர்கள் கவனம் காட்டாதது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். அவர்களின் படைப்புகளில் முக்கியமாக கருவாக வழக்காற்று ஒழுக்க நெறி மட்டுமே அடிப்படையாய் அமைந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவற்றில் மனித சமூகம் முழுமைக்கும் பயன் தரக்கூடிய அறத்தின் உட்கருத்துக்கள் அருகியே காண்ப்படும்.
ஆனால் "திருக்குறள்" என்ற அரும் பெரும் தமிழ் இலக்கியமானது இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையிலும் , வேறுபட்ட தரத்திலுமிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. திருக்குறளை அற நூலில் சேர்ப்பதைப் பார்க்கிலும் வாழ்வு நூலாகக் கணிப்பதே சாலப் பொருந்தும். ஏனெனில் அறநூல்களில் பெரும்பான்மையானவை மத சார்பான அற் நெறிகளையும், வழிமுறைகளையுமே வாழ்வியலின் நிபந்தனைகளாகவும் விதிகளாகவும் போதிக்கின்றன. ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் மாத்திரமே அற நூலாகவுமிருந்து கொண்டே அதையும் கடந்து தனக்கென்று தனித்தன்மைகளையும் புதுமைகளையும் தன்னகத்தே கொண்டது.
திருக்குறளின் அடித்தளம் தமிழர் பண்பாடாக இருந்த போதும் கூட , குறிப்பிட்ட ஒரு நாட்டவர் என்றோ அல்லது குறிப்பிட்ட இனத்தவர் என்றோ, அதுவுமல்லாது இன்ன, மொழி பேசுபவர், அல்லது இந்த
மதம் சார்ந்தவர், என்ற எல்லகளைக்குட்படாமல் உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் எப்படிப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடிய வாழ்வியல் சிறப்புகளைக் கூறும் ஒரு நூலாகவே இருக்கின்றது.
இந் நூலுக்கு திருக்குறள் என்ற பெயர் வரக் காரணம் யாதெனில்..; திரு என்பதன் அர்த்தம் நாம் யாவரும் அறிந்தது போல் உயரிய, மேன்மை தகுந்த , சிறப்பான, செல்வம், அழகு, என்று பொருள்படும். சிறாந்த படைப்புகளையும் , மேன்மக்களையும் திரு என்ற அடை மொழியிட்டு அழைப்பது வழக்கம். திரு ஞான சம்மந்தர், திரு நாவுக்கரசர், திருமூலர், திருமந்திரம், திருமறை என்பன அதற்ற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். அதே போல் தமிழில் வெண்பா யாப்பிலக்கணத்தில் மிகச் சிறிய , குறுகிய வெண்பாவை குறள் வெண்பா என்றழைப்பர். ஆதலால் மிகக் குறுகிய வெண்பாக்களைக் கொண்ட மேன்மையான உன்னதமான நூல் என்ற சிறப்பினைக் கருதி இந்நூலுக்கு திருக் குறள் என்ற பெயரிடக் காரணமானது.
திருக்குறள் :
அறம் , பொருள் , இன்பம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது.
அறம் எனப்படும் பிரிவு அறத்துப் பால் என்றும் அழைக்கப்படும். இது அற நெறியின் பெருமையையும் மேன்மையையும் அதன் பயன்களையும் எடுத்துரைக்கின்றது.
பொருள் எனப்படும் பொருட்பால் பொருளின் சிறப்பையும் , அதை எப்படி சேமிப்பது ,காப்பது, பங்கிடுவது, பகிர்வது என்ற முறைமைகளையும் சொல்லுகிறது. இதில் அரசியல் நெறிமுறைகள் பற்றியும் , சமுதாயக் கருத்துகளையும் , வரைவிலக்கணங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
இன்பம் என்ற காமத்துப்பாலில் காதலர்களின் அன்பும் அதன் வெளிப்பாடுகளும், விளுமியங்களும், காதலர்கள் காதலில் காட்டும் ஈடுபாடும், அவர்களின் மனப் போக்கும் மிகச் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்கள் வீதம் 1330 வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வெண்பாவும் இரண்டடிகள் உடையன. திருக்குறளில் ஒவ்வொரு பிரிவும் இயல் என்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
அறத்துப் பால் பாயிர இயல் இல்லற இயல் துறவற இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
பொருட்பால் அரசு இயல் அங்கம் இயல் ஒழிபு இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
காமத்துப்பால் களவு இயல் கற்பு இயல் ஆகிய இரு உட்பிரிவுகளுடையது.
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்றாலும் இற்றைக் காலத்திலும் கூட எந்தவொரு காலாச்சாரம் சார்ந்த அல்லது எத்தகைய நாகரீகத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு தனிமனுதனுடடய வாழ்வியலுக்கும் பொருந்துவதாக அமையப் பெற்றுள்ளதே அதன் மேன்மையான சிறப்பாகும்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியலின் மேன்மை பற்றிய கருத்துக்களைக் கூறுவதன் மூலம் வாழ்கைக்கு ஒரு வழிகாட்டியாகவே பயன் தருகின்றது.
அத்துடன் தமிழ்ப் புலவரான திருவள்ளுவப் பெருமான் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் தான் அருளிய திருக்குறள் என்ற தமிழ் இலக்கியத்தில் இரு இடத்திலேனும் , ஒரு குறளிலேனும் தமிழ் என்றோ தமிழர் என்றோ அல்லது தமிழ் நாடென்றோ அல்லாமல் , தமிழ் நாட்டவர் என்றோ ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்பதில் இருந்து அவர் இந் நூலை உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை கூறுவதே அவர் தம் நோக்கம் என்பதை திருக்குறளின் சிறப்பியல்பாகப் படைத்திருக்கின்றார் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது எனலாம்.
இதனால் திருக்குறளை உலகின் எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழி பேசும் மனிதரை திருக்குறளின் கருத்துக்களும் அற நெறிகளும் சென்றடைவதோடு அவர்களுக்கும் திருக்குறள் சொந்தமாகிவிடுகின்றது என்பது அதன் சிறப்பியல்பல்லவா?
திருக்குறளின் தொன்மையையும் , மேன்மையையும் , அதன் சிறப்பியல்புகளையும் படித்துணர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியாரான ஜோஸப் பெஸ்கி என்பவரே இலத்தீன் மொழியில் திருக்குறளை முதன் முதலாக மொழி பெயர்த்தார். அதன் பின்னால் பலரும் உலகின் பல் வேறு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்தனர். அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட விவிலியன் நூலுக்கு அடுத்த படியாக உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்குச் சேரும்.
இது வரை திருக்குறள் வங்காளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம்,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராஷ்டிரா, தெலுங்கு, உருது ஆகிய இந்திய மொழிகளிலும் , அரபு மொழி, பர்மீய மொழி, சீன மொழி,, ஜப்பானிய மொழி, மலாய் மொழி, சிங்களம், பிஜியன் ஆகிய ஆசிய மொழிகளிலும், ஆர்மேனியம், செக்கோஸ்லோவாக்கைய மொழி, டச்சு, ஆங்கிலம், பின்னிஸ் மொழி, பிரஞ்சு, , ஜெர்மன் மொழி, இலத்தீன், போலந்து மொழி, உருசியன் மொழி, ஸ்வீடிஸ் மொழி , இத்தலியன் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் இனி மேல் தொடர்ந்து கவனிப்போம்.
நன்றி!