Saturday, July 28, 2007

திருக்குறள் ஒரு கண்ணோட்டம்

தமிழ் இலக்கியங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
சங்க இலக்கியம் அற இலக்கியம் சமய இலக்கியம் சிற்றிலக்கியம் தற்கால இலக்கியம்.
இவற்றுள் சங்க இலக்கியமும் அற இலக்கியமும் தலை சிறந்தவையாகவும் மேன்மையானவையாகவும் கருதப்படுகின்றன. இவற்றில் அற இலக்கியங்களில் மேன்மையானதும் முதன்மையானதுமாகக் கருதப்படுவது திருவள்ளுவப் பெருமானால் இயற்றப்பட்ட திருக்குறள் அன்றி வேறில்லையெனலாம்.
மனிதனுக்கு "ஒழுக்கம்" என்பதே முதன்மையான , தேவையான சிறப்பியல்பு அல்லது பண்பு எனக் கொள்ளலாம். ஒழுகு என்ற மூலச் சொல் அல்லது வேர்ச் சொல்லிலிருந்து தோன்றிய பதம் தான் "ஒழுக்கம்" என்பது. ஒழுகு என்பது நட என்னும் பொருள் சுமந்தது. எனவே ஒழுக்கம் என்பதுவும் நடத்தையையே - நல் நடத்தையையே குறிப்பதாகக் கொள்க. ஆகவே நன் நடத்தையாகிய ஒழுக்கம் என்பதை உணர்த்துவதே 'அறம்' என்னும் நெறி எனக் கொள்ளலாம்.
சங்க காலத்தில் இலக்கியங்கள் மக்களுடைய வாழ்கையின் அடிப்படையை வைத்து அக இலக்கியம் , புற இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இயற்றப்பட்டன. புறப் பொருளில் ஒன்றான அறத்தின் சிறப்பைக் கூறும் அற நூல்களை அடுத்த நிலையில் படைத்தனர். இவை அமைப்பு முறையாலும், சொல்லப்படும் கருத்துகளாலும் தனி இலக்கிய வகையாக உருவாகியது. இவற்றை "அற நூல்கள்" என்றழைத்தனர்.
வாழ்கை நெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் படைக்கப் படும் முன்னதாகவே வழக்காற்று ஒழுக்க நெறிகளை (Customary Morality ) கூறும் - மக்களின் அன்றாட வாழ்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் இலக்கியங்கள் தோன்றியிருந்தன. இவற்றை மூதுரை என்றோ முது மொழி என்றோ அல்லது பழமொழி என்றோ அழைக்கப்பட்டன. காலப் போக்கில் அறிவின் பரிணாம வளர்ச்சியின் பயனாக அவற்றில் இருந்து வேறுபட்ட கருத்துச் செறிவும் , வாழ்கைத் த்த்துவங்களும் கொண்ட அற நூல்கள் உருவாகின. இவை மூதுரைகளிலிருந்து வேறுபட்டு சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் தத்துவங்களுக்கும் முக்கியத்துவமளிப்பவையாயிருந்தன எனக் கொள்ளலாம்.
காலத்தால் முந்திய மூதுரையோ , முது மொழியோ அல்லது பழ மொழியோ வழி வையாக வரும் மனித வாழ்வின் பழக்க வழக்கங்களை சுருந்கிய வடிவத்தில் அதாவது ஒரிரு வரிகளில் நயமுறச் சொல்லபவை. இவற்றை விரிவாக்கி ஒரு வரையறை எல்லகளுக்குட்படுத்திக் கூறுபவை தான் அற நூல்களாகும்.
அற நூல்களில் ஒழுக்கம் என்பதையே பிரதானமான கருத்தாகக் கொண்டு எவையெவற்றை செய்யலாம் , எதெதெதை செய்யக்க் கூடாது என்ற வாழ்வியல் நிபந்தனைகளாக பரிணமித்திருக்கும். அற நூல்களை நோக்கும் போது அவற்றின் படைப்பாளிகள் தாம் போதிக்க விரும்பிய கருத்தை வலியுறுத்த மட்டுமே முயன்றிருப்பது தெரியும். கவிதை இலக்கியங்களின் இலக்கணங்களான கற்பனையிலோ அழகியலிலோ (Aesthetics) அவர்கள் கவனம் காட்டாதது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். அவர்களின் படைப்புகளில் முக்கியமாக கருவாக வழக்காற்று ஒழுக்க நெறி மட்டுமே அடிப்படையாய் அமைந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவற்றில் மனித சமூகம் முழுமைக்கும் பயன் தரக்கூடிய அறத்தின் உட்கருத்துக்கள் அருகியே காண்ப்படும்.
ஆனால் "திருக்குறள்" என்ற அரும் பெரும் தமிழ் இலக்கியமானது இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையிலும் , வேறுபட்ட தரத்திலுமிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. திருக்குறளை அற நூலில் சேர்ப்பதைப் பார்க்கிலும் வாழ்வு நூலாகக் கணிப்பதே சாலப் பொருந்தும். ஏனெனில் அறநூல்களில் பெரும்பான்மையானவை மத சார்பான அற் நெறிகளையும், வழிமுறைகளையுமே வாழ்வியலின் நிபந்தனைகளாகவும் விதிகளாகவும் போதிக்கின்றன. ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் மாத்திரமே அற நூலாகவுமிருந்து கொண்டே அதையும் கடந்து தனக்கென்று தனித்தன்மைகளையும் புதுமைகளையும் தன்னகத்தே கொண்டது.
திருக்குறளின் அடித்தளம் தமிழர் பண்பாடாக இருந்த போதும் கூட , குறிப்பிட்ட ஒரு நாட்டவர் என்றோ அல்லது குறிப்பிட்ட இனத்தவர் என்றோ, அதுவுமல்லாது இன்ன, மொழி பேசுபவர், அல்லது இந்த
மதம் சார்ந்தவர், என்ற எல்லகளைக்குட்படாமல் உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் எப்படிப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடிய வாழ்வியல் சிறப்புகளைக் கூறும் ஒரு நூலாகவே இருக்கின்றது.
இந் நூலுக்கு திருக்குறள் என்ற பெயர் வரக் காரணம் யாதெனில்..; திரு என்பதன் அர்த்தம் நாம் யாவரும் அறிந்தது போல் உயரிய, மேன்மை தகுந்த , சிறப்பான, செல்வம், அழகு, என்று பொருள்படும். சிறாந்த படைப்புகளையும் , மேன்மக்களையும் திரு என்ற அடை மொழியிட்டு அழைப்பது வழக்கம். திரு ஞான சம்மந்தர், திரு நாவுக்கரசர், திருமூலர், திருமந்திரம், திருமறை என்பன அதற்ற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். அதே போல் தமிழில் வெண்பா யாப்பிலக்கணத்தில் மிகச் சிறிய , குறுகிய வெண்பாவை குறள் வெண்பா என்றழைப்பர். ஆதலால் மிகக் குறுகிய வெண்பாக்களைக் கொண்ட மேன்மையான உன்னதமான நூல் என்ற சிறப்பினைக் கருதி இந்நூலுக்கு திருக் குறள் என்ற பெயரிடக் காரணமானது.
திருக்குறள் :
அறம் , பொருள் , இன்பம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது.
அறம் எனப்படும் பிரிவு அறத்துப் பால் என்றும் அழைக்கப்படும். இது அற நெறியின் பெருமையையும் மேன்மையையும் அதன் பயன்களையும் எடுத்துரைக்கின்றது.
பொருள் எனப்படும் பொருட்பால் பொருளின் சிறப்பையும் , அதை எப்படி சேமிப்பது ,காப்பது, பங்கிடுவது, பகிர்வது என்ற முறைமைகளையும் சொல்லுகிறது. இதில் அரசியல் நெறிமுறைகள் பற்றியும் , சமுதாயக் கருத்துகளையும் , வரைவிலக்கணங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
இன்பம் என்ற காமத்துப்பாலில் காதலர்களின் அன்பும் அதன் வெளிப்பாடுகளும், விளுமியங்களும், காதலர்கள் காதலில் காட்டும் ஈடுபாடும், அவர்களின் மனப் போக்கும் மிகச் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்கள் வீதம் 1330 வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வெண்பாவும் இரண்டடிகள் உடையன. திருக்குறளில் ஒவ்வொரு பிரிவும் இயல் என்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
அறத்துப் பால் பாயிர இயல் இல்லற இயல் துறவற இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
பொருட்பால் அரசு இயல் அங்கம் இயல் ஒழிபு இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
காமத்துப்பால் களவு இயல் கற்பு இயல் ஆகிய இரு உட்பிரிவுகளுடையது.
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்றாலும் இற்றைக் காலத்திலும் கூட எந்தவொரு காலாச்சாரம் சார்ந்த அல்லது எத்தகைய நாகரீகத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு தனிமனுதனுடடய வாழ்வியலுக்கும் பொருந்துவதாக அமையப் பெற்றுள்ளதே அதன் மேன்மையான சிறப்பாகும்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியலின் மேன்மை பற்றிய கருத்துக்களைக் கூறுவதன் மூலம் வாழ்கைக்கு ஒரு வழிகாட்டியாகவே பயன் தருகின்றது.
அத்துடன் தமிழ்ப் புலவரான திருவள்ளுவப் பெருமான் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் தான் அருளிய திருக்குறள் என்ற தமிழ் இலக்கியத்தில் இரு இடத்திலேனும் , ஒரு குறளிலேனும் தமிழ் என்றோ தமிழர் என்றோ அல்லது தமிழ் நாடென்றோ அல்லாமல் , தமிழ் நாட்டவர் என்றோ ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்பதில் இருந்து அவர் இந் நூலை உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை கூறுவதே அவர் தம் நோக்கம் என்பதை திருக்குறளின் சிறப்பியல்பாகப் படைத்திருக்கின்றார் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது எனலாம்.
இதனால் திருக்குறளை உலகின் எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழி பேசும் மனிதரை திருக்குறளின் கருத்துக்களும் அற நெறிகளும் சென்றடைவதோடு அவர்களுக்கும் திருக்குறள் சொந்தமாகிவிடுகின்றது என்பது அதன் சிறப்பியல்பல்லவா?
திருக்குறளின் தொன்மையையும் , மேன்மையையும் , அதன் சிறப்பியல்புகளையும் படித்துணர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியாரான ஜோஸப் பெஸ்கி என்பவரே இலத்தீன் மொழியில் திருக்குறளை முதன் முதலாக மொழி பெயர்த்தார். அதன் பின்னால் பலரும் உலகின் பல் வேறு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்தனர். அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட விவிலியன் நூலுக்கு அடுத்த படியாக உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்குச் சேரும்.
இது வரை திருக்குறள் வங்காளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம்,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராஷ்டிரா, தெலுங்கு, உருது ஆகிய இந்திய மொழிகளிலும் , அரபு மொழி, பர்மீய மொழி, சீன மொழி,, ஜப்பானிய மொழி, மலாய் மொழி, சிங்களம், பிஜியன் ஆகிய ஆசிய மொழிகளிலும், ஆர்மேனியம், செக்கோஸ்லோவாக்கைய மொழி, டச்சு, ஆங்கிலம், பின்னிஸ் மொழி, பிரஞ்சு, , ஜெர்மன் மொழி, இலத்தீன், போலந்து மொழி, உருசியன் மொழி, ஸ்வீடிஸ் மொழி , இத்தலியன் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் இனி மேல் தொடர்ந்து கவனிப்போம்.
நன்றி!

1 comment:

Vaitheez said...

Ah... Nice!!!This is what I want...
Thanx a lot..