Saturday, July 28, 2007

திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)

திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)

இறைமை.:

உலகில் அறநூல்கள் என்பன எல்லா மொழிகளிலும் எண்ணிலடங்காத வகையில் நிறைய இயற்றப் பட்டுள்ளன. பொதுவாக எந்தவொரு அற நூலும் அதை இயற்றிய படைப்பாளி சார்ந்திருக்கும் சமயத்தையும் அந்த சமயம் வழிபடும் முழுமுதல் கடவுளையும் அவர்களது சமயக் கோட்பாடுகளை எங்ஙனம் ஒழுக வேண்டும் என்பதுவும் தான் போதிக்கப்படுபவையாக இருக்கும். எந்தவொரு குறிப்ப்பிட்ட சமயச் சர்ர்புமற்ற பொதுமறையாக இயற்றப்பட்ட அறநூல்கள் என்பவை மிக மிக மிக அரிது என்றே கூறலாம். அத்தகைய அரிய நூல்களில் மேன்மையானதும் , முதன்மையானதும் தான் எம்பிரான் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள் ஆகும்.
எந்தச் சமயத்தைச் சார்ந்தவராகா இருப்பினும் அவருக்கு ஏற்ற மாதிரியான பொதுமைக் கருத்துக்களையும் ஒழுகு முறைகளையும் கூறுவது தான் குறளின் சிறப்பு மகிமை என்றால் அது மிகையாகாது.
கடவுள் பற்றிய நம்பிக்கைகள் , கொள்கைகள் , கோட்பாடுகள் மதத்துக்கு மதம் முரண்படவும் , காலத்துக்கேற்றவாறு மாறுபடவும் கூடும். சில தருணங்களில் புது புது சமயங்களும் , விதம் விதமான புது அர்த்தங்களும் கூட உருவாகும்.
ஆனால் திருக்குறளில் திருவள்ளுவர் அருளிய இறைமை அல்லது இறைக் கோட்பாடு, கொள்கை , வழுதல் என்பன எந்தவொரு கால வரையறைகளாலும் , தேசப்பரப்புகளின் எல்லைகளாலும், சூழல் , மொழி, மத முரண்பாடுகளினாலும் , எந் நிலையிலும் பாதிப்படையாத உயரிய கோட்பாடுகளை உரைப்பதாயுள்ளது.
அதாவது.....
இறை என்றால் எங்கும் பரந்த என்ற பொருள் கொள்ளலாம். அல்லது தங்குதல் , எங்கும் நிறைதல் (Immanence) என்னும் பொருள் பட நோக்கின் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஒரு பரம்பொருளின் செறிவையே கடவுள் அல்லது இறைமை என்ற பொருள்படும். மற்றும் இறைமைக்கு தலைமை அல்லது மேலிடம் அல்லது மேன்மையான என்றும் தெய்வாம்சம் , அரசாட்சி, கடவுள், பரப்பு என்றும் சொல்லலாம். ஆனால் சமயங்களையும் சமயவாதிகளையும் பொறுத்தவரை இறைமை என்பது அந்தந்த சமயங்களுக்குரிய முழுமுதற் கடவுளையே குறிக்கின்றன.
காலத்துக்குக் காலம் சமயவாதிகளும் , வேறு பலரும் இறைமை பற்றிய கருத்துக்களையும் , வரைவிலக்கணங்களையும் மாற்றியும் , திரித்தும், முரண்பட்டும் கூறி வந்துள்ளனர். ஆனால் வள்ளுவனாரின் திருக்குறள் ஒன்று தான் இறைமையின் பண்பை உலகமுழுவதுக்கும் உரித்தான எல்லா மதக் கொள்கைக்கும் ஏற்ற வாறாய் பொருந்தத் தகுந்த முறையில் சித்தரிக்கின்றது என்றால் மிகையாகாது.
இறைவன் என்று உருவமில்லாத ஒரு அருவமான பரமாத்மாவையே உலகிலிருக்கும் அத்தனை மதங்களும் சுட்டுகின்றன. "கடவுள்" என்ற பதத்தில் குறிப்பிடப்படும் பரமாத்மா காணுதற்கரியவன், கை தொடாத தூரத்தவன், புலனறியா புதிரானவன்; அவன் மெய்யறிய வேண்டும் எனில் நீ வையகப் பற்றறுத்தாக வேண்டுமென்ற நிபந்தனை கொண்டவன்... இப்படிப் பட்ட கோட்பாடுகளைக் கொண்ட சமயவாதிகளின் அற நெறி நூல்களைப் புறம் தள்ளும் வண்ணம் வள்ளுவர் தன் குறளில் இறைமையின் பண்புகளை இல்லற மாண்பில் கணவன் மனைவிக்குமிடையிலும், காதலில் காதலனுக்கும் காதலிக்கும் இடையிலும் அரசாட்சியில் அரசனுக்கும் மக்களுக்குமிடையிலும், மனிதனின் சிந்தனைத் திறனிலும் , செயல் நேர்மையிலும், வினைத் திட்பத்திலும், பெண்ணின் கற்பு நெறியிலும், தோழனின் நட்பிலும் காட்டுகின்றார்.
இது அவரது முற்போக்கு சிந்தனையின் பரந்த அறிவு ஞானத்தைக் காட்டுகின்றது என்றே சொல்ல வேண்டும்.
இங்ஙனம் பல மேன்மைகளையுடைய திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்து (10) குறள் வீதம் நூற்றி முப்பத்தி மூன்று (133) அதிகாரங்களில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது (1330) குறள்களை கொண்டுள்ளது என்று முன்பு பார்த்தோம்.
இந்த நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களும் அறத்துப் பால், பொருட்பால் , இன்பத்துப்பால் என்று மூன்று முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த முக்கிய பிரிவுகள் தமக்குள் சில உட்பிரிவுகளால் வகுக்கப்பட்டுள்ளன.
அவையாவன அறத்துப் பால் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழியல் என நானகு உட்பிரிவுகளையும் பொருட்பால் அரசியல் , அங்கவியல், ஒழிபியல் என மூன்று உட்பிரிவுகளையும் இன்பத்துப்பால் கற்பியல் , களவியல் என்ற இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டன.
அடுத்து நாம் திருக்குறளின் அறத்துப் பாலின் பாயிரவியல் என்னும் உட்பிரிவின் நான்கு அதிகாரங்களின் சிறப்பினை பற்றி பார்க்கலாம்..

1 comment:

இது என் சங்கப்பலகை said...

வணக்கம் ஸ்வாதி.,
மிக சீரிய பார்வை மட்டுமல்ல,இக்காலத்துக்கு தேவையான பார்வை. இக்குழுமத்தில் இணைந்துள்ளேன்.
வள்ளுவன் பற்றிய ஒரு கட்டுரையும் அனுப்பி உள்ளேன்.
தமிழோடு வளர்வோம்.

தமிழன்புடன்
வெங்கட்.தாயுமானவன்