Saturday, July 28, 2007

நிலாரசிகன் பக்கம்.....

தோழியே உன்னைத் தேடுகின்றேன்...
கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில் விழுகிறதே........
என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...
உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.
என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.
சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர்
இந்த நட்பு.
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய இதயம்
உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.
-நிலாரசிகன்.

திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)

திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)

இறைமை.:

உலகில் அறநூல்கள் என்பன எல்லா மொழிகளிலும் எண்ணிலடங்காத வகையில் நிறைய இயற்றப் பட்டுள்ளன. பொதுவாக எந்தவொரு அற நூலும் அதை இயற்றிய படைப்பாளி சார்ந்திருக்கும் சமயத்தையும் அந்த சமயம் வழிபடும் முழுமுதல் கடவுளையும் அவர்களது சமயக் கோட்பாடுகளை எங்ஙனம் ஒழுக வேண்டும் என்பதுவும் தான் போதிக்கப்படுபவையாக இருக்கும். எந்தவொரு குறிப்ப்பிட்ட சமயச் சர்ர்புமற்ற பொதுமறையாக இயற்றப்பட்ட அறநூல்கள் என்பவை மிக மிக மிக அரிது என்றே கூறலாம். அத்தகைய அரிய நூல்களில் மேன்மையானதும் , முதன்மையானதும் தான் எம்பிரான் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள் ஆகும்.
எந்தச் சமயத்தைச் சார்ந்தவராகா இருப்பினும் அவருக்கு ஏற்ற மாதிரியான பொதுமைக் கருத்துக்களையும் ஒழுகு முறைகளையும் கூறுவது தான் குறளின் சிறப்பு மகிமை என்றால் அது மிகையாகாது.
கடவுள் பற்றிய நம்பிக்கைகள் , கொள்கைகள் , கோட்பாடுகள் மதத்துக்கு மதம் முரண்படவும் , காலத்துக்கேற்றவாறு மாறுபடவும் கூடும். சில தருணங்களில் புது புது சமயங்களும் , விதம் விதமான புது அர்த்தங்களும் கூட உருவாகும்.
ஆனால் திருக்குறளில் திருவள்ளுவர் அருளிய இறைமை அல்லது இறைக் கோட்பாடு, கொள்கை , வழுதல் என்பன எந்தவொரு கால வரையறைகளாலும் , தேசப்பரப்புகளின் எல்லைகளாலும், சூழல் , மொழி, மத முரண்பாடுகளினாலும் , எந் நிலையிலும் பாதிப்படையாத உயரிய கோட்பாடுகளை உரைப்பதாயுள்ளது.
அதாவது.....
இறை என்றால் எங்கும் பரந்த என்ற பொருள் கொள்ளலாம். அல்லது தங்குதல் , எங்கும் நிறைதல் (Immanence) என்னும் பொருள் பட நோக்கின் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஒரு பரம்பொருளின் செறிவையே கடவுள் அல்லது இறைமை என்ற பொருள்படும். மற்றும் இறைமைக்கு தலைமை அல்லது மேலிடம் அல்லது மேன்மையான என்றும் தெய்வாம்சம் , அரசாட்சி, கடவுள், பரப்பு என்றும் சொல்லலாம். ஆனால் சமயங்களையும் சமயவாதிகளையும் பொறுத்தவரை இறைமை என்பது அந்தந்த சமயங்களுக்குரிய முழுமுதற் கடவுளையே குறிக்கின்றன.
காலத்துக்குக் காலம் சமயவாதிகளும் , வேறு பலரும் இறைமை பற்றிய கருத்துக்களையும் , வரைவிலக்கணங்களையும் மாற்றியும் , திரித்தும், முரண்பட்டும் கூறி வந்துள்ளனர். ஆனால் வள்ளுவனாரின் திருக்குறள் ஒன்று தான் இறைமையின் பண்பை உலகமுழுவதுக்கும் உரித்தான எல்லா மதக் கொள்கைக்கும் ஏற்ற வாறாய் பொருந்தத் தகுந்த முறையில் சித்தரிக்கின்றது என்றால் மிகையாகாது.
இறைவன் என்று உருவமில்லாத ஒரு அருவமான பரமாத்மாவையே உலகிலிருக்கும் அத்தனை மதங்களும் சுட்டுகின்றன. "கடவுள்" என்ற பதத்தில் குறிப்பிடப்படும் பரமாத்மா காணுதற்கரியவன், கை தொடாத தூரத்தவன், புலனறியா புதிரானவன்; அவன் மெய்யறிய வேண்டும் எனில் நீ வையகப் பற்றறுத்தாக வேண்டுமென்ற நிபந்தனை கொண்டவன்... இப்படிப் பட்ட கோட்பாடுகளைக் கொண்ட சமயவாதிகளின் அற நெறி நூல்களைப் புறம் தள்ளும் வண்ணம் வள்ளுவர் தன் குறளில் இறைமையின் பண்புகளை இல்லற மாண்பில் கணவன் மனைவிக்குமிடையிலும், காதலில் காதலனுக்கும் காதலிக்கும் இடையிலும் அரசாட்சியில் அரசனுக்கும் மக்களுக்குமிடையிலும், மனிதனின் சிந்தனைத் திறனிலும் , செயல் நேர்மையிலும், வினைத் திட்பத்திலும், பெண்ணின் கற்பு நெறியிலும், தோழனின் நட்பிலும் காட்டுகின்றார்.
இது அவரது முற்போக்கு சிந்தனையின் பரந்த அறிவு ஞானத்தைக் காட்டுகின்றது என்றே சொல்ல வேண்டும்.
இங்ஙனம் பல மேன்மைகளையுடைய திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்து (10) குறள் வீதம் நூற்றி முப்பத்தி மூன்று (133) அதிகாரங்களில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது (1330) குறள்களை கொண்டுள்ளது என்று முன்பு பார்த்தோம்.
இந்த நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களும் அறத்துப் பால், பொருட்பால் , இன்பத்துப்பால் என்று மூன்று முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த முக்கிய பிரிவுகள் தமக்குள் சில உட்பிரிவுகளால் வகுக்கப்பட்டுள்ளன.
அவையாவன அறத்துப் பால் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழியல் என நானகு உட்பிரிவுகளையும் பொருட்பால் அரசியல் , அங்கவியல், ஒழிபியல் என மூன்று உட்பிரிவுகளையும் இன்பத்துப்பால் கற்பியல் , களவியல் என்ற இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டன.
அடுத்து நாம் திருக்குறளின் அறத்துப் பாலின் பாயிரவியல் என்னும் உட்பிரிவின் நான்கு அதிகாரங்களின் சிறப்பினை பற்றி பார்க்கலாம்..

திருக்குறள் ஒரு கண்ணோட்டம்

தமிழ் இலக்கியங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
சங்க இலக்கியம் அற இலக்கியம் சமய இலக்கியம் சிற்றிலக்கியம் தற்கால இலக்கியம்.
இவற்றுள் சங்க இலக்கியமும் அற இலக்கியமும் தலை சிறந்தவையாகவும் மேன்மையானவையாகவும் கருதப்படுகின்றன. இவற்றில் அற இலக்கியங்களில் மேன்மையானதும் முதன்மையானதுமாகக் கருதப்படுவது திருவள்ளுவப் பெருமானால் இயற்றப்பட்ட திருக்குறள் அன்றி வேறில்லையெனலாம்.
மனிதனுக்கு "ஒழுக்கம்" என்பதே முதன்மையான , தேவையான சிறப்பியல்பு அல்லது பண்பு எனக் கொள்ளலாம். ஒழுகு என்ற மூலச் சொல் அல்லது வேர்ச் சொல்லிலிருந்து தோன்றிய பதம் தான் "ஒழுக்கம்" என்பது. ஒழுகு என்பது நட என்னும் பொருள் சுமந்தது. எனவே ஒழுக்கம் என்பதுவும் நடத்தையையே - நல் நடத்தையையே குறிப்பதாகக் கொள்க. ஆகவே நன் நடத்தையாகிய ஒழுக்கம் என்பதை உணர்த்துவதே 'அறம்' என்னும் நெறி எனக் கொள்ளலாம்.
சங்க காலத்தில் இலக்கியங்கள் மக்களுடைய வாழ்கையின் அடிப்படையை வைத்து அக இலக்கியம் , புற இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இயற்றப்பட்டன. புறப் பொருளில் ஒன்றான அறத்தின் சிறப்பைக் கூறும் அற நூல்களை அடுத்த நிலையில் படைத்தனர். இவை அமைப்பு முறையாலும், சொல்லப்படும் கருத்துகளாலும் தனி இலக்கிய வகையாக உருவாகியது. இவற்றை "அற நூல்கள்" என்றழைத்தனர்.
வாழ்கை நெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் படைக்கப் படும் முன்னதாகவே வழக்காற்று ஒழுக்க நெறிகளை (Customary Morality ) கூறும் - மக்களின் அன்றாட வாழ்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் இலக்கியங்கள் தோன்றியிருந்தன. இவற்றை மூதுரை என்றோ முது மொழி என்றோ அல்லது பழமொழி என்றோ அழைக்கப்பட்டன. காலப் போக்கில் அறிவின் பரிணாம வளர்ச்சியின் பயனாக அவற்றில் இருந்து வேறுபட்ட கருத்துச் செறிவும் , வாழ்கைத் த்த்துவங்களும் கொண்ட அற நூல்கள் உருவாகின. இவை மூதுரைகளிலிருந்து வேறுபட்டு சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் தத்துவங்களுக்கும் முக்கியத்துவமளிப்பவையாயிருந்தன எனக் கொள்ளலாம்.
காலத்தால் முந்திய மூதுரையோ , முது மொழியோ அல்லது பழ மொழியோ வழி வையாக வரும் மனித வாழ்வின் பழக்க வழக்கங்களை சுருந்கிய வடிவத்தில் அதாவது ஒரிரு வரிகளில் நயமுறச் சொல்லபவை. இவற்றை விரிவாக்கி ஒரு வரையறை எல்லகளுக்குட்படுத்திக் கூறுபவை தான் அற நூல்களாகும்.
அற நூல்களில் ஒழுக்கம் என்பதையே பிரதானமான கருத்தாகக் கொண்டு எவையெவற்றை செய்யலாம் , எதெதெதை செய்யக்க் கூடாது என்ற வாழ்வியல் நிபந்தனைகளாக பரிணமித்திருக்கும். அற நூல்களை நோக்கும் போது அவற்றின் படைப்பாளிகள் தாம் போதிக்க விரும்பிய கருத்தை வலியுறுத்த மட்டுமே முயன்றிருப்பது தெரியும். கவிதை இலக்கியங்களின் இலக்கணங்களான கற்பனையிலோ அழகியலிலோ (Aesthetics) அவர்கள் கவனம் காட்டாதது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். அவர்களின் படைப்புகளில் முக்கியமாக கருவாக வழக்காற்று ஒழுக்க நெறி மட்டுமே அடிப்படையாய் அமைந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவற்றில் மனித சமூகம் முழுமைக்கும் பயன் தரக்கூடிய அறத்தின் உட்கருத்துக்கள் அருகியே காண்ப்படும்.
ஆனால் "திருக்குறள்" என்ற அரும் பெரும் தமிழ் இலக்கியமானது இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையிலும் , வேறுபட்ட தரத்திலுமிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. திருக்குறளை அற நூலில் சேர்ப்பதைப் பார்க்கிலும் வாழ்வு நூலாகக் கணிப்பதே சாலப் பொருந்தும். ஏனெனில் அறநூல்களில் பெரும்பான்மையானவை மத சார்பான அற் நெறிகளையும், வழிமுறைகளையுமே வாழ்வியலின் நிபந்தனைகளாகவும் விதிகளாகவும் போதிக்கின்றன. ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் மாத்திரமே அற நூலாகவுமிருந்து கொண்டே அதையும் கடந்து தனக்கென்று தனித்தன்மைகளையும் புதுமைகளையும் தன்னகத்தே கொண்டது.
திருக்குறளின் அடித்தளம் தமிழர் பண்பாடாக இருந்த போதும் கூட , குறிப்பிட்ட ஒரு நாட்டவர் என்றோ அல்லது குறிப்பிட்ட இனத்தவர் என்றோ, அதுவுமல்லாது இன்ன, மொழி பேசுபவர், அல்லது இந்த
மதம் சார்ந்தவர், என்ற எல்லகளைக்குட்படாமல் உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் எப்படிப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடிய வாழ்வியல் சிறப்புகளைக் கூறும் ஒரு நூலாகவே இருக்கின்றது.
இந் நூலுக்கு திருக்குறள் என்ற பெயர் வரக் காரணம் யாதெனில்..; திரு என்பதன் அர்த்தம் நாம் யாவரும் அறிந்தது போல் உயரிய, மேன்மை தகுந்த , சிறப்பான, செல்வம், அழகு, என்று பொருள்படும். சிறாந்த படைப்புகளையும் , மேன்மக்களையும் திரு என்ற அடை மொழியிட்டு அழைப்பது வழக்கம். திரு ஞான சம்மந்தர், திரு நாவுக்கரசர், திருமூலர், திருமந்திரம், திருமறை என்பன அதற்ற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். அதே போல் தமிழில் வெண்பா யாப்பிலக்கணத்தில் மிகச் சிறிய , குறுகிய வெண்பாவை குறள் வெண்பா என்றழைப்பர். ஆதலால் மிகக் குறுகிய வெண்பாக்களைக் கொண்ட மேன்மையான உன்னதமான நூல் என்ற சிறப்பினைக் கருதி இந்நூலுக்கு திருக் குறள் என்ற பெயரிடக் காரணமானது.
திருக்குறள் :
அறம் , பொருள் , இன்பம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது.
அறம் எனப்படும் பிரிவு அறத்துப் பால் என்றும் அழைக்கப்படும். இது அற நெறியின் பெருமையையும் மேன்மையையும் அதன் பயன்களையும் எடுத்துரைக்கின்றது.
பொருள் எனப்படும் பொருட்பால் பொருளின் சிறப்பையும் , அதை எப்படி சேமிப்பது ,காப்பது, பங்கிடுவது, பகிர்வது என்ற முறைமைகளையும் சொல்லுகிறது. இதில் அரசியல் நெறிமுறைகள் பற்றியும் , சமுதாயக் கருத்துகளையும் , வரைவிலக்கணங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
இன்பம் என்ற காமத்துப்பாலில் காதலர்களின் அன்பும் அதன் வெளிப்பாடுகளும், விளுமியங்களும், காதலர்கள் காதலில் காட்டும் ஈடுபாடும், அவர்களின் மனப் போக்கும் மிகச் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்கள் வீதம் 1330 வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வெண்பாவும் இரண்டடிகள் உடையன. திருக்குறளில் ஒவ்வொரு பிரிவும் இயல் என்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
அறத்துப் பால் பாயிர இயல் இல்லற இயல் துறவற இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
பொருட்பால் அரசு இயல் அங்கம் இயல் ஒழிபு இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
காமத்துப்பால் களவு இயல் கற்பு இயல் ஆகிய இரு உட்பிரிவுகளுடையது.
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்றாலும் இற்றைக் காலத்திலும் கூட எந்தவொரு காலாச்சாரம் சார்ந்த அல்லது எத்தகைய நாகரீகத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு தனிமனுதனுடடய வாழ்வியலுக்கும் பொருந்துவதாக அமையப் பெற்றுள்ளதே அதன் மேன்மையான சிறப்பாகும்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியலின் மேன்மை பற்றிய கருத்துக்களைக் கூறுவதன் மூலம் வாழ்கைக்கு ஒரு வழிகாட்டியாகவே பயன் தருகின்றது.
அத்துடன் தமிழ்ப் புலவரான திருவள்ளுவப் பெருமான் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் தான் அருளிய திருக்குறள் என்ற தமிழ் இலக்கியத்தில் இரு இடத்திலேனும் , ஒரு குறளிலேனும் தமிழ் என்றோ தமிழர் என்றோ அல்லது தமிழ் நாடென்றோ அல்லாமல் , தமிழ் நாட்டவர் என்றோ ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்பதில் இருந்து அவர் இந் நூலை உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை கூறுவதே அவர் தம் நோக்கம் என்பதை திருக்குறளின் சிறப்பியல்பாகப் படைத்திருக்கின்றார் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது எனலாம்.
இதனால் திருக்குறளை உலகின் எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழி பேசும் மனிதரை திருக்குறளின் கருத்துக்களும் அற நெறிகளும் சென்றடைவதோடு அவர்களுக்கும் திருக்குறள் சொந்தமாகிவிடுகின்றது என்பது அதன் சிறப்பியல்பல்லவா?
திருக்குறளின் தொன்மையையும் , மேன்மையையும் , அதன் சிறப்பியல்புகளையும் படித்துணர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியாரான ஜோஸப் பெஸ்கி என்பவரே இலத்தீன் மொழியில் திருக்குறளை முதன் முதலாக மொழி பெயர்த்தார். அதன் பின்னால் பலரும் உலகின் பல் வேறு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்தனர். அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட விவிலியன் நூலுக்கு அடுத்த படியாக உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்குச் சேரும்.
இது வரை திருக்குறள் வங்காளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம்,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராஷ்டிரா, தெலுங்கு, உருது ஆகிய இந்திய மொழிகளிலும் , அரபு மொழி, பர்மீய மொழி, சீன மொழி,, ஜப்பானிய மொழி, மலாய் மொழி, சிங்களம், பிஜியன் ஆகிய ஆசிய மொழிகளிலும், ஆர்மேனியம், செக்கோஸ்லோவாக்கைய மொழி, டச்சு, ஆங்கிலம், பின்னிஸ் மொழி, பிரஞ்சு, , ஜெர்மன் மொழி, இலத்தீன், போலந்து மொழி, உருசியன் மொழி, ஸ்வீடிஸ் மொழி , இத்தலியன் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் இனி மேல் தொடர்ந்து கவனிப்போம்.
நன்றி!

Monday, July 23, 2007

விழிப்பு

விழிப்பு

விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்,

இனிமையும் பாதுகாப்பாயுமிருந்த
ஒரு பொழுது வாழ்கை
திடீரென்று பொய்யாகி வெளுத்துப் போன
தருணங்களின் பாதிப்பில்
வீழ்ந்துவிடாமல் சுதாகரித்து கொண்டபின்
உயரமாய் எழுந்து நின்று
விடியலுக்கான சூரியக் கதிர்களை மறைக்கும்
மேகத்தின் இருளை விலக்கிப் புறக்கணிக்கும்
அசுரபலத்துடன்
நான்
சமுத்திரத்தின் நீலத்திற்க்கும் கீழான
ஆழத்தையும் அமைதியையும் கொண்ட
பலமான இதயச் சுவர்களில்
ஒளிக்கற்றைகளை உள் வாங்கிப் பழகிய பின்
விடியலே
உன்னை என்னால் நன்றாகவே பார்க்கமுடிகின்றது..
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்..!

கிழித்தெறிந்து துளைத்துவரும்
சூரியக் கதிர்கள்
இடைமறிக்கும் துயர் முகில்களை சாம்பலாக்கி
இன்னும் சற்று நேரத்தில் வெளிப்படும் போது
என் கண்களிலிருந்து கண்ணீர்க் கறைகள்
காய்ந்து போகும்.
என் இதயத்தினுள் பார்க்கின்றேன்..
என்னவொரு வெளிச்சம்?


ஏய்..!
என்னை வீழ்த்திவிட்டதாய் இறுமாந்தவனே!!
பார்..
நான் சாமர்த்திய சாலி...
இதயத்தினடியில் துயரங்களை புதைத்த
அஸ்திவாரத்தில் நிமிரும் கட்டிடங்களாக
சில இலட்சியங்களுடன்
இன்னொருமுறை வாழ்ந்து பார்க்க வேண்டிய
வாழ்கைக்கான ஒளி வாங்கிய
விழிப்புடன் விழித்துக் கொண்டேன்..

வாழ்கைச் சூதாட்டத்தின்
சீட்டுக்களை விளையாடக் கற்றுக் கொண்டபின்னால்
என் நேரங்களின் அருமையையும்
எனக்குள் விளைந்த அழகின் அருகதையையும்
உணராத..
என்னோடிருந்த பயங்களை உதறிய தருணங்களில்
விடியலே...
உன்னை என்னால் பார்க்கமுடிகின்றது,
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டுவிட்டேன்..!!

Sunday, June 17, 2007

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்!

தந்தையின் தினமாக ஜூன் 17 கொண்டாடப்படுகிறது சில விஷயங்களில் தாய் ஒப்புத்துக் கொள்ள யோசிப்பாள் ஆனால் தந்தையின் ஒப்புதல் கிடைத்துவிடும் ,அதுவும் மகளுக்கு தந்தை மேல் அதிகப்பாசம் அன்பும் இருக்கும் இதேப்போல் மகனுக்கு தாயின் மேல் இருக்கும் இது மனோவிக்ஞானத்தில் இருக்கும் உணமை ,,நான் ஒருதடவை
வஜ்ரேச்வரி என்ற சூடு ஊற்று {hotsprings} லோனாவாலா அருகில் என்று நினைக்கிறேன் போக என் பள்ளியில் அழைத்துப் போனார்கள்,நானும் போக அம்மாவிடம் கேட்டேன் ,
ஊஹும் ,,,,,இரவு தங்க அனுமதி இல்லை ,சொப்பனம் கூட காணாதே என்று
சொல்லிவிட்டாள்,எனக்கு இதைப்பற்றி யோசித்து துக்கம் கூட வரவில்லை ,,மெள்ள என் அப்பாவிடம் போனேன் ,நிறைய ஐஸ் வைத்தேன்,,என் தந்தை
புரிந்துக்கொண்டு ஐஸ் எல்லாம் வேண்டாம் ,,உனக்கு என்ன வேண்டும் ,,என்றார் ,நான் விஷ்யத்தைச் சொன்னேன் ,,அவ்வளவுதான் மாலை நேரத்திற்குள்
எனக்கு அங்கு போக அனுமதி அம்மாவிடமிருந்து கிடைத்து
விட்டது ,அப்பா என்றால் அப்பாதான்,,இந்த நாளில் இது என்க்கு ஞாபகம் வருகிறது ,,,
அப்பா,,உனக்குத்தான்
என் மேல் எத்தனைப் பாசம்!
ஒருநாள்,
என் ஆசையைத்
தாயிடம் சொன்னேன் ,,
தடையிட்டாள்,,
ஆனால் நீயோ
தடையை உடைத்தாய்
என் மகிழ்ச்சிதான்
உன் மகிழ்ச்சி
கன்னிகாதானம் நாள்
என்னை நீ தாரை வார்க்க,
என் கண்களில் நீர் முட்ட
உன்னைப் பார்த்தேன்
உன் கலங்கினக் கண்கள்
இன்னும் என் நினைவில்
உன் ஊக்கமே
என் ஆக்கம்
பலபரிசுகளில்
அடைந்தப்பெருமை,
உன் அணைப்பில் தெரிந்ததே
என் உணர்வுக்கு மதிப்பு
அன்புத்தந்தையே
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன் ,,,,
அன்புடன் விசாலம்

நொறுக்குத்தீனியா..நோ..நோ..!

நொறுக்குத்தீனி ஒரு பொழுது போக்கு பலருக்கு,
குடும்ப பிரயாணமா ஒரு மூட்டைத்தீனி சிலருக்கு,
பிக்னிக்கா கூடவருவது ஸமோசா பக்கோடா இளைஞருக்கு,
ஒரு கூர் பாப்கார்ன் பெரிய கோன் ஐஸ்கிரீம் வருகிறது காதலர்களுக்கு,
சினிமா படம் ஒடுகிறது ,இன்பமான இனிப்புகள் வாயிற்கு,
வருகிறது சோடாவும் வறுத்த கடலையும் சீட்டு விளையாடும் சீமான்களுக்கு,
சீடை முறுக்கு ,வறுத்த பண்டங்கள் அழுகை சீரியல் பார்க்கும் மாமிகளுக்கு,
கேட்பரீஸ் சாக்லேட்ஸ் கோலா,ஆரஞ்ச்,என்று வ்ருகின்றன நம் அழும் பாப்பாக்களுக்கு ,
உடலுக்கு ஒர் வேலையும் இல்லை,
உடலில் ஒர் அசைவும் இல்லை,
முன் போல் ஒரு அம்மி.குழவி இல்லை,
மாவு ஆட்ட ஒரு கல்லுரலும் இல்லை,
துணி துவைக்கும் கல்லும் இல்லை,
இடிக்க ஒரு உரல்,உலக்கையும் இல்லை
எல்லாமே இயந்திரம் தான்
என்ன செய்யும் இந்த உடல்,
ஏறுகிறது பல கேலரீஸ்,
ஊளைச்சதை பெருகுகிறது,
வியாதியும் உள்ளே நுழைகிறது
தீமை ஏற்படுகிறது உடலுக்கு
"வேண்டாம் மனிதாஇந்த விபரீதம்
உடல் பயிற்சி வேண்டுமப்பா"
திரும்ப,திரும்ப எச்சரிக்கிறது உடல்,
நாக்கை கட்டுபபடுத்துவாய்,எல்லாம் நல்லதே முடியும்,
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எப்படியப்பா முடியும்?

...அன்புடன் ....விசாலம் ,

ஒரு காதலின் கதை

ரம்யா கல்லூரியில் இருந்து திரும்புவதற்குள் மாலை ஆறரை ஆகிவிட்டிருந்தது.

"ஏண்டி லேட்டு ! நீ எப்ப வருவியோன்னு நான் மடில நெருப்பை கட்டிகிட்டு
தவிச்சிட்டு இருக்கேன்"

"மா. வயசாக ஆக உனக்கு புத்தி கெட்டுப்போச்சி...நெருப்பை யாராவது மடில
வச்சுப்பாங்களா. எதெதெ எங்க வெக்கணுமோ அங்க வெக்கணும்"

"நக்கல் பண்றியாடி...தப்புத்தான். உன்னை எங்க வெக்கணுமோ அங்க
வச்சிருக்கணும். ஏண்டி லேட்டு"

"மா இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ்"

"ஆஹா! எவ்வளவு சினிமால பாத்திருக்கேன். ஹீரோயின் லேட்டா வருவா....அப்பா
உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பார். இவ லலலான்னு ஹம்

பண்ணிட்டே மாடிப்படி ஏறிப்போவா..'நில்லு ஏன் லேட்டு.....டாடி ஸ்பெஷல்
கிளாஸ்...ஒஹோ...நீ படிச்சது போதும்"

"அம்மா. நீ நெறய டீவீ பாத்து கெட்டுப்போயிட்டே....மொதல்ல டீவீய
வித்துட்டு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப்போடணும்"

"ஆமா அப்பத்தானே நீ கண்டவனுக்கும் ஈ மெயில் அனுப்பலாம்...போறாததுக்கு
இன்டர்நெட் வேற....கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு..காதலுக்கு

இன்டர்நெட்டுன்னு ஒரு படத்தில பாடறானே"

"அம்மா. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு"

"அய்யோ அந்த அளவுக்கு முத்திப்போச்சா..அப்ப செல்போன்ல sms....கவிதைன்னு
வேற ஆரம்பிச்சிட்டியா..."

"அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறே மா...கவிதை படிக்கறது ஒரு
இலக்கிய ஆர்வம்"

"உங்க இலக்கிய ரசனை எனக்கு தெரியாதாக்கும்...அந்த மாம்பழம் பாட்டை டீவில,
ரேடியோல விழுந்து விழுந்து கேக்கறியே அதுல என்னடி பாடறான்

ஒதட்டோரம் இனிப்பியோ
கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவப்பியோ சொல்லிப்புடுடீ

பதிலுக்கு அவளும் பாடறா..

என்னோட மடிப்புல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட் பண்ணி சொல்லுடா

"என்னம்மா நீ நான் சும்மா அந்த ம்யூசிக் பிடிச்சிதான் மா கேட்பேன்..இந்த
அர்த்தமெல்லாம் கவனிச்சதே இல்லம்மா..அய்யோ என்னை விட்டுரும்மா"

"விட்டுட்டா ஓடிடலாம்னு பாக்கறியா. எங்க அண்ணன் அதான் உங்க மாமா
மத்தியானம் வந்திருந்தார். அவர் பையனும் இப்படித்தான்

திரிஞ்சிட்டுருக்கானாம். அப்பத்தான் முடிவு பண்ணினோம். ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா...ரெண்டு வீட்டு பிரச்னைக்கும் ஒரே தீர்வு.. உனக்கும் ராமு

அத்தானுக்கும் கல்யாணம். நாளைக்கு காலைல நிச்சயதார்த்தம். இன்னிக்கு
ராத்திரியே எவன் கூடயாவது ஓடிடலாம்னு நினைக்காதே. உன், ட்ரெஸ்,

நகை எல்லாம் பீரோல வெச்சு பூட்டி சாவிய ஒளிச்சு வெச்சுட்டேன். இந்தா.
இந்த நைட்டிய மட்டும் போட்டுக்கோ...எனக்கு தெரிஞ்சு எந்த சினிமாலயும்

' நைட்டியோட ஓடற மாதிரி இது வரை காமிக்கல...புதுசா ஏதாவது வரலாறு
படைச்சிடாத"

ரம்யா மெல்ல தன் அறைக்குள் நுழைந்து மெதுவாக செல்பேசி எடுத்து மூன்றே
வார்த்தைகளில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

" சக்ஸஸ்..ராமு அத்தான்"

--ராஜன்(சுந்தர்)