Sunday, June 17, 2007

ஒரு காதலின் கதை

ரம்யா கல்லூரியில் இருந்து திரும்புவதற்குள் மாலை ஆறரை ஆகிவிட்டிருந்தது.

"ஏண்டி லேட்டு ! நீ எப்ப வருவியோன்னு நான் மடில நெருப்பை கட்டிகிட்டு
தவிச்சிட்டு இருக்கேன்"

"மா. வயசாக ஆக உனக்கு புத்தி கெட்டுப்போச்சி...நெருப்பை யாராவது மடில
வச்சுப்பாங்களா. எதெதெ எங்க வெக்கணுமோ அங்க வெக்கணும்"

"நக்கல் பண்றியாடி...தப்புத்தான். உன்னை எங்க வெக்கணுமோ அங்க
வச்சிருக்கணும். ஏண்டி லேட்டு"

"மா இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ்"

"ஆஹா! எவ்வளவு சினிமால பாத்திருக்கேன். ஹீரோயின் லேட்டா வருவா....அப்பா
உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பார். இவ லலலான்னு ஹம்

பண்ணிட்டே மாடிப்படி ஏறிப்போவா..'நில்லு ஏன் லேட்டு.....டாடி ஸ்பெஷல்
கிளாஸ்...ஒஹோ...நீ படிச்சது போதும்"

"அம்மா. நீ நெறய டீவீ பாத்து கெட்டுப்போயிட்டே....மொதல்ல டீவீய
வித்துட்டு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப்போடணும்"

"ஆமா அப்பத்தானே நீ கண்டவனுக்கும் ஈ மெயில் அனுப்பலாம்...போறாததுக்கு
இன்டர்நெட் வேற....கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு..காதலுக்கு

இன்டர்நெட்டுன்னு ஒரு படத்தில பாடறானே"

"அம்மா. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு"

"அய்யோ அந்த அளவுக்கு முத்திப்போச்சா..அப்ப செல்போன்ல sms....கவிதைன்னு
வேற ஆரம்பிச்சிட்டியா..."

"அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறே மா...கவிதை படிக்கறது ஒரு
இலக்கிய ஆர்வம்"

"உங்க இலக்கிய ரசனை எனக்கு தெரியாதாக்கும்...அந்த மாம்பழம் பாட்டை டீவில,
ரேடியோல விழுந்து விழுந்து கேக்கறியே அதுல என்னடி பாடறான்

ஒதட்டோரம் இனிப்பியோ
கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவப்பியோ சொல்லிப்புடுடீ

பதிலுக்கு அவளும் பாடறா..

என்னோட மடிப்புல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட் பண்ணி சொல்லுடா

"என்னம்மா நீ நான் சும்மா அந்த ம்யூசிக் பிடிச்சிதான் மா கேட்பேன்..இந்த
அர்த்தமெல்லாம் கவனிச்சதே இல்லம்மா..அய்யோ என்னை விட்டுரும்மா"

"விட்டுட்டா ஓடிடலாம்னு பாக்கறியா. எங்க அண்ணன் அதான் உங்க மாமா
மத்தியானம் வந்திருந்தார். அவர் பையனும் இப்படித்தான்

திரிஞ்சிட்டுருக்கானாம். அப்பத்தான் முடிவு பண்ணினோம். ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா...ரெண்டு வீட்டு பிரச்னைக்கும் ஒரே தீர்வு.. உனக்கும் ராமு

அத்தானுக்கும் கல்யாணம். நாளைக்கு காலைல நிச்சயதார்த்தம். இன்னிக்கு
ராத்திரியே எவன் கூடயாவது ஓடிடலாம்னு நினைக்காதே. உன், ட்ரெஸ்,

நகை எல்லாம் பீரோல வெச்சு பூட்டி சாவிய ஒளிச்சு வெச்சுட்டேன். இந்தா.
இந்த நைட்டிய மட்டும் போட்டுக்கோ...எனக்கு தெரிஞ்சு எந்த சினிமாலயும்

' நைட்டியோட ஓடற மாதிரி இது வரை காமிக்கல...புதுசா ஏதாவது வரலாறு
படைச்சிடாத"

ரம்யா மெல்ல தன் அறைக்குள் நுழைந்து மெதுவாக செல்பேசி எடுத்து மூன்றே
வார்த்தைகளில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

" சக்ஸஸ்..ராமு அத்தான்"

--ராஜன்(சுந்தர்)

No comments: