Sunday, June 17, 2007
தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்!
நொறுக்குத்தீனியா..நோ..நோ..!
...அன்புடன் ....விசாலம் ,
ஒரு காதலின் கதை
"ஏண்டி லேட்டு ! நீ எப்ப வருவியோன்னு நான் மடில நெருப்பை கட்டிகிட்டு
தவிச்சிட்டு இருக்கேன்"
"மா. வயசாக ஆக உனக்கு புத்தி கெட்டுப்போச்சி...நெருப்பை யாராவது மடில
வச்சுப்பாங்களா. எதெதெ எங்க வெக்கணுமோ அங்க வெக்கணும்"
"நக்கல் பண்றியாடி...தப்புத்தான். உன்னை எங்க வெக்கணுமோ அங்க
வச்சிருக்கணும். ஏண்டி லேட்டு"
"மா இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ்"
"ஆஹா! எவ்வளவு சினிமால பாத்திருக்கேன். ஹீரோயின் லேட்டா வருவா....அப்பா
உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பார். இவ லலலான்னு ஹம்
பண்ணிட்டே மாடிப்படி ஏறிப்போவா..'நில்லு ஏன் லேட்டு.....டாடி ஸ்பெஷல்
கிளாஸ்...ஒஹோ...நீ படிச்சது போதும்"
"அம்மா. நீ நெறய டீவீ பாத்து கெட்டுப்போயிட்டே....மொதல்ல டீவீய
வித்துட்டு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப்போடணும்"
"ஆமா அப்பத்தானே நீ கண்டவனுக்கும் ஈ மெயில் அனுப்பலாம்...போறாததுக்கு
இன்டர்நெட் வேற....கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு..காதலுக்கு
இன்டர்நெட்டுன்னு ஒரு படத்தில பாடறானே"
"அம்மா. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு"
"அய்யோ அந்த அளவுக்கு முத்திப்போச்சா..அப்ப செல்போன்ல sms....கவிதைன்னு
வேற ஆரம்பிச்சிட்டியா..."
"அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறே மா...கவிதை படிக்கறது ஒரு
இலக்கிய ஆர்வம்"
"உங்க இலக்கிய ரசனை எனக்கு தெரியாதாக்கும்...அந்த மாம்பழம் பாட்டை டீவில,
ரேடியோல விழுந்து விழுந்து கேக்கறியே அதுல என்னடி பாடறான்
ஒதட்டோரம் இனிப்பியோ
கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவப்பியோ சொல்லிப்புடுடீ
பதிலுக்கு அவளும் பாடறா..
என்னோட மடிப்புல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட் பண்ணி சொல்லுடா
"என்னம்மா நீ நான் சும்மா அந்த ம்யூசிக் பிடிச்சிதான் மா கேட்பேன்..இந்த
அர்த்தமெல்லாம் கவனிச்சதே இல்லம்மா..அய்யோ என்னை விட்டுரும்மா"
"விட்டுட்டா ஓடிடலாம்னு பாக்கறியா. எங்க அண்ணன் அதான் உங்க மாமா
மத்தியானம் வந்திருந்தார். அவர் பையனும் இப்படித்தான்
திரிஞ்சிட்டுருக்கானாம். அப்பத்தான் முடிவு பண்ணினோம். ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா...ரெண்டு வீட்டு பிரச்னைக்கும் ஒரே தீர்வு.. உனக்கும் ராமு
அத்தானுக்கும் கல்யாணம். நாளைக்கு காலைல நிச்சயதார்த்தம். இன்னிக்கு
ராத்திரியே எவன் கூடயாவது ஓடிடலாம்னு நினைக்காதே. உன், ட்ரெஸ்,
நகை எல்லாம் பீரோல வெச்சு பூட்டி சாவிய ஒளிச்சு வெச்சுட்டேன். இந்தா.
இந்த நைட்டிய மட்டும் போட்டுக்கோ...எனக்கு தெரிஞ்சு எந்த சினிமாலயும்
' நைட்டியோட ஓடற மாதிரி இது வரை காமிக்கல...புதுசா ஏதாவது வரலாறு
படைச்சிடாத"
ரம்யா மெல்ல தன் அறைக்குள் நுழைந்து மெதுவாக செல்பேசி எடுத்து மூன்றே
வார்த்தைகளில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
" சக்ஸஸ்..ராமு அத்தான்"
--ராஜன்(சுந்தர்)
கென் கவிதைகள்
தன்னிருப்பை நியாயப்படுத்துகின்றன.
நிராகரிப்பின் கூர்மையால் கிழித்து
இரத்தம் புசிக்கின்றன.
ஒற்றை சிறகின் பிரிதலறியா பறவையாய்.,
மனம் வேறாய் உடல் வேறாய்...
சூழ்நிலைப் பாறைகளின் மேல்
மோதி விழுகிறது.
எவரேனும் சொல்லித்தாருங்களேன்,
சாபங்களிலிருந்து உயிர்த்தெழுதலை..
கென் கவிதைகள்
வெடித்திட்ட எரிமலையாய் கோபம்,
அனல்குழம்பாய் வார்த்தைகளை மூழ்கடிக்கிறது!
தனிமைப்பாதையில் வெறி கொண்டோடி,
நட்பை பொசுக்கி பசிதீர்க்கிறது.
ஆறிப்போன பின்னே மெல்ல
அமைதி சாம்பல் துடைத்துயர்கிறது.
இப்போது எரிமலை உறங்குகிறதாம்,
எனைப்போல் மெளனத்தில் ஒளிந்தபடி...
கென் கவிதைகள்
கோயில் நுழையும் புறாக்களின்
சிறகசைப்பாய்,
மனதுக்குள் குதியாட்டமிடுகிறாய்.
காத்திருந்த பகல்களின்
கானல் நீரில்,
இரவுகள் ஒளியிழக்க
முலாமிழந்த கண்ணாடியாய் என்
மனம் தொலைந்திடுகிறது.
கூட்டில் பசிதுடிக்கும் சிறுபறவையாய்,
தத்தித்துடிக்கிறது என் காதல்...
வல்லூறுக்களின் பிடியில் சிக்கிக்கொண்ட
தாய்ப்பறவையின் நிலையறியாமல்..
யோக வாழ்க்கை - 5 - இரா. ஆனந்தன்
மனவளக்கலையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படுகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி
பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கை அச்சம் தரும் அளவுக்கு
உல்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை
மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில்
குழப்பமும் சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் வாழ்வில் அச்சமே
சூழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் சிந்தனை ஆற்றல் உடையவர்கள், சமுதாய நல
நோக்கம் உள்ள தலைவர்கள், ஆன்மீக வழி நின்று வாழெது வரும் நல்லோர்கள்,
மனித வாழ்க்கை நிலையை நினைத்தும், எதிர்கால உறுதியின்மையை நினைத்தும்
வருந்தியும், சிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த உலகக் குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை
நெறியும்தான் தனிமனிதனை, மனித குலத்தைக் காக வல்லது. உயிரின்
மதிப்புணர்ந்து, மனத்தின் மேன்மையுணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்துத்
தன் செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க பயிற்சியும், பழக்கமும்
ஆன்மீக அறிவு விளக்கத்தால்தான் கிட்ட முடியும். ஆன்மீகம் எனும்போது
குறுகிய நிலையில் தனிப்பட்ட மதம் என்றோ, உருவ வழிபாடு என்றோ கருத
வேண்டாம். அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மற்ற உயிர்களையும் மதித்து
நடக்கும் எண்ணத்தை தன் மனத்தில் வைத்து நடைமுறைப் படுத்தி வாழும்
மாமனிதனாக வாழும் நிலை பற்றியது.
ஆறறிவு பெற்றும் மனிதன் உடல் வரையில் எல்லைகட்டி இருப்பதனாலே புலன்
உணர்ச்சிகளுக்குட்பட்டு வாழ்க்கியைல் தனக்கும், பிறருக்கும் துன்பத்தைத்
தேடிக்கொள்கிறான். உயிரின் மதிப்பை உணரும், அறிவின் பெருமையுணரும் ஆன்மீக
வாழ்வு ஒன்றே மனிதனை நல்ல மனிதனாக, ஒழுக்கமும், கடமையும், ஈகையும்
உணர்ழ்து வாழ்பவனாகச் செய்யும். ஆறாவது அறிவின் பயன் மனம், உயிர்,
மெய்(Truth) என்னும் மூன்று மறைபொருட்களை உணர்வதற்கேயாம்.ஆரோக்கியமான
உடல், அமைதியான மனம் இவை இரண்டின் துணைகொண்டு சாதகன் உயிரின் தன்மையை
அறிந்து கொள்ள முற்படும்போது, எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் தன்னகத்தே
கொண்டுள்ள இயற்கையானது தனது ரகசியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அவனுக்கு
விளக்கத் துவங்குகிறது. பிறந்து வந்ததன் நோக்கம் தெளிவாகி, வாழ்க்கயின்
குறிக்கோள் விளங்கிவிட்டதாலே விழிப்புநிலை அடைந்த சாதகன் பிறவியின்
பெருநோக்கம் மறவாது தன் செயல்கள் அனைத்தையுமொழுங்கு செய்துகொள்ளப்
பயிற்சி பெற்றுவிடுகிறான். "நான் யார்?" என்ற மேதகு கேள்விக்கு விடை
கண்டு, அந்த விடையின் வெளிச்சத்திலே மனத்தூய்மை, வினைத்தூய்மை பெற்றுப்
பிறருக்கு வழிகாட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிறான். இந்தப்
பயிற்சியை ஏற்பதற்கான தகுதி உலகத்தில் பிறந்துள்ள அனைத்து மக்களுக்கும்
உள்ளது என்ற உண்மையை அறிவிப்பதே மனவளக்கலை என்று வேதாத்திரி மகரிஷி
தெரிவித்துள்ளார். இதிலே மிகச் சுலபமான உடற் பயிற்சிகள், தியானம்,
காயகல்பப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள் அடங்கும். இதன் நான்கு செயல்
முறைகளாக அகத்தவம் (Meditation), அகத்தாய்வு (Introspection),
குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection). இதன் மூன்று
வளர்நிலைகளாக மனவிரிவு பெறுதல் (Expansion of the mind), இயற்கை விதி
அறிதல் (Understanding the Law of Nature), எண்ணம், சொல், செயலில்
விழிப்புடன் இருத்தல் (Maintaining awareness in thought, word and
deed). இப்பயிற்சிகளின் வெற்றியாக நுண்மான் நுழை புலன் (Perspicacity),
ஏற்புத் திறன் (Receptivity), தக அமைதல் (Adaptability), பெருந்தன்மை
(Magnanimity), ஆக்கத்திறன் (Creativity), இசைவு (Harmony), நிறைவு
(Satisfaction ), மகிழ்வு (Happiness), மெய்யறிவு (Wisdom), அமைதி
(Peace) உண்டாகிறது.(வளரும்)
யோக வாழ்க்கை -3&4 - இரா. ஆனந்தன்
சாதனையாளர் பல நிலைகளில் மன அலைச் சுழலைத் தவத்தினால் பழக்கி வைத்துக் கொள்கிறார். இவர் ஆல்பா அலை (விநாடிக்கு 8 - 14 சுழல்) தீட்டா அலை (விநாடிக்கு 4 - 7 சுழல்), டெல்டா அலை (விநாடிக்கு 1 - 3 சுழல்) என்று பல நுண்ணிய அலைகளில் அகத்தவம் பழகுகிறார். இதனால், இவரது மனம் மிகவும் நுண்ணிய சுழல் விரைவு நிலையில் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கும்.
எனவே இந்த மன அலைச் சுழல் நிலைக்கு மேலான விரைவு அலைச்சுழல் இயங்கும் நிலையில் அல்லது அதே சுழல்விரைவு நிலையில், யார் ஒருவர் ஆழ்ந்தசிந்தனையின் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையோ, தத்துவ உண்மையையோ, மேலும் இயற்கை ரகசியங்களையோ உணர்ந்து கொண்டால், அது இவர் மனத்தில் தானாகப் பிரத்பலிக்க அதனை உள்ளுணர்வாகப் பெறுகிறார்.
எதையாவது உணரவேண்டும் என்றூ சொன்னால் அதைவிட நுண்ணிய நிலையில் இருந்தால்தான் உணர முடியும். அதற்கு ஆங்கிலத்தில் சரியான அர்த்தத்துடன் 'Understand' என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. 'Understand' என்றால் 'You stand under ' என்பதாகும்."புரிந்து கொள்" என்பதற்கு "அடியில் நில்" என்று பொருள். எந்த ஓர் இயக்கம் நடந்தாலும், அதைவிட நுண்ணிய நிலைக்கு வந்தால்தான் அதை உணர முடியும் மன அலையை விநாடிக்கு 1 - 3 சுழல் விரைவு என்ற டெல்டா அலைக்குக் கொண்டு வருகின்றபோது எல்லாவற்றையும் உணர முடிகிறது. மேட்டிலே இருக்கும் நீர் பள்ளம் போய்ச் சேர்வதுபோல், மனம் அகண்டாகாரத்தில் (சுத்தவெளியில்) இருக்கும்போது இயற்கை ரகசியங்கள் உள்ளுணர்வாய் மலரும்.
*************************************************************************************
4. வாழ்க வளமுடன்: வேதாத்திரிய மன வளக்கலை ::.. வேதாத்திரி மகரிஷி
உணர்ந்து ஓதுபவர். அவர் உலக நலனில் அக்கறை கொண்டு எண்ணிய
சிந்தனைகளுகெல்லாம் தன் உள்ளிருந்து வந்த விடைகள் அனைத்தையும்
வெளியிட்டுள்ளார். இதுவரை வந்த பல சிந்தனையாளர்களின் கருத்துக்களை
எல்லாம் உள்ளடக்கி, அவற்றுடன் தனது அனுபவத்தையும் சேர்த்து ஒரு முறையான
அடித்தளமாக அமைத்துள்ளார். அக்கருத்துக்களின் தொகுப்பே வேதாத்திரிய
வாழ்க்கை நெறியாகும். இதில் இறையுணர்வு, அறநெறி வற்புறுத்தப்படுகின்றன.
இறைநிலை என்பது சுத்தவெளி. அந்தச் சுத்தவெளியை உணர்வதே இறையுணர்வு.
அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் இணந்த வாழ்க்கை நெறி.;
தனி மனித மேம்பாட்டுக்கு ஐந்தொழுக்கப் பண்பாடும், உடல் நலம் பெற எளியமுறை உடற்பயிற்சிகளும், உயிர் நலம் பெற காயகல்பப் பயிற்சியும், மனத்தை ஒழுங்குபடுத்தத் தவமும், தன்னைத் திருத்திக்கொள்ள அகத்தாய்வுப் பயிற்சியும், நான் யார் என அறிந்து, இறைநிலையை உணர்ந்து, ஞானத்தை வளர்த்துக் கொள்ளத் தத்துவ விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. தான் வாழுகின்ற உலகத்தில் மற்ற உயிர்களுடன் ஒத்து வாழ்வதற்குப் பதினான்கு வேதாத்திரிய நன்னெறிகள் கற்றுத் தரப்படுகினறன. கல்வியில் ஒழுக்கத்தின் அவசியமும், அதனை வள்ளுவம் சொல்லுவதுபோல் நடைமுறைக்குக் கொண்டுவரவும், அதுவே பழக்கமாக மாறவும், "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கின்ற அவ்வையின் கூற்றுக்கு இணங்க, அரிதான மானிடப் பிறவியை
மேம்படுத்தவும், முழுமை பெறவும்,, இயற்கைத் தத்துவ அறிவையும், ஒழுக்கப் பழக்கங்களையும் வழங்க இக்கலை உருவாக்கப் பட்டுள்ளது. இது போதனை மார்க்கம் மட்டுமல்ல சாதனை மார்க்கமுமாகும்.
வேதாத்திரி மகரிஷி சென்னைக்கு அருகிலுள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில்
1911ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் நாள் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.
இறைநிலை தெளிந்த மாமனிதர். தனிமனித அமைதி மூலம் குடும்பம், சுற்றத்தார், ஊரார், உலகோர் அமைதியோடு வாழ வழிகாட்டுகின்ற பெருந்தகை. மக்களனைவரும் இறையுணர்வு பெற்று, அன்பும் அறநெறியு, ஓங்கி வாழ வகை செய்துள்ளார். பாமர மக்களும் எளிமையாகக் கற்று வழ்க்கியில் பின்பற்றும் வகையில் பயிற்சிகளை வடிவமைத்துள்ளார். தத்துவத்தில் அத்வைதத்தையும், யோகத்தில் ராஜயோகத்தையும் இணைத்து பாமர மக்களும் உணர்ந்து கொள்ளூம் வகையில் அவர்
கற்பிக்கும் அகத்தாய்வுப் பயிற்சிக:ள் அமைந்திருப்பதால், அவர் "பாமர
மக்களின் தத்துவ ஞானி"(Common Man's Philosopher) என்று
அழைக்கப்படுகிறார். மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கிணைத்து விளக்குகிறார். மகரிஷி வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ, விஞ்ஞானத்திற்கோ புறம்பானதன்று. தமிழில் நேரடியாகத் தோன்றாத குறையைப்போக்கி, தான் அகக் காட்சியாக உணர்ந்த கருத்துக்களைக் கவிதைகளாகவும், உரைநடை நூல்களாகவும் எளிய தமிழில் அலித்துள்ளார். மகரிஷியின் 92- வது பிறந்த நாளையொட்டி ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நேரில் கலந்து கொண்டு, அருள்தந்தையின் உலக சமாதானத் திட்டத்தைப் பெற்றுச்
சென்றது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.(வளரும்)
************************************************************************************
மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!
விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச்
செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே
வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************
அன்புடன்...பாலமுரளி.
2.
உள்ளத்தை பக்கவப்படுத்திக்கொண்டு
பொறாமைகளை அறவே.ஒழித்தெறிந்து
இருப்பதையும் கிடைத்ததையும் வைத்து
ஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால்
இளமையுடன் அமைதியுடன் சந்தோசமாய் வாழமுடியும்
அன்போடு
குயில்
நகைச்சுவை(ங்க..)!
சுட்டது மாதிரிதான் ஆனாலும் எஃப்.எம்.ரேடியோவில் கேட்ட ஒரு விஷயத்தின் உருமாற்றம்...
ஒரு பையன் அப்பகிட்ட வந்து மார்ஷீட்டைக் காட்டினான்.
அதைப் பார்த்த அப்பா"என்னடா இது வெறும் 10 மார்க்தான் வாங்கியிருக்கே"ன்னு கோபமா கேட்டாருங்க..
அதுக்கு அந்தப் பையன்
"இந்த மாதிரியெல்லாம் மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா..
போனவாட்டி 25 மார்க் எடுத்தப்போ என்ன சொன்னீங்க?"
"என்ன சொன்னேன்? ம் இன்னும் 10 மார்க் எடுத்திருந்தா பாஸ் ஆகியிருக்கலாம்னு சொன்னேன். அதுக்க்கென்ன இப்போ?"
"அப்படி சொல்லிட்டு இப்ப மாத்தி பேசலாமா அப்ப எடுக்க வேண்டிய 10 மார்க்கைதான் இப்போ எடுத்திருக்கேன்.அதுக்கு பாராட்டாம திட்டறீங்களே இது நியாயமா"ன்னு கேட்டான்
ஆடிப்போயிட்டாரு அப்பா பையனின் புத்திசாலித்தனத்தில்..
(இதுவும் புதுசுங்கோ:பறக்கும் விமானத்தின்மேல் உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்)
அன்புடன்....பாலமுரளி
லட்சத்தில்.. ஒருவள் -விசாலம்
புதிய கலித்தொகை - பாகம் 1 -ஸ்வாதி
அன்புடையீர்!
சரித்திரம் என்பது சந்ததிகளுக்காக சேர்க்கப்படுகின்ற உண்மைச் சங்கதிகளின் தொகுப்பு. கவிதை என்பது உவமைகளும் பொய்களும் கலந்த வார்த்தைச் சந்தங்களின் கோப்பு. ஆனால் நான் ஒரு சரித்திரத்தின் விசுவரூபத்தையும் அதன் விளக்கத்தையும் பொய் கலக்காமல் கவிதையில் தர முயன்றிருக்கிறேன். என்னுடைய முயற்சியின் பலனை அறிய உங்கள் முன் தமிழன்னையின் காலடிகளில் இவ்வாக்கத்தைச் சமர்பிக்கின்றேன்.
கபிலரும், மருதனிளநாகனாரும்,சோழன் நல்லுருத்திரனும், நல்லந்துவனாரும் பாடிய அரும் பெரும் கலித்தொகைக்கும் இந்த புதிய கலித்தொகைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை கலி என்ற வார்த்தைப் பதம் போர், சிறுமை, வஞ்சகம், கஷ்டம் , நீசம், நாசம், துன்பம் போன்ற அர்த்தங்களிலிருந்து போர், துன்பம்,சிறுமை ஆகிய அர்த்தத்தினடிப்படையில் தலைப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சொற்கோர்வைகள். என்னுடைய மனதின் உணர்வு வெளிப்பாடுகளை கொஞ்சம் இலக்கிய மெருகுக்குட்டி அழகு கொடுத்துள்ளேன். அவ்வளவு த
ான்!!!! நோக்கம்
எந்த ஒரு படைப்பாளியும் தன்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஏதோ ஒரு காரணம் அல்லது ஒரு நோக்கம் வைத்திருப்பர். அங்ஙனமே என்னுடைய இந்த ஆக்கத்திற்கான நோக்கத்தினை நான் முதலில் விவரித்துவிட்டு மேலே தொடரலாம் என்று நினைக்கின்றேன்.
அங்கே ஓரினம் கொள்கைகளால் வேறுபட்டாலும் , தமிழீழம் என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காய் தவமிருப்பது உலகமெலாமுணரப் பட்ட வெள்ளிடை மலை வெளிச்சம். தமிழ் அல்லது தமிழன் என்றால் உடனே உலகத் தமிழர்களிடம் மட்டுமல்ல உலக நடப்பறிந்த அனைவரது நினைவிலுமே முதலில் வருவது கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடப்பிலிருக்கும் தமிழீழப் போராட்டம் என்றால் மிகையாகாது.
தமிழன் போகாத நாடு, வாழாத நாடு உலகப் படத்திலேயே இல்லை; ஆனால் தமிழனுக்கென்று சொந்தமாய் ஒரு தனி நாடு உலகத்தில் இல்லை; ஜன நாயக அடிப்படையில் கிடைக்க வேண்டிய முறையான உரிமைகள் மறுதலிக்கப்பட்டவர்களுக்கும், பெரும் பான்மையினத்தின் மேலாதிக்கமும், எதேச்சாதிகாரமும், இன துவேஷ வெறியும் கொடுமையான முறையில் பிரயோக்கிக்கப்பட்டதில் மிகக் க
தமக்கென்று ஒரு தனி நாடு தமிழீழமாக மலர வேண்டும் என்ற உறுதியான விருப்பங்கள் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழீழத்தை நானும் ஆதரிக்கின்றேன். தமிழீழத்தின் புதிய விடியலின் முதல் சூரியனைப் பார்க்கும் வரையாவது இருக்க வேண்டுமென்ற பிர்ராத்தனைகள் எனக்குள்ளும் இருக்கின்றன.ஆனால் எல்லோரையும் போல் கரிசலில் கனரகம் ஏந்துமளவுக்கு தைரியம் இல்லாத கோழை நான். என்னிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் என்னுடைய எழுத்து மட்டும் தான்.
இந்த எழுத்து தமிழீழத்தின் எதிரிகளைச் சாடும்; தமிழீழத்துக்காக மரணிப்பவர்களை பூஜிக்கும்; தமிழீழப் போராட்டத்தில் பல் வேறு வகையில் சிதைந்து போன ஆத்மாக்களை வணங்கும். ஆக இது ஒரு தனி நபர் துதியோ அல்லது வசை மாரியோ அல்ல.
ஒரு வகையில் இது அங்கே ஈழத்தில் ஆயுதமேந்திய போரில் மரணங்களை முத்தமிட்ட மாவீரர்களுக்கு மரியாதை செய்யும் என்னுடைய சமர்ப்பணம்; தமிழீழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்து தமிழீழத்திற்காக உயிர் நீத்த அத்தனை ஆத்மாக்களுக்கும் அவர்களுடைய கல்லறைகளில் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஆயிரக் கணக்கான மலர்களில் ஒன்று ..அவர்களுக்கான என்னுடைய வணக்கத்தின் சிறு வடிவம் மட்டுமே!
இவ்வாக்கத்தை ஒரு ஈழத் தமிழன் குயில் ஒன்றிடம் தமிழீழம் பற்றி சிலாகிப்பதாக அமைத்திருக்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரை பகுத்தறிவில்லாத அஃறிணையும், சரியான முறையில் தனது பகுத்தறிவைப் ப்யன்படுத்தாத உயர்திணை மானுடமும் சமமானவை. அதனால் தான் இந்தப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வை பகுத்தறிவில்லாத ஒரு பறவையிடம் விளக்குவதாய் இவ்வாக்கத்தை உருவமைத்திருக்கின்றேன்.
பகுத்தறிவில்லாத அஃறிணையில் குயிலை விசேசமாக நான் தேர்வு செய்தற்கு சில காரணங்கள் உண்டு.
முதல் காரணம், அநேகமான எல்லா ஜீவ ராசிகளும் தமக்கென்று உறைவிடம் தேடுவதிலும், அடை காப்பதிலும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. ஆனால் குயில் அப்படியல்ல. தன்னுடைய பொறுப்புகளின் கனம் உணராது தன்னிச்சைப்படி தான்தோன்றித் தனமாய் காகக் கூடுகளில் முட்டையிடுகிறது; அடை காக்காமல் தனது தாய்மை பேணத் தவறியது.
ஆனால் குயில் முட்டைகளைத் தன் முட்டைகளாக நினைத்து அடைகாக்குகம் காகமானது குயில் குஞ்சு வளர்ந்து தன்னுடைய சந்ததியினரைப் போல் கரையத் தெரியாமல் வேற்று மொழியில் குயில் கூவும் போது தான் தன் குஞ்சுக்கும் குயில் குஞ்சுக்குமிடையில் அன்னியம் அறிந்து கொத்தி விரட்டும். இந்தத் தாக்குதலில் எத்தனை குயில் குஞ்சுகள் தப்புமோ எத்தனை குஞ்சுகள் செத்து மடியுமோ?
பொறுப்பில்லாத தாய்மையினால் ஏற்பட்டது தன் இந்த நிலமை. தனக்கென்றூ ஒரு சிறு கூடு கட்டத் தெரிந்தால் குயிலினம் இத்தகைய பரிதாப நிலைக்குகளுக்கு ஆளாகியிருக்காது.
இந்தக் குயிலைப் போல் பொறுப்பில்லாத மனிதர்கள் எங்கள் மானிட சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதாரணமாய் இங்கு குயிலைக் குறிப்பிட்டுள்ளேன்.
இரண்டாவது காரணம் , பாரதியார் முதற் கொண்டு இன்றைய சினிமாக் கவிஞர்கள் வரை குயிலைக் காதல் கவிதைகளில் மட்டுமே சம்மந்தப்படுதியிருக்கிறார்கள்.
அதே போல் இங்கே ஒரு மாற்றத்திற்காக புரட்சியிலும் அந்தக் குயிலை சம்மந்தப்படுத்துவோமேயென்ற எண்ணத்தில் குயிலுக்கு இன்னொரு அந்தர்ப்பம் கொடுத்துள்ளேன்.
என்னுடைய இவ்வாக்கம் யாருடைய மனதையும் நோகடிக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்திலோ நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. என்னுடைய தேசத்தையும் , எங்களின மக்களையும் , அவர்களது இன்னல்களையும் பார்த்து மனம் நொந்த நிலையில் எழுதப்பட்டது.
என் கரிசலுக்கான போராட்டத்தையும் அதைக் கொண்டு நடத்தும் போராளிகளையும் பற்றி விமர்சிக்கவோ அல்லது குறை நிறை சொல்லவோ போரரட்டச் சூழலுக்கு அப்பால் புலம்பெயர்ந்திரு ப்போருக்கும் சரி, எம்மெல்லைகளுக்கப்பால் எட்டி நின்று வேடிக்கை பார்ப்போருக்கும் சரி உரிமையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.
அவர்கள் அங்கே போராடுவது எதற்காக? யாருக்காக? அங்கே அவர்கள் தமது வாழ்கையை அல்லவா எம் ஒவ்வொருவருக்காகவும் பணயம் வைத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தலையெழுத்து எமக்காக உயிரை மாய்த்துக் கொள்ள?ஒரு மனிதனந்தான் வாழ விரும்பி, அதற்காக அத்தனை குறுக்கு வழிகளையும் கையாளும் இந்தக் காலத்தில், அங்கே அந்த வினாடியிலும் மரணத்தை எதிர் நோக்கிய சூழலில் தம்மை அர்ப்பணிக்க அவர்கள் என்ன முட்டாள்களா?எத்தனை பேர் நம்மில் எமக்கான சுதந்திரத்தைப் பற்றியும் இப்போராட்டத்தைப் பற்றியும் சரியாகப் புரிந்திருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு சுதந்திரத்திற்கான விழிப்புணர்வு இருக்கிறது? எத்தனை பேர் தினசரி செய்திகளாக அல்லாமல் தமது ஆயுளாகவும் , வாழ்கையாகவும் போரளிகளின் தியாகங்களையும் , தீர்க்கங்களையும் உணார்ந்திருக்கிறார்கள்?
இந்தக் கேள்விகள் தான் என்னை இந்த புதிய கலித்தொகையை எழுத வைத்தது.
சுதந்திரம் என்பதும் அதற்கான தீர்வு எடுப்பதும் எல்லோருக்கும் பொதுவான உரிமை. உலகத்தின் சகல சரித்திரங்களிலும் போராட்டத்தின் பின்பே சுதந்திரம் என்பது கிடைத்திருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திடம
ஈழத்துக் காந்தி எனப் போற்றப்ப்பட்ட தந்தை செல்வா போன்றோர் எங்களூரிலும் அஹிம்சை வழியில் போராடினார்கள். ஆனால் சிங்கள அரசு கண்டு கொள்ளவில்லை. உலகமே பார்த்துக் கொண்டிருக்க அஹிம்சை வழியில் ஒரு துளி நீராகாரம் கூட வாயில்
ஆக என்னுடைய இவ்வாக்கம் தமீழீழப் போராட்டத்தை மரியாதை செலுத்தும் முகமாக தொகுக்கப்பட்டது. இதற்கான விமர்சனங்களையும், கருத்துக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்கிறேன்
நன்றி!
சுமை - குயில்
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini
தொ(ல்)லை தூரக்கல்வியும் தொடர்ச்சியான வெய்யிலும் -ஷாரா
எனக்குத் தெரிந்த வரையிலே, அனைத்துத் தொலைதூரக்கல்வி வழங்கும்
பழ்கலைக்கழகங்கள் எல்லாமுமே இந்தக் கொடுமையை ஆற்றி வருகின்றன.
இந்த பல்கழைக்கழகங்களில் யார் படிப்பார்கள்?
"இறுவயதில் படிக்க இயலாத சூழ்நிலைகளால் - பாதியில் படிப்பை
விட்டுவிட்டவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு." - இது பாஸிட்டிவ் அப்ரோச்.
இங்கே படிப்பவர்கள் - சிறு வயது / கைக்குழந்தைகளைக் கொண்ட இளம்
தாய்மார்கள் நிறையப்பேர். இது மறுக்க இயலாத உண்மை. அனைவரும் அறிவர்.
இந்த 'அக்னிநட்சத்திர' - சுட்டெரிக்கும் சூரியனின் கொடுமைக் கால
நேரத்தில்தான் - எல்லா நிலையங்களுமே 'பரீட்சைகளை' நடத்துகிறார்கள். இந்த
'அக்னி' நட்சத்திர நேரத்தில் படிப்பதே கடினம். தனது ஊருவிட்டு வேறு
ஊருக்குச் சென்று பல மைல்களுக்கு அப்பால் - 'பரீட்சை' எழுதச்செல்லும்
இளம் தாய்மார்களின் நிலைமை பரிதாபம்.
தனது கைக்குழந்தையை சமாளிப்பதே பிரம்மப்பிரயத்தனம். அதைச் சமாளித்து
படித்து, பல மைல்கள் பிரயாணித்து பல்கலைக்கழகம் சென்று பரீட்சைகள் பல
எழுதிப் பட்டம் வாங்கி பணிக்குச் செல்லவேண்டும்.
எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.. ஒரே ஒரு விசயத்தைத்தவிர. அதாவாது 6
பரீட்சைகளையும் திங்கள் முதல் சனி வரை தொடர்ந்து போட்டுத்தாக்கி
விடுகிறார்கள். அவர்கள் படும்பாடு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது..
பெண்களுக்கு 'மனவலிமை' அதிகம்தான். ஆனாலும் அவர்களின் மன அழுத்தம் -
தொடர்ச்சியான 6 பரீட்சைகளால் அதிகரிக்கிறது. மன அழுத்தம் ரொம்பவுமே
மோசமானது. அதைப்பற்றி இந்த பழ்கலை நிர்வாகங்களுக்குச் சிறிதளவாவது
அக்கறை
வேண்டும்.
நான் கேட்டுக்கொள்வது இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான்
ஐயா புண்ணியவான்களே
1) பரீட்சையை அக்னி நட்சத்திர நேரத்தில் படுத்தும் வெயிலில்
வைக்காதீர்கள்".
2) எல்லாப் பரீட்சைகளையும் தொடர்ந்து ஒரே சீரியசாக ' திங்கள் முதல் சனி'
வரை வைக்காதீர்கள்.
குயிலின் தத்துவவரிகள்.
வேண்டாம்.
--------
கொண்று விடும்.
மானிடம் வேண்டாம்.
பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.
கல்லான மனசும்
வேண்டாம்.
பொல்லாத பெயரும்
வேண்டாம்.
பொய்யான காதலும்.
வேண்டாம்.
பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.
பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.
காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.
rahini
germany.
இறைவன் ஒரு தபால்காரன் --விசாலம்
அன்புடன் விசாலம்
அம்மா - கதை சொல்லலாமா?-3
கதை 3
அந்தச் சிறுவனின் தாய் அழுது கொண்டிருந்தாள்.
"ஏனம்மா அழுகிறாய்?" என்று அந்தச் சிறுவன் தாயிடம் கேட்டான்.
"ஏனென்றால் நான் தாய்.," என்று தாய் சொன்னாள்.
"எனக்குப் புரியவில்லை," என்றான் பையன்.
தாய் அவனை அணைத்து உச்சிமோர்ந்து சொன்னாள், "அது உனக்கு எப்போதுமே புரியாது மகனே!"
உடனே அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் சென்று கேட்டான் "ஏன் அம்மா காரணமில்லாமல் அழுகிறாள்?"
"எல்லா தாய்மாரும் இப்படித் தான் காரணமேயில்லாமல் அழுவார்கள்," என்றார் அவனுடைய தந்தை அலட்சியமாக.
அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானான். அப்போதும் அவனுக்குப் புரியவில்லை அவனுடைய அம்மா எதற்காக அழுகிறாள் என்று. உடனே அவன் கடவுளைக் கேட்டான் "கடவுளே! ஏன் எப்போதும் காரணமில்லாமல் தாய்மார் அழுகிறார்கள்T"
கடவுள் சொன்னார், "மகனே, தாய்மாரை நான் சிருஷ்டிக்கும் போது அவர்களை மிகச் சிறப்பானவர்களாகவும் விஷேஷத் தன்மையும் தரமும்ள்ளவர்களாகவும் சிருஷ்டித்தேன்.அவர்களது தோள்களுக்கு இவ்வுலகையே தாங்குமளவு சக்தியையும் அதே நேரம் இன்னொருவருக்கு அரவணைப்பாக சாய்ந்து கொள்ளப் போதுமான அளவுக்கு மென்மையையும் கொடுத்தேன். பிரசவ வேளைகளின் போது உருவாகும் வலியின் வேதனையை தாங்கிக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் கூடிய பக்குவத்தையும் , வலுவையும் அவர்களின் வலுவான மனதில் ஆழமான உறுதியாகவும், அவளுடைய இடுப்பெலும்புகளில் பலமாகவும் கொடுத்தேன்.அதே தாய்க
"அவளுடைய குடும்பத்தில் யாராவது ஒருவரோ அல்லது எல்லொருமேயோ வாழ்கையில் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் நிராசைகளாகி வாழ்கயில் வலுவிழந்து , தைரியமிழந்து, மனம் தளர்ந்து போகும் தருணங்களில் அவர்களை அரவணைத்து, ஆலோசனை வழங்கி, துவண்டு போகாமல் தைரியப்படுத்தி அவர்களை மீண்டும் வழி நடத்தும் திறமையையும், பொறுமையையும், நம்பிக்கையையும் , மன உறுதியையும் நான் தய்க்குக் கொடுத்தேன்.
"அவளுடைய குழந்தகளை அன்போடு பரமரிக்கவும் , அரவணைக்கவும், வளார்த்தெடுக்கவும் அவளுக்கு அன்பு செலுத்தும் மென்மையான இதயத்தையும் கொடுத்து பிற்காலத்தில் பிள்ளைகள் விடலைப் பருவத்துக்கேயுரிய அறியாமை, காலித்தனம், அலட்சியப்போக்கு, தாழ்வு மனப்பான்மை போன்ற கெடுபிடிகளில
"அதே போல் தான் அவர்களுக்கு கண்ணீரையும் கொடுத்தேன். அவர்களுடைய தாய்மை உணர்வுகளின் (இன்ப, துன்ப) உச்சைத்தை ஆற்றும் ஒரு வடிகாலாக. அது ஒன்று தான் நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பலஹீனம். "
"மகனே! ஒரு தாயின் அழகு அவள் அணியும் உடைகளிலோ அவளது உடலமைப்பிலோ அல்லது அவளுடைய தலையலங்காரத்திலோ இல்லை. அம்மாவின் அழகு அவளுடைய ஆழமான கண்களில் தான் இருக்கிறது, ஏனெனில் அது தான் அவள் தன் குடும்பத்தினருக்காக வற்றாத வளமாக வைத்திருக்கும் அன்பும், பாசமும் குவிந்து கொட்டிக்கிடக்கும் அவளுடைய இதயத்துக்கான வாசல் கதவுகள்" என்றாராம் கடவுள்.அன்புடன்
சுவாதி.
அம்மா - கதை சொல்லலாமா?-2
கதை 2
கடவுள் அண்ட சராசரங்கள் சகலதையும் படைத்த பின் தாவரங்களையும் மிருகங்களையும் படைத்தாராம். தன்னால் உருவாக்கப்பட்ட அண்ட சராசரங்களும்,பூமியும், இயற்கையும் வெறுமையாய் இருப்பதாக நினைத்தாராம். அவற்றுள் பூமியை ஜீவ ராசிகள் வ
இதை கவனித்த பார்வதி "இத்தனை விந்தையான ஜீவராசிகளைப் படைத்தும் ஏன் திருப்தி படமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம்.
"எத்தனையோ அழகழகான பறவைகளையும், அற்புதமான மிருகங்களையும் படைத்தாலும் இவற்றில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய படைப்பில் இன்னும் முழுமையான திருப்தி தரும் ஒரு படைப்பை எப்படியாவது ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கடவுள் சொன்னாராம்.
பரமசிவன் இப்படி சொன்னதும் பார்வதிக்கும் ஆர்வம் தாங்கவில்லையாம். அப்படி என்ன படைப்பை இவர் உருவாக்கப் போகிறார் பார்ப்போமே என்று இறைவனின் படைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாராம். கடைசியில் கடவுளும் மனிதனில் ஆணையும் பெண்ணையும் உருவாக்கினார்.
இந்தப் படைப்பில் அப்படி என்ன விசேடம் இருக்கிறது என்று பார்வதிக்கு ஒரே ஆவல்.
"மனிதப் படைப்பு மற்ற எல்லாவகை ஜீவ ராசிகளையும் விட ஒரு படி மேலாக எனக்குத் தெரிகிறது. இந்தப் பிறப்புக்கு மனம் என்ற ஒன்றைக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் இதற்கு மற்றைய படைப்புகளை விட மேலதிகமாக ஆறாவது அறிவையும் கொடுத்திருக்கிறேன். அதனால் இது எனக்கு முழுத் திருப்தியளிக்கும் என நினைக்கிறேன்" என்று சொன்னாராம் கடவுள்.
சிறிது காலம் சென்றதும் கடவுளுக்கு அந்தப்படைப்பிலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தாராம். உடனே தான் படைத்த மானிடப் படைப்பில் பெண் பிறப்புக்கு "தாய்மை" என்ற உணர்வை உருவாக்கினாராம்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு இவருடைய படைப்புகளின் சிறப்புகளை பூமிக்குப் போய் நேரேயே பார்க்க வேண்டுமென்ற ஆவால் வந்துவிட்டது. உடனே தம்பதி சமேதராய் பூலோகத்திற்கு வந்தனர்.
எல்லா ஜீவ ராசிகளையும் பார்வையிட்டுவிட்டு கடைசியில் மானிடப் பிறப்புகளைப் போய்ப் பார்த்து அவர்களின் குறைகளைக் கேட்டாராம். ஒவ்வொரு மானிடனும் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சுயநலமாகக் கேட்டுக் கொண்டுருந்தனராம். கடைசியில் தான் படைத்த தாய்மை கொண்ட பெண்ணிடம் போன போது அத் தாய் அழுது கொண்டு இருந்தாராளாம்.
"ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன குறை?"என்று கடவுள் கேட்டாராம்.
"எனக்கு இரண்டு கைகள் போதவில்லை. என் பிள்ளைகளுக்காக நான் வேலை செய்ய வேண்டும்;இன்னும் இரண்டு கைகள்
சிறிது காலம் சென்றதும் திரும்பவும் பூலோகம் வந்த இறை தம்பதிகள் அந்தத் தாய் இப்போது எப்படி இருக்கிறாள் என்று பார்க்கப் போனார்களாம். அவள் அப்போதும் அழுதுகொண்டே இருந்தாளாம்.
"இப்போது ஏன் அழுகிறாய்?" -கடவுள்.
"என் பிள்ளைகளூக்காக ஓடி ஓடி உழைக்கிறேன். அதற்கு இந்த இரண்டு கால்களும் போதவில்லை. இன்னும் இரண்டு கால்கள் மேலதிகமாக இருந்தால் ந்ன்றாக இருந்திருக்குமே?" -தாய்.
"சரி அப்படியே ஆகட்டும்" என்று கூறிய கடவுள் அவள் விருப்பப்படி மேலதிகமாக இரண்டு கால்களை வழங்கிவிட்டு வானுலகம் போய்விட்டாராம்.
காலங்கள் உருண்டோடிப் போனது. திரும்பவும் நாலு கை நாலு கால் தாய் என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டுமென்று பார்வதி சொன்னாராம். சரி என்று கடவுளும் பார்வதியோடு பூலோகம் வந்தார். ந்ப்போது அந்தத் தாய் வயதானவளாய் , தலையெல்லாம் நரை விழுந்து, குழி விழுந்த கண்களோடு இருந்து அழுது கொண்டிருந்தாளாம்.
பார்வதிக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. "என்ன இது..இப்பொது இந்த தாயின் கண்ணீருக்கு யார் அல்லது எது காரணம்?" என்று இறைவனை வினாவினாராம்.
அதற்கு கடவுள் சொன்னார். "இம் முறை இந்தக் கண்ணீருக்கு நான் காரணமில்லை. அந்தக் கண்ணீருக்கு அவளுடைய பிள்ளைகள் தான் காரணம். வயதும், பருவமும் வரும் வரை அவர்களுக்கு தாயின் அரவணைப்பு தேவைப்பட்டது; தாயை கொண்டு எல்லாம் அனுபவித்தார்கள். இப்போது அவர்கள் தமது வாழ்கையை பார்க்க போய்விட்டார்கள்;தாயை மறந்து விட்டார்கள்..அதனால் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்" என்று சொன்னாராம்.
மனிதன் மிருகங்களிடமிருந்தும் மற்ற உயிரினங்களிடமிருந்தும் வேறுபட்டிருக்க வேண்டுமென்று அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொடுத்தும் அவனால் தாய்மையின் மகிமையை உணரத் தெரியவில்லையே என்று விசனப்பட்ட ஆண்டவன் இப்படிபட்ட சுயநல மானிடப்பிறப்புகளுக்கு ஏன் விசேடமான நாலு கை நாலு கால்
*மேலதிகக் குறிப்பு:
லாஜிக் எல்லம் இந்தக் கதையில் பார்க்க வேண்டாம். ஏன் இந்துக் கடவுள் மட்டுமா உலகைப் படைத்தார் என்று தர்கம் செய்ய வேண்டாம்; ஒரு வேளை இந்தக் கதையை இய்ற்றியவர் இந்துவாக இருக்கலாம். இது என்னுடைய கதை அல்ல..இன்று ஒரு தகவல் நிகழ்சியில் தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை இது.
அன்புடன்
சுவாதி.
யோக வாழ்க்கை -2 - இரா. ஆனந்தன்
தான், சமுதாயம், இயற்கை என்ற மூன்றின் இணைப்பில்
நடைபெறுவதே வாழ்க்கை. ஒருவர் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமுதாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பற்றித்
தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றோடு ஒத்து இணைந்து வாழும்போது, வாழ்க்கை
செம்மை பெறும். வெற்றி பெறும்; மகிழ்ச்சி கிட்டும். ஒருவர் அற வாழ்க்கை
வாழ வேண்டும். அற வாழ்க்கை என்பது ஒழுக்கம் கடைபிடித்து வாழ்தலாகும்.
ஒழுக்கம் என்பது தனக்கோ. பிறருக்கோ, உடலுக்கோ, மனத்திற்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, எண்ணம், சொல், செயலால், தீங்கு நேராமல் வாழ்வது ஆகும்.
இதைத்தான் வேதாத்திரிய யோக வாழ்க்கைக் கல்வி அளிக்கிறது.
ஓதி உணர்தல், உணர்ந்து ஓதுதல் எனக் கல்வி அறிவின் பயன் இரு வகைப்படும்.
மற்றவர் கற்றுக் கொடுத்து ஒருவர் தெரிந்து கொள்ளுதல் ஓதி உணர்தல் ஆகும்.
தானே உணர்ந்து பிறர்க்கு வழி காட்டுதல் உணர்ந்து ஓதுதல் ஆகும். உணர்ந்து ஓதுவதே உள்ளுணர்வுக் கல்வி ஆகும். விவேகானந்தர் கூறுவதும் இந்த
உள்ளுணர்வுக் கல்வியேயாகும். ஒருவர் பிறருக்கு மொழி மூலம் உணர்த்தி ஒருசெய்தியைச் சொல்லும்போது அல்லது தத்துவத்தைப் போதிக்கும் போது அதனைக்கல்வி (Tution ) என்று சொல்லுவார்கள். இதே கல்வி வான்காந்தத்தின் மூலம் அகத்துணர்வாகக் கிடைத்ததென்றால் அதனை உள்ளுணர்வு (Intuition )என்பார்கள். பொதுவாக, வெளியே வாய் மூலம் கற்றுக் கொள்ளும் கல்வி சிறிய அளவிலேதான் அமையும். உள்ளுணர்வின் மூலம் பெறும் கல்வியோ பல மடங்கு உயர்ந்ததாக அமையும். எனவே அகத்தவம் செய்ய வேண்டும் அத்தகைய குண்டலினி யோகச் (தவத்தில் சிறந்த) சாதனையாளர்களுக்கு உள்ளுணர்வு ஆற்றல் (Intuition
Knowledge ) இயல்பாக உண்டாகும். இதனால் யார் யாரோ, எந்தெந்த இடத்திலோ சிந்தித்து, கண்டுபிடிக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் இவரிடம் உள்ளுணர்வாக வந்து சேரும்.
(வளரும்)
குயில் தரும் சின்னசின்ன தூறல்கள
என் மேனிகளைநனைத்து..
விட்டபொழுது..
குளிர் காயத்துடிக்கும் என்...
கண்களை மின்சாரமாய்
பார்க்கின்றான
உன் இரு கருவிழிகள
நிலவாக நான்
இருக்க வேண்டும்
என்னை நீ..பார்ப்பதற்காய்
நெருப்பாக நான்
மாறவேண்டும்
மழையாய் நீ என்னை
அணைப்பதற்காய்
முடிந்து போகும்
பாதையில் கூட..
என் கால்சுவடுகள்
மட்டும்..
இன்று வரை காதல்
உன் பாதை முழுதும்
பூக்களாக மலரும
ராகினி
ஜெர்மனி.
குயிலின் கவிதைகள் - குயிலின் முத்தம்
உன் முத்தப்புயலின் வேகத்தில்
கூட்டுக் குடும்பதினம்!
யோக வாழ்க்கை - இரா. ஆனந்தன்
மனிதகுல மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றிய மாமனிதர்அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனித குலம் அமைதியோடும், நிறைவோடும், அன்போடும், ஒற்றுமையோடும் வாழ வேண்டும். போரில்லா நல்லுலகம் அமைய வேண்டும். உலகம அமைதி பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சதா சிந்தித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் வந்தார்கள். மனிதகுல மேம்பாட்டிற்காக இந்த நூற்றாண்டில் இறையருளின் கொடையே அருள்தந்தைஅவர்கள்.
பாமரனையும் சிந்திக்க வைக்கின்ற அவரது படைப்புகள் ஏராளம். இதுவரை
தமிழிலும், ஆங்கிலத்திலும் 90க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இயற்கையையும், தனிமனிதனையும், சமுதாயத்தையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் சிக்கல்களையும், அதை நீக்கும் தீர்வுகளையும் செயல் திட்டங்களாகக் கொடுத்து உள்ளார்கள். அவரது தியானத்தில், ஞானத்தில் உதித்த இயற்கை உண்மைகளையும், மனித குலம் அவைகளை மதித்து நடக்க வேண்டிய வழிமுறைகளையும், வாழ்க்கைக் கல்வியாக பயிற்சி முறைகளாகக் கொடுத்துள்ளார்கள். மொழிக்கல்வி, தொழிற்கல்வி மட்டும் போதாது. இயற்கைத் தத்துவம் பற்றிய கல்வியும், ஒழுக்க பழக்கக் கல்வியும் அவசியம் என்பதை வலியுறுத்தி அதற்கு ஏற்ப உடற்பயிற்சி, தியானம், காயகல்பம், அகத்தாய்வு போன்ற பயிற்சிகளை வடிவமைத்தார்கள்.
இத்தகையக் கல்வியின் சிறப்பம்சத்தைப் பற்றிய விளக்கங்களைத் தொடர்
கட்டுரையாக எழுதுகின்றேன். என்னாலியன்ற அளவு மகரிஷியின் கருத்துக்களைத் தர முயற்சிக்கின்றேன்.
(வளரும்)
பாலமுரளி-கவிதைகள்
நண்பா!
நீ இருப்பதானால்
நான் வருந்துவதில்லை
எதற்கும்...
எனக்கு எல்லாம் வல்ல
ஒரு சகோதரன் இருப்பதாக..
கமல் கவிதைகள்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..
தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"
--
நட்புடன்,
கமல்
ஸ்வாதி- கவிதைகள்
-----------------
புருஷன் என்ற உறவுக்காக
வேலைக்காரி எஜமானனுக்குக்
கொடுத்த ஊதியம் (ஜாஸ்தி தான்)!
கல்யாணச் சந்தையில்
தம்மை மாடுகளாக
அறிமுகப் படுத்த உதவிய
அட்சாரம்!
பெண் மகவை
பிரேத பரிசோதனைக்கு
தயார்படுத்தும்
பிரேரணை!
இவன் பிறந்ததும்
அம்மாவின் மனதில் கணக்குப்பார்க்கப் பட்ட
கணிசம்!
இரண்டு குடும்பங்கள் சேர்ந்து
இவனுக்குக் கூறிய
ஏலம்!
அவனுடைய
முதுகெலும்பின் ஓட்டைகளை
கணக்குப் பார்த்த
கைத்தடி!
தாம்பத்தியம் என்ற திரைமறைவில்
ஓர் ஆண்விபச்சாரி
தனக்கு நிர்ணயித்த
ஆயுள் விலை
கமல் கவிதைகள்
விவசாயின் மனதில் புன்சிரிப்பு..
நனைந்த உடையுடன் குழந்தைகள்..
ஜன்னலோர மழைத்துளியில் அழகான பிம்பங்கள்..
ரசிக்க இத்தனை இருக்க,
காவிரித்தாயின் மனதில் தீராத கேள்வி??
"எந்த மகனின் தாகத்தை தீர்ப்பேன்!!"
--
நட்புடன்,
கமல்
அம்மா கதை சொல்லலாமா..?
தாய்க்கு ஒரே ஒரு மகன்; அவனை அந்தத் தாய் தன் உயிராக வளர்த்தாள்;
மகனுக்காகவே உயிர் வாழ்ந்தாள். அவனுக்கு திருமணம் நடந்தது. மனைவியும்வந்தாள்; காதல் தெரிந்தது மகனுக்கு; தாய் பாசத்தை அது மறைத்தது; தாயைவிட்டு விலகினான் மகன். மனைவியுடன் தனிக் குடித்தனம் போனான்.
அவன் மனைவி மிகவும் பேராசைகாரி; அதனால் அவனும் மனைவி ஆசைப்பட்டதெல்லாம் அவள் காலடியில் சமர்ப்பித்தான்; ஆனாலும் மனைவியின் ஆசை தீரவில்லை;
கடைசியில் அவள் தன் கணவனிடம் கணவனின் தாயின் இதயம் வேண்டும் என்று கேட்டாள்; அவன் தாமதிக்காமல் தாயைக் கொன்று அவள் இதயத்தை எடுத்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். அவன் கையிலிருந்த அந்த தாயின் இதயம் கீழே விழுந்தது. துடித்தது வலியினால் அல்ல. மகனின் காலில் கல் அடித்துவிட்டதாம்...அதனால்.
ஐயோ மகனே..வலிக்கிறதா என்று தாயின் இதயம் கதறியதாம்..
மகன் ஒதுக்கிய போதும் , மகன் தன்னை மறந்த போதும் கூட தாங்கிக் கொண்ட தாய் அவன் காலில் கல் அடிபட்டது கண்டவுடன் பதறி போனது; கண்ணீர் விட்டது.
இது வெறும் கதை தான்; ஆனால் ஒரு தாயின் பாசம் எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக சொல்லப்பட்டது.
தான் துன்புற்றாலும் தன் பிள்ளைகளின் நலனுக்காகத் தாயனவள் தன் உயிரையும் கொடுப்பாள் என்பது உலகமே ஒப்புக் கொண்ட விசயம்.
அத்தைகைய தாய்மார்களை மரியாதை செய்யும் முகமாக மே மாதத்தின் 2ம்
ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தன் உடம்பில் எம்மை சுமந்து, தன் உடலைக் கிழித்து எம்மை வெளியே கொடுத்து, தன் இரத்தத்தை பாலாக்கி எமக்கு உணவளித்த தேவதைக்கு இந்த ஒரு நாளாவது நாம் சேவை செய்யதால் என்ன? சேவித்தால் என்ன?'
தாயை மதிக்காதவனை கடவுள் மன்னிக்கமாட்டார்.!
அன்புடன்
சுவாதி.
ஒரு திடீர் நேர்முகம்
"என்னைத் தெரியவில்லையா. ரொம்ப வேடிக்கை தான்"
"ஓஹோ.. அவ்வளவு பெரிய ஆளா நீ ?"
"சரி. உனக்கு புரிகிற மாதிரி சொல்கிறேன். யாரையாவது காதலிக்கிறாயா? "
" ஏய். ய்.. அது என் சொந்த சோகம். அதைப்பற்றி உனக்கென்ன ?"
"முட்டாளே... உன் காதலின் வெற்றி என் கையில் இருக்கிறது"
(சற்று பயத்துடன் ) " நீ என்ன கடவுளா? "
"கிட்டத்தட்ட..
அடுத்த நொடி உன் அம்மாவிடம் பேச வேண்டுமா..
காதலியிடம் கதைக்க வேண்டுமா
கண்களில் காதல் வழிய சிரிக்கின்ற உன் காதலியின் உருவத்தை மறுபடி மறுபடி
பார்க்க வேண்டுமா
கவிதை என்கிற பெயரில் நீ கிறுக்குவதை அவளுக்கு அனுப்ப வேண்டுமா
கடிகாரத்தில் போல காலம் காட்ட வேண்டுமா
இன்று தேதி என்ன தெரியுமா
உன்னை நீயே புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமா
உனக்குப் பிடித்த 'தமிழ்ச்செல்வி' பாடலை இப்போதே கேட்க வேண்டுமா
எல்லாம் செய்து காட்டுவேன்"
"ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது"
"இதிலென்ன ஆச்சர்யம். சினிமா, தொலைக்காட்சி எல்லாம் காட்டுவேன்"
"நீ தனி ஆளா ?"
"பெரிய கூட்டமே இருக்கிறோம், உலகில் நாங்கள் இல்லாத இடமே இல்லை. உன்
பாக்கெட்டில் கூட என் போல் ஒருவன் இருப்பான்"
" ஓ..நீ..கைபேசியா !!! "
"புரிந்து கொள் முட்டாளே...உலகெங்கும் நீக்கமற நிறைந்து நினைத்த
நேரத்தில் எதுவும் செய்கிறவர்கள் நாங்கள். நீ படித்த தமிழையெல்லாம்
பயன்படுத்தி கொஞ்சம் காதலையும் சேர்த்து ஒரு குறுந்தகவல் தயார் செய்.
உடனே உன் காதலியிடம் சேர்க்கிறேன். வாழ்க உன் காதல். இனிமேலாவது என்னைகும்பிடு. வளம் பெறுவாய். வரட்டுமா ?"
--ராஜன்(சுந்தர்)
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
ஆண்டவனால் அவனுடைய பிரதிநிதியாக பூமிக்கு அனுப்பி வைக்கப் பட்ட தேவதை!
எத்தனையோ இனங்கள் , மொழிகள் , மதங்கள், நாடுகள் ஏன் பலவிதமான ஜீவராசிகளாய் வேறுபட்டாலும் அம்மா என்ற ஆத்மார்த்த உறவிலும் தாய்மை என்ற மாசற்ற உணர்விலும் பேதமையே இல்லை!
அத்தகைய புனிதமான ஆத்மாக்கள் அனைவரின் காலடிகளிலும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுவாதி!!இது முன்பே எழுதியதுதான்.
ஆனாலும் இங்கே பொருத்தமாக இருக்கும்னு போட்டேனுங்க...
உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!
தமிழுக்கும் அமுதென்று பேர்!
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
--
- பாவேந்தர் பாரதிதாசன்
மானிட சக்தி -பாரதிதாசன்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!
'மானிடம்' என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட)
மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்தவரைக்கும்
மானுடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிட மென்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! (மானிட)
மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீ பார்! - வாழ்வின்
வல்லம 'மானிடத் தன்மை' என்றேதேர். (மானிட)
தமிழ் பிரவாகத்திற்கு... ஆசிகள்
தமிழ்மொழி வாழ்த்து
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
கென் கவிதைகள்
வாழ்வு எவ்வாறு போகிறதென?
பதில் கூற தொண்டைக்குழிக்குள்
அமிலம் தோய்கிறது வார்த்தைகளின் மேல்
வெடித்துக்கொல்லும் வாதங்களின் வலி
நன்கறிந்தவன் நான்.
வார்த்தைகளைக் கொன்றபடி மெளனங்களை
பிரசவிக்கிறேன் புன்னகையேந்தி,
மீண்டும் முயல்கிறாய் என் மெளனத்தைக்
கொல்வதற்காய்...
சூன்யம் புடைசூழ வெறித்தப்பார்வைகளுடன்
புன்னகை வெற்றிக் கொள்கிறது...
பாரதியின் தமிழ் பாட்டு
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
தமிழ் இலக்கியங்களைத் தேடித்தந்த வள்ளல் உ.வே.சா

தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரத்தில் சங்கீத வித்வானாகிய திருவேங்கட சுப்பையருக்கும் திருமதி சரசுவதி அம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றினார் உ.வே.சா. சரசுவதி அம்மாளின் அருந்தவப் புதல்வர் என்பதால் கலைமகளின் கடாட்சம் நிறையவே இவருக்குக் கிடைத்து தமிழார்வம் இயற்கையாகவே இளமை முதற்கொண்டே அமைந்திருந்தது. திருவா வடுதுறை ஆதினத்தில் பெருங் கவிஞராகத் திகழ்ந்த மகாவித்துவான் திருமிகு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தம் 15 ஆம் வயதில் மாணவராகச் சேர்ந்து தமிழ் இலக்கண நுட்பங்களையும் அக்கால இலக்கியங்களையும் கசடறக் கற்றவர்.
உ.வே.சா அவர்கள் சிவபக்தியில் திளைத்தவர். ஆனால் அவரிடம் மத வேறுபாடில்லை! ஜைன மத நூலான சீவகசிந்தாமணியே உ.வே.சா.வின் பதிப்பில் முதல் அரும்பாகும். தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டு என்னும் உண்மையை எனக்கு முதலில் வெளிப்படுத்தியது சிந்தாமணி நூலே என்கிறார் சாமிநாதய்யர். சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கி வந்தன. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, ஜைன சமயம் பற்றிக் கூறும் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. ஆயினும் புறச் சமயமான ஜைனத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் சிந்தாமணி நூல் பதிப்பின் மூலம் உ.வே.சா.தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஓலைச் சுவடிகளைத் தேடி நடந்தும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்தவர் தமிழ்த்தாத்தா. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு பொக்கிஷங்களைத் தமிழ் உலகிற்கு அவர் தேடித் தந்திருக்கிறார் என்றால் அப்பணிக்கு ஈடு இணை ஏது?
திருநெல்வேலி மேலரதவீதியில் உள்ள கவிராஜ ஈஸ்வர மூர்த்தி பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அது பிள்ளைவாளின் பரம்பரை வீடு. புத்தக அறையை உ.வே.சாவுக்குத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் அவர் உடம்பு சிலிர்த்ததாம்! ""தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ?'' என்று எண்ணி மனது குதூகலித்ததாம். புழுதி இல்லாமல் ஒழுங்காகச் சுவடிகள் அடுக்கி வைத்திருந்த முறையைக் கண்டதும் தமிழ்த் தெய்வத்தின் கோவில் என்று எண்ணி சாஷ்டாங்கமாக (மெய்பட வணங்குதல்) நமஸ்கரித்தேன் என்கிறார் தமிழ்தாத்தா.
ஈஸ்வரமூர்த்தி பிள்ளை போன்று சிலர் சேர்த்து வைத்திருந்த சுவடிகளைத் தேடித் தேடிப் படி எடுத்து தமிழ் அன்னைக்குப் புதிய பூச்சரம் கட்டியவர் உ.வே.சா.
சுவடி என்றால் என்ன? என்று கேட்கும் இளைஞர்கள் இன்று பலர் இருப்பர். அந்தக் காலத்தில் அச்சு முறை இல்லை. எனவே பனை ஓலையைச் சுத்தம் செய்து அழகாக வெட்டி அதில் எழுத்தாணி கொண்டு எழுதி ஓரத்தில் சிறிதாய் ஓட்டையிட்டு ஒன்றோடு ஒன்றாகக் கட்டி வைத்திருப்பார்கள். இந்த ஓலைச் சுவடிகளில்தான் தமிழின் பல அற்புத இலக்கியங்கள் இருந்தன. உ.வே.சாவின் உழைப்பினால்தான் ஓலைச் சுவடியில் இருந்த பத்துப்பாட்டு வெளி வந்தது. எட்டுத் தொகையினுள் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன புத்துயிர் பெற்றன. ஐம்பெருங் காப்பியங்களும் நம் கைகளில் தவழ்கின்றன. அதற்கு மூல முதற்காரணமே உ.வே.சா.தான்.
உ.வே.சா அவர்களிடம் இருந்து சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கரிய செயலைச் செய்த அந்த மகான் என்றுமே தன்னுடைய பெருமையைப் பேசிக் கொண்டதில்லை. யார் மனதையும் புண்படுத்தி அவர் பேசியதில்லை. யாரைப் பார்த்தாலும் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் ஒருமையில் விளித்து அழைக்க மாட்டார். நீர் & என்றே சொல் மரியாதை கொடுத்துப் பேசுவார்கள். தள்ளாத வயதிலும் தம் வேலையைத் தாமே செய்வாரேயன்றி பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டார்.
உ.வே.சா. அவர்களுடைய சுயசரிதம் வரவேண்டும் என்பதில் கல்கி அவர்கள் பிடிவாதமாக இருந்தார். திருவல்லிக்கேணி வீட்டில் டி.கே.சியுடன் உ.வே.சா அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ""உங்களுடைய சுயசரிதம் என்பது தமிழகத்தின் எண்பது ஆண்டு கால வரலாறு! எனவே நீங்கள் அவசியம் சுயசரிதம் எழுத வேண்டும். நீங்கள் எழுதாவிட்டால் நீங்கள் கண்டு பிடித்தவைகளை எல்லாம் தாங்கள் கண்டு பிடித்தவை என்று பின்னாளில் பலர் சொல்லக் கூடும். இங்கே தமிழ் என்ற மொழிக்காகக் கூக்குரல் இடுபவர்கள் உங்கள் தொண்டின் ரகசியத்தைத் தெரிந்த பின்னராவது அடக்கி வாசிப்பார்கள்'' என்றாராம் கல்கி கிருஷ்ணமூர்த்தி.தமிழ்ப் பண்டிதர் வாகீச கலாநிதி கி.வா.ஜ, சாமிநாதய்யரின் புதல்வர்கள் கல்யாணசுந்தரம் ஆகியோரும் கல்கியுடன் சுயசரிதம் எழுதும்படி கேட்க, கடைசியில் ஒப்புக் கொண்டார் உ.வே.சா. ஆயினும் முழுவதுமாக அவரால் எழுதமுடியவில்லை. அவர் காலஞ்சென்ற பிறகு உ.வே.சாவின் தலைமை மாணாக்கர், குருவை தெய்வம் என்று கருதிய கி.வா.ஜ அவர்கள்தான் உ.வே.சாவின் சரித்திர நூலைப் பூர்த்தி செய்தார்கள்.
தமிழர்களின் சதை, ரத்தம், நரம்பு, எலும்பு இவைகளைச் சூடாக்கிய புலவர் ஒருவர் உண்டு என்றால் அவர் மகாகவி பாரதியார். பல தமிழ் வார மாத இதழ்களை நடத்தியவர். சக்ரவர்த்தினி என்னும் இதழில் பாரதி இப்படி எழுதுகிறார்... ""பலவகைத் தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேஷமுடையதென்று மேலோர் சொல்வார்கள். அழிந்து போன ஆலயங்களை நெடுங்காலமாக நின்று போன அன்ன சத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளிப்போர், வறண்டு மண்ணேறிப் போய்க்கிடக்கும் தடாகங்களை மறுபடி வெட்டி நலம் புரிவோர் என்னும் பலவகையாரினும், மங்கி மறைந்துபோய்க் கிடக்கும் புராணப் பெருங்காவியங்களைப் பெருமுயற்சி செய்து திரும்ப உலகத்துக்கு அளிக்கும் பெரியோர்கள் புண்ணியத்திற் குறைந்தவர்களல்லர். மேலும், புகழ் நிலைக்குந் தன்மையில் மற்றெல்லோரைக் காட்டிலும் இவரே சிறந்தவராவார்.
பிரம்மஸ்ரீ உ.வே.சாமிநாத ஐயர் மேற்கூறப்பட்ட பெருந் தருமத்தை நன்கு புரிந்தவர். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு முதலிய தமிழ் நூல்களை இன்று நம்மவர் கற்றுக் களிப்பது சாமிநாத ஐயருடைய கருணை மிகுதியாலல்லவோ? இவருக்கு கவர்மெண்டார் ""மகா மகோ பாத்தியாய''ப் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது மிகவும் பொருத்தமுடைய விஷயமே. இன்னும் நெடுங்காலம் இம் மகா மகோபாத்தியாயர் சீரும் சிறப்பும் பெற்று தமிழ் உலகத்தாருக்கு இனியன புரிந்து வாழவேண்டுமென்பதே எமது விருப்பம்'' பாரதியின் இந்தச் சுந்தர வரிகளைத் தன் மனதில் சுமந்து கொண்டு 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வரை தொடர்ந்து தமிழ்ப்பணி செய்து திருக்கழுக்குன்றத்தில் இறைவன் திருவடியை அடைந்தார்கள்.
திருவாசகம், திருக்குறள், நாலடியார் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு.ஜி.யு. போப் அவர்களுக்கு உ.வே.சாவின் பதிப்பு வேலைகள் தான் மொழி பெயர்ப்புக்குத் தூண்டுதலாக அமைந்தன. உ.வே.சாவிடமிருந்து புறநானூற்றைப் பெற்றுக் கொண்ட ஜி.யு. போப் வந்தனம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். ""உங்களின் உயர்ந்த பதிப்பான சிந்தாமணி என்னிடம் இருக்கிறது. இதனைப் பற்றி என்னுடைய நாலடியார் பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். பண்டிதர்களாகிய எங்களுக்கு நீங்கள் தான் இரக்கம் காட்ட வேண்டும். புறநானூற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளப் புதிய முயற்சிகளைச் செய்யவேண்டும். புறநாட்டினனாகிய எனது மடமையைப் பார்த்து ஒரு கால் நகைக்கலாம். தமிழை உலகத்திலுள்ள தாய் பாஷைகளில் ஒன்றாக உயர்த்துவதின் நிமித்தம், ஏதாவது கொஞ்சம் தொண்டு செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். ஒவ்வொரு மூச்சிலும் தமிழையே தரிசித்துப் பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தந்த உங்களிடம் உள்ள நூல்களைக் கொடுத்து எனக்கு உதவிட வேண்டும். உங்களின் உயர்ந்த சேவையில் என் மனம் லயிக்கிறது. பெருந்தேவனாராற் செய்யப்பட்ட முதற்பாட்டு நன்றாக இருக்கிறது. ஆனால் மாணிக்கவாசகர் பாட்டைப் போலிருக்கிறதே! அது சரியா?'' உண்மையுள்ள ஜி.யு. போப்.
இப்படி ஒரு கடிதம் வந்ததும் உ.வே.சா போப்பின் தமிழ் உணர்வைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனாராம். பெருந்தேவனாரின் காலம் மாணிக்கவாசகரின் காலம், இருவரின் பாடல்களின் அழகு இவைகளைப் பற்றி போப்புக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார் ஐயர். தனக்கு வரும் கடிதங்களுக்கு உடன் பதில் எழுதித் தெளிய வைக்கும் நல்ல பழக்கம் ஐயரிடம் உண்டு என்கிறார் கி.வா.ஜ அவர்கள். உ.வே.சா அவர்களுக்கு தமிழ்த் தாத்தா என்னும் பட்டத்தைக் கொடுத்தார் கல்கி. அந்தப் பட்டம் சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.
Friday, June 8, 2007
உயர்வு செய்வோம்!
(தமிழ் பிரவாகத்துக்கு என் முதல் கவிதை தமிழோடு துவங்க விரும்பி இதனை
இங்கே இடுகின்றேன்!)
* தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
*உண்மையும், நன்மையும்
உயர்ந்திடச் செய்வோம்!
பொய்மையும், தீமையும்
அழிந்திடச்செய்வோம்!
• கயைமையும், வஞ்சமும்
களைந்திடச்செய்வோம்!
வலிமையில் நெஞ்சினை
உயர்ந்திடச்செய்வோம்!
• வறுமையும், பஞ்சமும்
ஒழிந்திடச்செய்வோம்!
செழுமையில் உலகம்
மகிழ்ந்திடச் செய்வோம்!
திருக்குறள்
இங்கு திருக்குறள் அதன் அர்த்தங்கள் , விளக்கங்கள், குறள்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறலாம்.
புதிய குறளலை!
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல நவ நாகரீகமும், நவீன விஞ்ஞானமும் வளரச்சியடைந்த இந்தக் காலத்துக்குக் கூடப் பொருந்தக்கூடியதாக இருக்கும் அரிய நூல் என்று சொல்வார்கள். உண்மை தான். திருக்குறளில் சொல்லப்படாத செய்தி்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது எத்தனை தூரம் உண்மை என்பதை ஆராய்வதே இவ்விழையின் நோக்கம்.
அத்துடன் எமது அங்கத்தினர்களில் சிலர் ஏன் திருக்குறளில் பிற் சேர்க்கை எதுவும் இணைக்கப்படக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்? சேர்க்கலாமா கூடாதா என்பதை யார் தீர்மானிப்பது? அதையும் தமிழறிந்த வல்லுனர்களும் வாசகர்களும் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புதிய குறள்களை உருவாக்கலாம். திருக்குறளில் இல்லாத செய்திகள் என்று யாராவது ஒரு புது விஷயத்தை அறிந்தால் இங்கே எங்களுடன் பகிரலாம். புதிய குறள்களை எழுத விரும்புபவர்களும் இங்கே எழுதலாம். பார்கலாம்... வாசகர்களும் தமிழ் விரும்பிகளும் அதை எப்படி வரவேற்கிறார்கள் என்று...
அம்மா - கதை சொல்லலாமா?
அம்மா என்ற உறவைப் பற்றி எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அவளுடைய கருணையும், கரிசனமும் , தியாகமும் வேறு எந்த உறவிடமும் பெறமுடியாதது. அத்தகைய அம்மாவைப் பற்றின கதைகளை இவ் இழையில் எழுதலாம் என்று நினைக்கின்றோம். உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒரு அம்மாவைப் பற்றிய அல்லது உங்களுடைய அம்மாவை பற்றிய உண்மைக் கதையாலவோ அல்லது சின்ன வயதில் கேள்விப்பட்ட அம்மாக் கதைகளோ எதுவாயினும் அல்லது உங்கள் கற்பனையில் வரும் கதையோ எதுவாயினும், எழுதலாம்.
அன்னையர் தினமான இன்று அதை ஒரு முயற்சியாக தொடங்குவதில் மகிழ்சியுமடைகின்றோம். உங்கள் திறமையைக் காட்டுங்களேன்....!
பட்டிமன்றக் கருத்தலை
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியை அழுத்தி அங்கே பதில் பொத்தானை உபயோகித்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி!