Sunday, June 17, 2007

யோக வாழ்க்கை -2 - இரா. ஆனந்தன்

2. வாழ்க வளமுடன்.

தான், சமுதாயம், இயற்கை என்ற மூன்றின் இணைப்பில்
நடைபெறுவதே வாழ்க்கை. ஒருவர் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமுதாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பற்றித்
தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றோடு ஒத்து இணைந்து வாழும்போது, வாழ்க்கை
செம்மை பெறும். வெற்றி பெறும்; மகிழ்ச்சி கிட்டும். ஒருவர் அற வாழ்க்கை
வாழ வேண்டும். அற வாழ்க்கை என்பது ஒழுக்கம் கடைபிடித்து வாழ்தலாகும்.
ஒழுக்கம் என்பது தனக்கோ. பிறருக்கோ, உடலுக்கோ, மனத்திற்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, எண்ணம், சொல், செயலால், தீங்கு நேராமல் வாழ்வது ஆகும்.
இதைத்தான் வேதாத்திரிய யோக வாழ்க்கைக் கல்வி அளிக்கிறது.

ஓதி உணர்தல், உணர்ந்து ஓதுதல் எனக் கல்வி அறிவின் பயன் இரு வகைப்படும்.
மற்றவர் கற்றுக் கொடுத்து ஒருவர் தெரிந்து கொள்ளுதல் ஓதி உணர்தல் ஆகும்.
தானே உணர்ந்து பிறர்க்கு வழி காட்டுதல் உணர்ந்து ஓதுதல் ஆகும். உணர்ந்து ஓதுவதே உள்ளுணர்வுக் கல்வி ஆகும். விவேகானந்தர் கூறுவதும் இந்த
உள்ளுணர்வுக் கல்வியேயாகும். ஒருவர் பிறருக்கு மொழி மூலம் உணர்த்தி ஒருசெய்தியைச் சொல்லும்போது அல்லது தத்துவத்தைப் போதிக்கும் போது அதனைக்கல்வி (Tution ) என்று சொல்லுவார்கள். இதே கல்வி வான்காந்தத்தின் மூலம் அகத்துணர்வாகக் கிடைத்ததென்றால் அதனை உள்ளுணர்வு (Intuition )என்பார்கள். பொதுவாக, வெளியே வாய் மூலம் கற்றுக் கொள்ளும் கல்வி சிறிய அளவிலேதான் அமையும். உள்ளுணர்வின் மூலம் பெறும் கல்வியோ பல மடங்கு உயர்ந்ததாக அமையும். எனவே அகத்தவம் செய்ய வேண்டும் அத்தகைய குண்டலினி யோகச் (தவத்தில் சிறந்த) சாதனையாளர்களுக்கு உள்ளுணர்வு ஆற்றல் (Intuition
Knowledge ) இயல்பாக உண்டாகும். இதனால் யார் யாரோ, எந்தெந்த இடத்திலோ சிந்தித்து, கண்டுபிடிக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் இவரிடம் உள்ளுணர்வாக வந்து சேரும்.

(வளரும்)

No comments: