Sunday, June 17, 2007

அம்மா - கதை சொல்லலாமா?-2

கதை 2

கடவுள் அண்ட சராசரங்கள் சகலதையும் படைத்த பின் தாவரங்களையும் மிருகங்களையும் படைத்தாராம். தன்னால் உருவாக்கப்பட்ட அண்ட சராசரங்களும்,பூமியும், இயற்கையும் வெறுமையாய் இருப்பதாக நினைத்தாராம். அவற்றுள் பூமியை ஜீவ ராசிகள் வாழக் கூடிய இடமாய் தேர்வு செய்து அதில் உலவ பறவைகளையும், மிருகங்களையும் படைத்தாராம். ஆனால் திருப்தி அடையவில்லையாம் பரம்பொருள்.

இதை கவனித்த பார்வதி "இத்தனை விந்தையான ஜீவராசிகளைப் படைத்தும் ஏன் திருப்தி படமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம்.

"எத்தனையோ அழகழகான பறவைகளையும், அற்புதமான மிருகங்களையும் படைத்தாலும் இவற்றில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய படைப்பில் இன்னும் முழுமையான திருப்தி தரும் ஒரு படைப்பை எப்படியாவது ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கடவுள் சொன்னாராம்.

பரமசிவன் இப்படி சொன்னதும் பார்வதிக்கும் ஆர்வம் தாங்கவில்லையாம். அப்படி என்ன படைப்பை இவர் உருவாக்கப் போகிறார் பார்ப்போமே என்று இறைவனின் படைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாராம். கடைசியில் கடவுளும் மனிதனில் ஆணையும் பெண்ணையும் உருவாக்கினார்.

இந்தப் படைப்பில் அப்படி என்ன விசேடம் இருக்கிறது என்று பார்வதிக்கு ஒரே ஆவல்.

"மனிதப் படைப்பு மற்ற எல்லாவகை ஜீவ ராசிகளையும் விட ஒரு படி மேலாக எனக்குத் தெரிகிறது. இந்தப் பிறப்புக்கு மனம் என்ற ஒன்றைக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் இதற்கு மற்றைய படைப்புகளை விட மேலதிகமாக ஆறாவது அறிவையும் கொடுத்திருக்கிறேன். அதனால் இது எனக்கு முழுத் திருப்தியளிக்கும் என நினைக்கிறேன்" என்று சொன்னாராம் கடவுள்.

சிறிது காலம் சென்றதும் கடவுளுக்கு அந்தப்படைப்பிலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தாராம். உடனே தான் படைத்த மானிடப் படைப்பில் பெண் பிறப்புக்கு "தாய்மை" என்ற உணர்வை உருவாக்கினாராம்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு இவருடைய படைப்புகளின் சிறப்புகளை பூமிக்குப் போய் நேரேயே பார்க்க வேண்டுமென்ற ஆவால் வந்துவிட்டது. உடனே தம்பதி சமேதராய் பூலோகத்திற்கு வந்தனர்.

எல்லா ஜீவ ராசிகளையும் பார்வையிட்டுவிட்டு கடைசியில் மானிடப் பிறப்புகளைப் போய்ப் பார்த்து அவர்களின் குறைகளைக் கேட்டாராம். ஒவ்வொரு மானிடனும் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சுயநலமாகக் கேட்டுக் கொண்டுருந்தனராம். கடைசியில் தான் படைத்த தாய்மை கொண்ட பெண்ணிடம் போன போது அத் தாய் அழுது கொண்டு இருந்தாராளாம்.

"ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன குறை?"என்று கடவுள் கேட்டாராம்.

"எனக்கு இரண்டு கைகள் போதவில்லை. என் பிள்ளைகளுக்காக நான் வேலை செய்ய வேண்டும்;இன்னும் இரண்டு கைகள் மேலதிகமாக இருந்தால் நன்றாக இருக்குமே" என்று சொன்னாளாம். உடனே கடவுளும் அவளுடைய விருப்பப்படி இரண்டு கைகளை மேலதிகமாக வழங்கிவிட்டு வானுலகம் போய்விட்டாரம்.

சிறிது காலம் சென்றதும் திரும்பவும் பூலோகம் வந்த இறை தம்பதிகள் அந்தத் தாய் இப்போது எப்படி இருக்கிறாள் என்று பார்க்கப் போனார்களாம். அவள் அப்போதும் அழுதுகொண்டே இருந்தாளாம்.

"இப்போது ஏன் அழுகிறாய்?" -கடவுள்.

"என் பிள்ளைகளூக்காக ஓடி ஓடி உழைக்கிறேன். அதற்கு இந்த இரண்டு கால்களும் போதவில்லை. இன்னும் இரண்டு கால்கள் மேலதிகமாக இருந்தால் ந்ன்றாக இருந்திருக்குமே?" -தாய்.

"சரி அப்படியே ஆகட்டும்" என்று கூறிய கடவுள் அவள் விருப்பப்படி மேலதிகமாக இரண்டு கால்களை வழங்கிவிட்டு வானுலகம் போய்விட்டாராம்.

காலங்கள் உருண்டோடிப் போனது. திரும்பவும் நாலு கை நாலு கால் தாய் என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டுமென்று பார்வதி சொன்னாராம். சரி என்று கடவுளும் பார்வதியோடு பூலோகம் வந்தார். ந்ப்போது அந்தத் தாய் வயதானவளாய் , தலையெல்லாம் நரை விழுந்து, குழி விழுந்த கண்களோடு இருந்து அழுது கொண்டிருந்தாளாம்.

பார்வதிக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. "என்ன இது..இப்பொது இந்த தாயின் கண்ணீருக்கு யார் அல்லது எது காரணம்?" என்று இறைவனை வினாவினாராம்.

அதற்கு கடவுள் சொன்னார். "இம் முறை இந்தக் கண்ணீருக்கு நான் காரணமில்லை. அந்தக் கண்ணீருக்கு அவளுடைய பிள்ளைகள் தான் காரணம். வயதும், பருவமும் வரும் வரை அவர்களுக்கு தாயின் அரவணைப்பு தேவைப்பட்டது; தாயை கொண்டு எல்லாம் அனுபவித்தார்கள். இப்போது அவர்கள் தமது வாழ்கையை பார்க்க போய்விட்டார்கள்;தாயை மறந்து விட்டார்கள்..அதனால் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்" என்று சொன்னாராம்.

மனிதன் மிருகங்களிடமிருந்தும் மற்ற உயிரினங்களிடமிருந்தும் வேறுபட்டிருக்க வேண்டுமென்று அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொடுத்தும் அவனால் தாய்மையின் மகிமையை உணரத் தெரியவில்லையே என்று விசனப்பட்ட ஆண்டவன் இப்படிபட்ட சுயநல மானிடப்பிறப்புகளுக்கு ஏன் விசேடமான நாலு கை நாலு கால் தாயைக் கொடுக்க வேண்டும் என்று கருதி பழையபடி இரண்டு கைகள் , இரண்டு கால்களாக்கிவிட்டு வானுலகம் போனாராம்.

*மேலதிகக் குறிப்பு:

லாஜிக் எல்லம் இந்தக் கதையில் பார்க்க வேண்டாம். ஏன் இந்துக் கடவுள் மட்டுமா உலகைப் படைத்தார் என்று தர்கம் செய்ய வேண்டாம்; ஒரு வேளை இந்தக் கதையை இய்ற்றியவர் இந்துவாக இருக்கலாம். இது என்னுடைய கதை அல்ல..இன்று ஒரு தகவல் நிகழ்சியில் தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை இது.

அன்புடன்
சுவாதி.

No comments: