Sunday, June 17, 2007

புதிய கலித்தொகை - பாகம் 1 -ஸ்வாதி

அன்புடையீர்!

சரித்திரம் என்பது சந்ததிகளுக்காக சேர்க்கப்படுகின்ற உண்மைச் சங்கதிகளின் தொகுப்பு. கவிதை என்பது உவமைகளும் பொய்களும் கலந்த வார்த்தைச் சந்தங்களின் கோப்பு. ஆனால் நான் ஒரு சரித்திரத்தின் விசுவரூபத்தையும் அதன் விளக்கத்தையும் பொய் கலக்காமல் கவிதையில் தர முயன்றிருக்கிறேன். என்னுடைய முயற்சியின் பலனை அறிய உங்கள் முன் தமிழன்னையின் காலடிகளில் இவ்வாக்கத்தைச் சமர்பிக்கின்றேன்.

கபிலரும், மருதனிளநாகனாரும்,சோழன் நல்லுருத்திரனும், நல்லந்துவனாரும் பாடிய அரும் பெரும் கலித்தொகைக்கும் இந்த புதிய கலித்தொகைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை கலி என்ற வார்த்தைப் பதம் போர், சிறுமை, வஞ்சகம், கஷ்டம் , நீசம், நாசம், துன்பம் போன்ற அர்த்தங்களிலிருந்து போர், துன்பம்,சிறுமை ஆகிய அர்த்தத்தினடிப்படையில் தலைப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சொற்கோர்வைகள். என்னுடைய மனதின் உணர்வு வெளிப்பாடுகளை கொஞ்சம் இலக்கிய மெருகுக்குட்டி அழகு கொடுத்துள்ளேன். அவ்வளவு தான்!!!!

நோக்கம்

எந்த ஒரு படைப்பாளியும் தன்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஏதோ ஒரு காரணம் அல்லது ஒரு நோக்கம் வைத்திருப்பர். அங்ஙனமே என்னுடைய இந்த ஆக்கத்திற்கான நோக்கத்தினை நான் முதலில் விவரித்துவிட்டு மேலே தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

அங்கே ஓரினம் கொள்கைகளால் வேறுபட்டாலும் , தமிழீழம் என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காய் தவமிருப்பது உலகமெலாமுணரப் பட்ட வெள்ளிடை மலை வெளிச்சம். தமிழ் அல்லது தமிழன் என்றால் உடனே உலகத் தமிழர்களிடம் மட்டுமல்ல உலக நடப்பறிந்த அனைவரது நினைவிலுமே முதலில் வருவது கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடப்பிலிருக்கும் தமிழீழப் போராட்டம் என்றால் மிகையாகாது.

தமிழன் போகாத நாடு, வாழாத நாடு உலகப் படத்திலேயே இல்லை; ஆனால் தமிழனுக்கென்று சொந்தமாய் ஒரு தனி நாடு உலகத்தில் இல்லை; ஜன நாயக அடிப்படையில் கிடைக்க வேண்டிய முறையான உரிமைகள் மறுதலிக்கப்பட்டவர்களுக்கும், பெரும் பான்மையினத்தின் மேலாதிக்கமும், எதேச்சாதிகாரமும், இன துவேஷ வெறியும் கொடுமையான முறையில் பிரயோக்கிக்கப்பட்டதில் மிகக் கொடுரமான முறையில் பாதிப்படைந்தவர்களும் ,அனுபவித்தவர்களூம் தான் த்னி நாட்டின் முக்கியத்துவம் அறிந்து வைத்திருந்தனர். இதில் ஈழத் தமிழர்கள் முதன்மை பெற்றவர்கள்.

தமக்கென்று ஒரு தனி நாடு தமிழீழமாக மலர வேண்டும் என்ற உறுதியான விருப்பங்கள் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழீழத்தை நானும் ஆதரிக்கின்றேன். தமிழீழத்தின் புதிய விடியலின் முதல் சூரியனைப் பார்க்கும் வரையாவது இருக்க வேண்டுமென்ற பிர்ராத்தனைகள் எனக்குள்ளும் இருக்கின்றன.ஆனால் எல்லோரையும் போல் கரிசலில் கனரகம் ஏந்துமளவுக்கு தைரியம் இல்லாத கோழை நான். என்னிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் என்னுடைய எழுத்து மட்டும் தான்.

இந்த எழுத்து தமிழீழத்தின் எதிரிகளைச் சாடும்; தமிழீழத்துக்காக மரணிப்பவர்களை பூஜிக்கும்; தமிழீழப் போராட்டத்தில் பல் வேறு வகையில் சிதைந்து போன ஆத்மாக்களை வணங்கும். ஆக இது ஒரு தனி நபர் துதியோ அல்லது வசை மாரியோ அல்ல.

ஒரு வகையில் இது அங்கே ஈழத்தில் ஆயுதமேந்திய போரில் மரணங்களை முத்தமிட்ட மாவீரர்களுக்கு மரியாதை செய்யும் என்னுடைய சமர்ப்பணம்; தமிழீழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்து தமிழீழத்திற்காக உயிர் நீத்த அத்தனை ஆத்மாக்களுக்கும் அவர்களுடைய கல்லறைகளில் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஆயிரக் கணக்கான மலர்களில் ஒன்று ..அவர்களுக்கான என்னுடைய வணக்கத்தின் சிறு வடிவம் மட்டுமே!

இவ்வாக்கத்தைரு ஈழத் தமிழன் குயில் ஒன்றிடம் தமிழீழம் பற்றி சிலாகிப்பதாக அமைத்திருக்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரை பகுத்தறிவில்லாத அஃறிணையும், சரியான முறையில் தனது பகுத்தறிவைப் ப்யன்படுத்தாத உயர்திணை மானுடமும் சமமானவை. அதனால் தான் இந்தப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வை பகுத்தறிவில்லாத ஒரு பறவையிடம் விளக்குவதாய் இவ்வாக்கத்தை உருவமைத்திருக்கின்றேன்.

பகுத்தறிவில்லாத அஃறிணையில் குயிலை விசேசமாக நான் தேர்வு செய்தற்கு சில காரணங்கள் உண்டு.

முதல் காரணம், அநேகமான எல்லா ஜீவ ராசிகளும் தமக்கென்று உறைவிடம் தேடுவதிலும், அடை காப்பதிலும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. ஆனால் குயில் அப்படியல்ல. தன்னுடைய பொறுப்புகளின் கனம் உணராது தன்னிச்சைப்படி தான்தோன்றித் தனமாய் காகக் கூடுகளில் முட்டையிடுகிறது; அடை காக்காமல் தனது தாய்மை பேணத் தவறியது.

ஆனால் குயில் முட்டைகளைத் தன் முட்டைகளாக நினைத்து அடைகாக்குகம் காகமானது குயில் குஞ்சு வளர்ந்து தன்னுடைய சந்ததியினரைப் போல் கரையத் தெரியாமல் வேற்று மொழியில் குயில் கூவும் போது தான் தன் குஞ்சுக்கும் குயில் குஞ்சுக்குமிடையில் அன்னியம் அறிந்து கொத்தி விரட்டும். இந்தத் தாக்குதலில் எத்தனை குயில் குஞ்சுகள் தப்புமோ எத்தனை குஞ்சுகள் செத்து மடியுமோ?

பொறுப்பில்லாத தாய்மையினால் ஏற்பட்டது தன் இந்த நிலமை. தனக்கென்றூ ஒரு சிறு கூடு கட்டத் தெரிந்தால் குயிலினம் இத்தகைய பரிதாப நிலைக்குகளுக்கு ஆளாகியிருக்காது.

இந்தக் குயிலைப் போல் பொறுப்பில்லாத மனிதர்கள் எங்கள் மானிட சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதாரணமாய் இங்கு குயிலைக் குறிப்பிட்டுள்ளேன்.

இரண்டாவது காரணம் , பாரதியார் முதற் கொண்டு இன்றைய சினிமாக் கவிஞர்கள் வரை குயிலைக் காதல் கவிதைகளில் மட்டுமே சம்மந்தப்படுதியிருக்கிறார்கள்.

அதே போல் இங்கே ஒரு மாற்றத்திற்காக புரட்சியிலும் அந்தக் குயிலை சம்மந்தப்படுத்துவோமேயென்ற எண்ணத்தில் குயிலுக்கு இன்னொரு அந்தர்ப்பம் கொடுத்துள்ளேன்.

என்னுடைய இவ்வாக்கம் யாருடைய மனதையும் நோகடிக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்திலோ நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. என்னுடைய தேசத்தையும் , எங்களின மக்களையும் , அவர்களது இன்னல்களையும் பார்த்து மனம் நொந்த நிலையில் எழுதப்பட்டது.

என் கரிசலுக்கான போராட்டத்தையும் அதைக் கொண்டு நடத்தும் போராளிகளையும் பற்றி விமர்சிக்கவோ அல்லது குறை நிறை சொல்லவோ போரரட்டச் சூழலுக்கு அப்பால் புலம்பெயர்ந்திரு ப்போருக்கும் சரி, எம்மெல்லைகளுக்கப்பால் எட்டி நின்று வேடிக்கை பார்ப்போருக்கும் சரி உரிமையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.

அவர்கள் அங்கே போராடுவது எதற்காக? யாருக்காக? அங்கே அவர்கள் தமது வாழ்கையை அல்லவா எம் ஒவ்வொருவருக்காகவும் பணயம் வைத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தலையெழுத்து எமக்காக உயிரை மாய்த்துக் கொள்ள?ஒரு மனிதனந்தான் வாழ விரும்பி, அதற்காக அத்தனை குறுக்கு வழிகளையும் கையாளும் இந்தக் காலத்தில், அங்கே அந்த வினாடியிலும் மரணத்தை எதிர் நோக்கிய சூழலில் தம்மை அர்ப்பணிக்க அவர்கள் என்ன முட்டாள்களா?எத்தனை பேர் நம்மில் எமக்கான சுதந்திரத்தைப் பற்றியும் இப்போராட்டத்தைப் பற்றியும் சரியாகப் புரிந்திருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு சுதந்திரத்திற்கான விழிப்புணர்வு இருக்கிறது? எத்தனை பேர் தினசரி செய்திகளாக அல்லாமல் தமது ஆயுளாகவும் , வாழ்கையாகவும் போரளிகளின் தியாகங்களையும் , தீர்க்கங்களையும் உணார்ந்திருக்கிறார்கள்?

இந்தக் கேள்விகள் தான் என்னை இந்த புதிய கலித்தொகையை எழுத வைத்தது.

சுதந்திரம் என்பதும் அதற்கான தீர்வு எடுப்பதும் எல்லோருக்கும் பொதுவான உரிமை. உலகத்தின் சகல சரித்திரங்களிலும் போராட்டத்தின் பின்பே சுதந்திரம் என்பது கிடைத்திருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திடமிருந்து பாரதமும் ஏனைய நாடுகளும் போராடித் தான் சுதந்திரம் பெற்றார்கள். அத்தனை நாட்டிலும் எத்தனை உயிர் இழப்புகள்? எத்தனை சித்திர வதைகள்? இந்திய மண்ணீல் மஹாத்மா காந்தி அஹிம்சை வழியில் போராட்டம் நடந்தியிருந்தாலும் கூட பஹவத் சிங்கும் , சுபாஷ் சந்திர போஸும் ஆயுதம் ஏந்திய பின்னால் தான் பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் மீது ஒரு பயம் தோன்றியது எனலாம். இந்தியாவிலும் மற்றய நாடுகளிலும் நடந்த அல்லது நடப்பில் இருக்கிற விடுதலைப் போராட்டங்களிற்கு எவ்வித தகுதிக் குறைபாடுகளோ அல்லது வித்தியாசங்களோ இல்லாத போராட்டம் தான் ஈழத்திலும் நடக்கின்றது.

ஈழத்துக் காந்தி எனப் போற்றப்ப்பட்ட தந்தை செல்வா போன்றோர் எங்களூரிலும் அஹிம்சை வழியில் போராடினார்கள். ஆனால் சிங்கள அரசு கண்டு கொள்ளவில்லை. உலகமே பார்த்துக் கொண்டிருக்க அஹிம்சை வழியில் ஒரு துளி நீராகாரம் கூட வாயில் தொடாமல் உண்ணாவிரதம் இருந்து அஹிம்சை வழியில் இறந்து போன திலீபனையும் மறந்துவிட முடியாது. நாங்களும் எங்கள் பிரதிநிதிகளை எமக்காக வாதாடவும் அரசியல் வழியில் போராடவும் பாராளுமன்றாங்களுக்கு அனுப்பினோம். என்ன பயன்? ஒவ்வொரு தேர்தலின் பின்னும் இனக் கலவரம் வெடித்து தமிழன் பலியாடுகளாய் துண்டங்களாய் வெட்டிப் போடப்பட்டது தானே கண்ட பலன்? ஆனால் எமக்காக மாவீரர்கள் உதித்த பின் தானே இன்று உலக அரங்கில் எமக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றன? ஆயுதமேந்திய படையெடுப்புகளில் தான் இன்று உலகமே ஈழத்தின் தமிழர்களின் பேரிழப்புகளை இனம் காணத் தொடங்கியுள்ளது.

ஆக என்னுடைய இவ்வாக்கம் தமீழீழப் போராட்டத்தை மரியாதை செலுத்தும் முகமாக தொகுக்கப்பட்டது. இதற்கான விமர்சனங்களையும், கருத்துக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்கிறேன்

நன்றி!

No comments: