Sunday, June 17, 2007

தமிழ் இலக்கியங்களைத் தேடித்தந்த வள்ளல் உ.வே.சா

The image
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த் தாய்க்குச் செய்திருக்கும் தொண்டுகளைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ்த் தாத்தா, தரணி போற்றும் நல்லவராக மெல்லத் தமிழை வாழ வைத்த வள்ளலாக விளங்கியவர். பலர் பெயரால் மட்டும் கேள்விப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியங் களைக் கண்டுபிடித்து அச்சேற்றித் திருத்தமான உயர்ந்த பதிப்புகளாக வெளியிட்டவர். அவர் வெளிக் கொண்டு வந்த பல நூல்களில் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு என்னும் பாடல்கள் முக்கியமானவை.

தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரத்தில் சங்கீத வித்வானாகிய திருவேங்கட சுப்பையருக்கும் திருமதி சரசுவதி அம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றினார் உ.வே.சா. சரசுவதி அம்மாளின் அருந்தவப் புதல்வர் என்பதால் கலைமகளின் கடாட்சம் நிறையவே இவருக்குக் கிடைத்து தமிழார்வம் இயற்கையாகவே இளமை முதற்கொண்டே அமைந்திருந்தது. திருவா வடுதுறை ஆதினத்தில் பெருங் கவிஞராகத் திகழ்ந்த மகாவித்துவான் திருமிகு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தம் 15 ஆம் வயதில் மாணவராகச் சேர்ந்து தமிழ் இலக்கண நுட்பங்களையும் அக்கால இலக்கியங்களையும் கசடறக் கற்றவர்.

உ.வே.சா அவர்கள் சிவபக்தியில் திளைத்தவர். ஆனால் அவரிடம் மத வேறுபாடில்லை! ஜைன மத நூலான சீவகசிந்தாமணியே உ.வே.சா.வின் பதிப்பில் முதல் அரும்பாகும். தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டு என்னும் உண்மையை எனக்கு முதலில் வெளிப்படுத்தியது சிந்தாமணி நூலே என்கிறார் சாமிநாதய்யர். சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கி வந்தன. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, ஜைன சமயம் பற்றிக் கூறும் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. ஆயினும் புறச் சமயமான ஜைனத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் சிந்தாமணி நூல் பதிப்பின் மூலம் உ.வே.சா.தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஓலைச் சுவடிகளைத் தேடி நடந்தும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்தவர் தமிழ்த்தாத்தா. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு பொக்கிஷங்களைத் தமிழ் உலகிற்கு அவர் தேடித் தந்திருக்கிறார் என்றால் அப்பணிக்கு ஈடு இணை ஏது?

திருநெல்வேலி மேலரதவீதியில் உள்ள கவிராஜ ஈஸ்வர மூர்த்தி பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அது பிள்ளைவாளின் பரம்பரை வீடு. புத்தக அறையை உ.வே.சாவுக்குத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் அவர் உடம்பு சிலிர்த்ததாம்! ""தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ?'' என்று எண்ணி மனது குதூகலித்ததாம். புழுதி இல்லாமல் ஒழுங்காகச் சுவடிகள் அடுக்கி வைத்திருந்த முறையைக் கண்டதும் தமிழ்த் தெய்வத்தின் கோவில் என்று எண்ணி சாஷ்டாங்கமாக (மெய்பட வணங்குதல்) நமஸ்கரித்தேன் என்கிறார் தமிழ்தாத்தா.

ஈஸ்வரமூர்த்தி பிள்ளை போன்று சிலர் சேர்த்து வைத்திருந்த சுவடிகளைத் தேடித் தேடிப் படி எடுத்து தமிழ் அன்னைக்குப் புதிய பூச்சரம் கட்டியவர் உ.வே.சா.

சுவடி என்றால் என்ன? என்று கேட்கும் இளைஞர்கள் இன்று பலர் இருப்பர். அந்தக் காலத்தில் அச்சு முறை இல்லை. எனவே பனை ஓலையைச் சுத்தம் செய்து அழகாக வெட்டி அதில் எழுத்தாணி கொண்டு எழுதி ஓரத்தில் சிறிதாய் ஓட்டையிட்டு ஒன்றோடு ஒன்றாகக் கட்டி வைத்திருப்பார்கள். இந்த ஓலைச் சுவடிகளில்தான் தமிழின் பல அற்புத இலக்கியங்கள் இருந்தன. உ.வே.சாவின் உழைப்பினால்தான் ஓலைச் சுவடியில் இருந்த பத்துப்பாட்டு வெளி வந்தது. எட்டுத் தொகையினுள் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன புத்துயிர் பெற்றன. ஐம்பெருங் காப்பியங்களும் நம் கைகளில் தவழ்கின்றன. அதற்கு மூல முதற்காரணமே உ.வே.சா.தான்.

உ.வே.சா அவர்களிடம் இருந்து சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கரிய செயலைச் செய்த அந்த மகான் என்றுமே தன்னுடைய பெருமையைப் பேசிக் கொண்டதில்லை. யார் மனதையும் புண்படுத்தி அவர் பேசியதில்லை. யாரைப் பார்த்தாலும் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் ஒருமையில் விளித்து அழைக்க மாட்டார். நீர் & என்றே சொல் மரியாதை கொடுத்துப் பேசுவார்கள். தள்ளாத வயதிலும் தம் வேலையைத் தாமே செய்வாரேயன்றி பிறருக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டார்.

உ.வே.சா. அவர்களுடைய சுயசரிதம் வரவேண்டும் என்பதில் கல்கி அவர்கள் பிடிவாதமாக இருந்தார். திருவல்லிக்கேணி வீட்டில் டி.கே.சியுடன் உ.வே.சா அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ""உங்களுடைய சுயசரிதம் என்பது தமிழகத்தின் எண்பது ஆண்டு கால வரலாறு! எனவே நீங்கள் அவசியம் சுயசரிதம் எழுத வேண்டும். நீங்கள் எழுதாவிட்டால் நீங்கள் கண்டு பிடித்தவைகளை எல்லாம் தாங்கள் கண்டு பிடித்தவை என்று பின்னாளில் பலர் சொல்லக் கூடும். இங்கே தமிழ் என்ற மொழிக்காகக் கூக்குரல் இடுபவர்கள் உங்கள் தொண்டின் ரகசியத்தைத் தெரிந்த பின்னராவது அடக்கி வாசிப்பார்கள்'' என்றாராம் கல்கி கிருஷ்ணமூர்த்தி.தமிழ்ப் பண்டிதர் வாகீச கலாநிதி கி.வா.ஜ, சாமிநாதய்யரின் புதல்வர்கள் கல்யாணசுந்தரம் ஆகியோரும் கல்கியுடன் சுயசரிதம் எழுதும்படி கேட்க, கடைசியில் ஒப்புக் கொண்டார் உ.வே.சா. ஆயினும் முழுவதுமாக அவரால் எழுதமுடியவில்லை. அவர் காலஞ்சென்ற பிறகு உ.வே.சாவின் தலைமை மாணாக்கர், குருவை தெய்வம் என்று கருதிய கி.வா.ஜ அவர்கள்தான் உ.வே.சாவின் சரித்திர நூலைப் பூர்த்தி செய்தார்கள்.

தமிழர்களின் சதை, ரத்தம், நரம்பு, எலும்பு இவைகளைச் சூடாக்கிய புலவர் ஒருவர் உண்டு என்றால் அவர் மகாகவி பாரதியார். பல தமிழ் வார மாத இதழ்களை நடத்தியவர். சக்ரவர்த்தினி என்னும் இதழில் பாரதி இப்படி எழுதுகிறார்... ""பலவகைத் தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேஷமுடையதென்று மேலோர் சொல்வார்கள். அழிந்து போன ஆலயங்களை நெடுங்காலமாக நின்று போன அன்ன சத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளிப்போர், வறண்டு மண்ணேறிப் போய்க்கிடக்கும் தடாகங்களை மறுபடி வெட்டி நலம் புரிவோர் என்னும் பலவகையாரினும், மங்கி மறைந்துபோய்க் கிடக்கும் புராணப் பெருங்காவியங்களைப் பெருமுயற்சி செய்து திரும்ப உலகத்துக்கு அளிக்கும் பெரியோர்கள் புண்ணியத்திற் குறைந்தவர்களல்லர். மேலும், புகழ் நிலைக்குந் தன்மையில் மற்றெல்லோரைக் காட்டிலும் இவரே சிறந்தவராவார்.

பிரம்மஸ்ரீ உ.வே.சாமிநாத ஐயர் மேற்கூறப்பட்ட பெருந் தருமத்தை நன்கு புரிந்தவர். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு முதலிய தமிழ் நூல்களை இன்று நம்மவர் கற்றுக் களிப்பது சாமிநாத ஐயருடைய கருணை மிகுதியாலல்லவோ? இவருக்கு கவர்மெண்டார் ""மகா மகோ பாத்தியாய''ப் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது மிகவும் பொருத்தமுடைய விஷயமே. இன்னும் நெடுங்காலம் இம் மகா மகோபாத்தியாயர் சீரும் சிறப்பும் பெற்று தமிழ் உலகத்தாருக்கு இனியன புரிந்து வாழவேண்டுமென்பதே எமது விருப்பம்'' பாரதியின் இந்தச் சுந்தர வரிகளைத் தன் மனதில் சுமந்து கொண்டு 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வரை தொடர்ந்து தமிழ்ப்பணி செய்து திருக்கழுக்குன்றத்தில் இறைவன் திருவடியை அடைந்தார்கள்.

திருவாசகம், திருக்குறள், நாலடியார் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு.ஜி.யு. போப் அவர்களுக்கு உ.வே.சாவின் பதிப்பு வேலைகள் தான் மொழி பெயர்ப்புக்குத் தூண்டுதலாக அமைந்தன. உ.வே.சாவிடமிருந்து புறநானூற்றைப் பெற்றுக் கொண்ட ஜி.யு. போப் வந்தனம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். ""உங்களின் உயர்ந்த பதிப்பான சிந்தாமணி என்னிடம் இருக்கிறது. இதனைப் பற்றி என்னுடைய நாலடியார் பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். பண்டிதர்களாகிய எங்களுக்கு நீங்கள் தான் இரக்கம் காட்ட வேண்டும். புறநானூற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளப் புதிய முயற்சிகளைச் செய்யவேண்டும். புறநாட்டினனாகிய எனது மடமையைப் பார்த்து ஒரு கால் நகைக்கலாம். தமிழை உலகத்திலுள்ள தாய் பாஷைகளில் ஒன்றாக உயர்த்துவதின் நிமித்தம், ஏதாவது கொஞ்சம் தொண்டு செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். ஒவ்வொரு மூச்சிலும் தமிழையே தரிசித்துப் பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தந்த உங்களிடம் உள்ள நூல்களைக் கொடுத்து எனக்கு உதவிட வேண்டும். உங்களின் உயர்ந்த சேவையில் என் மனம் லயிக்கிறது. பெருந்தேவனாராற் செய்யப்பட்ட முதற்பாட்டு நன்றாக இருக்கிறது. ஆனால் மாணிக்கவாசகர் பாட்டைப் போலிருக்கிறதே! அது சரியா?'' உண்மையுள்ள ஜி.யு. போப்.

இப்படி ஒரு கடிதம் வந்ததும் உ.வே.சா போப்பின் தமிழ் உணர்வைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனாராம். பெருந்தேவனாரின் காலம் மாணிக்கவாசகரின் காலம், இருவரின் பாடல்களின் அழகு இவைகளைப் பற்றி போப்புக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார் ஐயர். தனக்கு வரும் கடிதங்களுக்கு உடன் பதில் எழுதித் தெளிய வைக்கும் நல்ல பழக்கம் ஐயரிடம் உண்டு என்கிறார் கி.வா.ஜ அவர்கள். உ.வே.சா அவர்களுக்கு தமிழ்த் தாத்தா என்னும் பட்டத்தைக் கொடுத்தார் கல்கி. அந்தப் பட்டம் சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.

No comments: