Sunday, June 17, 2007

யோக வாழ்க்கை - 5 - இரா. ஆனந்தன்

5. வாழ்க வளமுடன். இந்த தொடர்க் கட்டுரை வேதாத்திரி மகரிஷியின்
மனவளக்கலையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படுகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி
பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கை அச்சம் தரும் அளவுக்கு
உல்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை
மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில்
குழப்பமும் சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் வாழ்வில் அச்சமே
சூழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் சிந்தனை ஆற்றல் உடையவர்கள், சமுதாய நல
நோக்கம் உள்ள தலைவர்கள், ஆன்மீக வழி நின்று வாழெது வரும் நல்லோர்கள்,
மனித வாழ்க்கை நிலையை நினைத்தும், எதிர்கால உறுதியின்மையை நினைத்தும்
வருந்தியும், சிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த உலகக் குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை
நெறியும்தான் தனிமனிதனை, மனித குலத்தைக் காக வல்லது. உயிரின்
மதிப்புணர்ந்து, மனத்தின் மேன்மையுணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்துத்
தன் செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க பயிற்சியும், பழக்கமும்
ஆன்மீக அறிவு விளக்கத்தால்தான் கிட்ட முடியும். ஆன்மீகம் எனும்போது
குறுகிய நிலையில் தனிப்பட்ட மதம் என்றோ, உருவ வழிபாடு என்றோ கருத
வேண்டாம். அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மற்ற உயிர்களையும் மதித்து
நடக்கும் எண்ணத்தை தன் மனத்தில் வைத்து நடைமுறைப் படுத்தி வாழும்
மாமனிதனாக வாழும் நிலை பற்றியது.
ஆறறிவு பெற்றும் மனிதன் உடல் வரையில் எல்லைகட்டி இருப்பதனாலே புலன்
உணர்ச்சிகளுக்குட்பட்டு வாழ்க்கியைல் தனக்கும், பிறருக்கும் துன்பத்தைத்
தேடிக்கொள்கிறான். உயிரின் மதிப்பை உணரும், அறிவின் பெருமையுணரும் ஆன்மீக
வாழ்வு ஒன்றே மனிதனை நல்ல மனிதனாக, ஒழுக்கமும், கடமையும், ஈகையும்
உணர்ழ்து வாழ்பவனாகச் செய்யும். ஆறாவது அறிவின் பயன் மனம், உயிர்,
மெய்(Truth) என்னும் மூன்று மறைபொருட்களை உணர்வதற்கேயாம்.ஆரோக்கியமான
உடல், அமைதியான மனம் இவை இரண்டின் துணைகொண்டு சாதகன் உயிரின் தன்மையை
அறிந்து கொள்ள முற்படும்போது, எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் தன்னகத்தே
கொண்டுள்ள இயற்கையானது தனது ரகசியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அவனுக்கு
விளக்கத் துவங்குகிறது. பிறந்து வந்ததன் நோக்கம் தெளிவாகி, வாழ்க்கயின்
குறிக்கோள் விளங்கிவிட்டதாலே விழிப்புநிலை அடைந்த சாதகன் பிறவியின்
பெருநோக்கம் மறவாது தன் செயல்கள் அனைத்தையுமொழுங்கு செய்துகொள்ளப்
பயிற்சி பெற்றுவிடுகிறான். "நான் யார்?" என்ற மேதகு கேள்விக்கு விடை
கண்டு, அந்த விடையின் வெளிச்சத்திலே மனத்தூய்மை, வினைத்தூய்மை பெற்றுப்
பிறருக்கு வழிகாட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிறான். இந்தப்
பயிற்சியை ஏற்பதற்கான தகுதி உலகத்தில் பிறந்துள்ள அனைத்து மக்களுக்கும்
உள்ளது என்ற உண்மையை அறிவிப்பதே மனவளக்கலை என்று வேதாத்திரி மகரிஷி
தெரிவித்துள்ளார். இதிலே மிகச் சுலபமான உடற் பயிற்சிகள், தியானம்,
காயகல்பப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள் அடங்கும். இதன் நான்கு செயல்
முறைகளாக அகத்தவம் (Meditation), அகத்தாய்வு (Introspection),
குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection). இதன் மூன்று
வளர்நிலைகளாக மனவிரிவு பெறுதல் (Expansion of the mind), இயற்கை விதி
அறிதல் (Understanding the Law of Nature), எண்ணம், சொல், செயலில்
விழிப்புடன் இருத்தல் (Maintaining awareness in thought, word and
deed). இப்பயிற்சிகளின் வெற்றியாக நுண்மான் நுழை புலன் (Perspicacity),
ஏற்புத் திறன் (Receptivity), தக அமைதல் (Adaptability), பெருந்தன்மை
(Magnanimity), ஆக்கத்திறன் (Creativity), இசைவு (Harmony), நிறைவு
(Satisfaction ), மகிழ்வு (Happiness), மெய்யறிவு (Wisdom), அமைதி
(Peace) உண்டாகிறது.(வளரும்)

No comments: